மேலும்

62 அரசியல் கைதிகளை இரண்டு கட்டங்களை விடுவிக்க உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு

Prisonerசிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளில் 62 பேரை இரண்டு கட்டங்களாக பிணையில் விடுவிப்பதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆராயும் உயர்மட்டக் கூட்டம் நேற்று மாலை நடந்தது.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அமைச்சர்கள், விஜேதாச ராஜபக்ச, டி.எம். சுவாமிநாதன், மனோ கணேசன், மங்கள சமரவீர மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்,தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டியது அவசியம். அரசியல் கைதிகள் விடயத்தில் இனியும் இழுத்தடிப்பு மேற்கொள்ளக்கூடாது. இம்மாதம் 7ஆம் நாளுக்குள் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் கொடுத்த  உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.

எனினும், அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிப்பது கடினமானது. அதனால் கட்டம் கட்டமாக அவர்களுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என்று அரச தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

தெகிவளை குண்டுத் தாக்குதல் உட்பட பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவது கடினம் என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இந்தக் கூட்டத்தில், அரசியல் கைதிகளில் 32 பேரை முதற்கட்டமாக பிணையில் விடுதலை செய்வது என்றும் இரண்டாம் கட்டமாக 30 பேரை பிணையில் விடுவிப்பது என்றும் ஏனையவர்கள்  தொடர்பாக அமைச்சரவை உபகுழுவை அமைத்து ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், குற்றவாளிகளாக நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் விடயத்தில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையையும்எடுக்க முடியாது என்றும், சிறிலங்கா அதிபரே இந்த விடயத்தில் முடிவு செய்ய வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *