மேலும்

மகிந்தவின் நிகழ்ச்சிநிரலில் இருந்து விலகாத பரணகம ஆணைக்குழு

maxwell_paranagama_commissionமுன்னைய அரசாங்கத்தின் காலத்தில், நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கையையும், உடலகம ஆணைக்குழுவின் அறிக்கையையும், நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது அரசாங்கம்.

உடலகம ஆணைக்குழுவின் அறிக்கை, மகிந்த ராஜபக்சவின் காலத்திலேயே கையளிக்கப்பட்டது. இதுவரை அது வெளியிடப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

பரணகம ஆணைக்குழுவின் மீது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்றும், அதனைக் கலைத்து விட்டு, புதியதொரு அமைப்பிடம் அதன் பணிகள் ஒப்படைக்கப்படும் என்று நம்புவதாகவும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

அதையடுத்து, இந்த ஆணைக்குழு கலைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கு பரணகம ஆணைக்குழு தவறியுள்ளதாகவும், இந்த ஆணைக்குழு விரைவில் கலைக்கப்படவுள்ளதாகவும், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவும் கூட தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் தான், பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது.

சர்வதேச சமூகத்தினால், நம்பகத்தன்மையற்றதாக வர்ணிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் இப்போது வெளியிட்டதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

பரணகம ஆணைக்குழு தனது அறிக்கையில், செய்துள்ள பரிந்துரைகளை அரசியல் ரீதியாகத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்காகவே, அரசாங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

அதாவது, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில், வெளிநாட்டு நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும், உள்ளக விசாரணை நடத்துவதானால் கூட, வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் பரணகம ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இதன் மூலமே நம்பகத்தன்மையை ஏற்படுத்த முடியும் என்று அந்த ஆணைக்குழு கூறியிருக்கிறது.

வெளிநாட்டு நிபுணர்களை விசாரணையில் ஈடுபடுத்துவதென்ற, பரணகம ஆணைக்குழுவின் பரிந்துரையானது, ஏற்கனவே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ள கலப்பு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு ஒப்பானது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட, தீர்மானத்திலும், கூட வெளிப்படையான கலப்பு நீதிமன்ற விசாரணை என்று கூறப்படாது போனாலும் கிட்டத்தட்ட அதனை ஒத்த விசாரணைப் பொறிமுறைக்கே இலங்கை அரசாங்கம் இணங்கியிருந்தது.

தாம் உள்நாட்டு விசாரணை ஒன்றையே நடத்தவுள்ளதாக அரசாங்கம் கூறிவந்தாலும்,  வெளிநாட்டவர்களின் பங்களிப்புடன் கூடியதொரு விசாரணைக்கே அரசாங்கம் தயாராகியும் வருகிறது.

ஆனால் அது எத்தகைய வடிவத்திலானது என்பது மட்டும் தான் இன்னமும் தீர்மானிக்கப்படாத விடயமாக இருக்கிறது.

அரசாங்கம் கலப்பு விசாரணையை முன்னெடுக்கத் தயாராகி வருவதாகவும், வெளிநாட்டவர்களுக்கு விசாரணையில் இடமளித்து நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாகவும், மகிந்த ராஜபக்சவின் ஆதரவு அணியினர் குரல் எழுப்பி வருகின்றனர்.

அவர்களின் வாயை அடைப்பதற்கு, மகிந்த ராஜபக்ச நியமித்த பரணகம ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரின் தான், வெளிநாட்டவர்களை உள்ளடக்கிய விசாரணைக்குத் தயாராகிறோம் என்று நியாயப்படுத்துவதற்காகவே இந்த அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டிருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் பல குழப்பங்கள் இருக்கின்றன. அதேவேளை முக்கியமான சில பரிந்துரைகளும் இருக்கின்றன.

பரணகம ஆணைக்குழு ஏற்கனவே மக்களின் நம்பிக்கையைப் பெறத் தவறியிருக்கிறது. அத்து்ன“ சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையையும் அது பெறவில்லை.

இது இந்த ஆணைக்குழுவின் முக்கியமானதொரு பலவீனம்.

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து அரசாங்கத்தையும், இராணுவத்தையும் பாதுகாக்கவே, இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டதாக, ஆரம்பத்தில் இருந்தே ஒரு பரவலான கருத்து இருந்து வருகிறது.

ஆனால், அந்த கருத்தை இந்த ஆணைக்குழுவின் அறிக்கையும் பரிந்துரைகளும், கேள்விக்குட்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதற்குக் காரணம், முன்னைய அரசாங்கத்தினால் போர்க்குற்றங்கள் நிகழவேயில்லை என்று வாதிடப்பட்ட போதிலும், பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை அதனை நிராகரித்துள்ளது.

அரசபடையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்றும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரைத்திருக்கிறது.

இந்த விசாரணைகள், வெளிநாட்டவர்களின் பங்களிப்புடன், அல்லது கண்காணிப்புடன் சுதந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது முக்கியமானதொரு பரிந்துரை, மட்டுமன்றி, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை விடவும் காரமானதாகவும் சிலரால் கூறப்படுகிறது.

அடுத்து, சனல்-4 வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப்படத்தை, முன்னைய அரசாங்கம் போலியானது, புனையப்பட்டது என்று நிராகரித்திருந்தது.

ஆனால், அதற்கு மாறாக, இந்த வீடியோவில் உள்ள சில விடயங்கள் நாடகப்பாங்கானதாக இருந்தாலும், இது உண்மையானதே என்றும் கூறியுள்ளது பரணகம ஆணைக்குழு.

இதுபற்றி நீதிபதி ஒருவரினால் தனியாக, சுதந்திரமான முறையில் விசாரணை செய்யப்பட வேண்டியது, அவசியம் என்றும் இந்த ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இவை மட்டுமன்றி, முன்னைய அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்ட, அரசபடையினர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தும், வெள்ளைக்கொடி விவகாரம், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டமை அல்லது காணாமற்போனமை, படையினரால் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டவர்கள் காணாமற்போனவை, பாலச்சந்திரன் படுகொலை உள்ளிட்ட விவகாரங்களிலும் இந்த ஆணைக்குழுவின் நிலைப்பாடு, நேர்மறையானதாகவே இருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரிக்க முடியாது என்றும், இவை குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டிருக்கிறது.

அதாவது, அரசபடையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை, இதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பான மூத்த படை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த ஆணைக்குழு வேறு சில சர்ச்சைக்குரிய விடயங்களையும் முன்வைத்திருக்கிறது.

அதில், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில், கூறப்பட்டிருந்ததைப் போல, 40 ஆயிரம் பொதுமக்கள் இறுதிப்போரில் படுகொலை செய்யப்படவில்லை என்றும், குறைந்தளவானோரே கொல்லப்பட்டதாகவும், இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னைய அரசாங்கம், போரில் ஒரு பொதுமகன் கூடக் கொல்லப்படவில்லை என்று முதலில் கூறியது, பின்னர், இருதரப்பு மோதலுக்குள் அகப்பட்டு சிலர் மரணமாகியிருக்கலாம் என்று கூறியது.

ஆனால், இந்த ஆணைக்குழு எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதை தெளிவாக கூறாத போதிலும், போரில் பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை ஏற்றுக்கொள்கிறது.

அதேவேளை, போரின் இறுதி 12 மணித்தியாலங்களில், பெருமளலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், அதற்கு விடுதலைப் புலிகளே பெரும்பாலும் காரணம் என்றும் ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றிய அறிக்கையை, யாழ்ப்பாணத்திலுள்ள மதிப்புமிக்க அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றே தமக்கு தந்ததாக பொறுப்பை அதன் தலையில் கட்டிவிட முனைந்திருக்கிறது ஆணைக்குழு.

போரின் இறுதி 12 மணித்தியாலங்களில், பொதுமக்களுக்கு புலிகளால் அதிகளவு இழப்புகள் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ள நியாயப்பாடுகள் பொருத்தமற்றதாகவே இருக்கின்றன.

பணயக்கைதிகளாக பொதுமக்களை வைத்திருந்தது, தப்பிச் செல்ல முயன்றபோது சுட்டுக்கொன்றது போன்ற குற்றச்சாட்டுகள் புலிகள் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், போர் மே 18ஆம் திகதி முடிவுக்கு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே, பொதுமக்களை தமது கட்டுப்பாட்டில் இருந்த சிறுநிலப்பரப்பில் இருந்து வெளியேற புலிகள் அனுமதித்திருந்தனர்.

எனவே, அதற்குப் பிந்திய காலகட்டத்தில்,- இறுதி 12 மணிநேரத்தில் பணயக்கைதிகளாக பொதுமக்கள் பயன்படுத்தப்பட்டனர் என்பதும், தப்பிச்செல்ல முயன்றவர்கள் கொல்லப்பட்டனர் என்பதும் நியாயமான காரணங்களான இல்லை.

இத்தகைய சம்பவங்கள், முன்னர் நடந்திருக்கலாம்.

அதைவிட, போரின் இறுதி 12 மணி நேரத்தில், புலிகளின் முக்கிய உறுப்பினர்கள், தலைவர்கள் தப்பிச் செல்வதற்கான தாக்குதலே நடந்தது.

அது பெரும்பாலும் நந்திக்கடலிலும், முள்ளிவாய்க்காலுக்கு வடக்கிலும் தான் இடம்பெற்றது.

ஆனால், பொதுமக்களோ அப்போது, முல்லைத்தீவுக்கு வடக்கில் உள்ள வட்டுவாகல் பாலம் நோக்கி நகரத் தொடங்கியிருந்தனர்.

எனவே, இறுதி 12 மணித்தியாலங்களில் புலிகளால் தான் அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது நம்பத்தகுந்த ஒரு விடயமாக இல்லை.

வடக்கு, கிழக்கு முழுவதும் அமர்வுகளை நடத்தி தகவல்களை திரட்டிய ஆணைக்குழு, தனியே போரின் இறுதி 12 மணித்தியாலங்களில், அதிகளவு பொதுமக்கள் புலிகளாலேயே கொல்லப்பட்டனர் என்ற, ஒரு அரசசார்பற்ற நிறுவனத்தின் அறிக்கையை வைத்துக் கொண்டு எவ்வாறு தீர்மானம் எடுத்தது என்பது தெரியவில்லை.

இந்தக் குற்றச்சாட்டை சுதந்திரமாக ஆராய்ந்து உறுதிப்படுத்தியிருந்தால், ஆணைக்குழு அதன் கண்டறிவாகவே சமர்ப்பித்திருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல், ஒரு அரசசார்பற்ற நிறுவனம் அறிக்கை தந்ததாக குறிப்பிட்டுள்ளதானது ஆணைக்குழுவின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அதேவேளை, போரின் இறுதி 12 மணிநேரத்தில் அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டிருப்பினும், அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் சடலங்களுக்கு என்னவாயிற்று என்று கூறவில்லை.

ஏனென்றால், இறுதி 12 மணிநேரத்தில் பொதுமக்களைக் கொலை செய்து, அந்தப் பழியை அரசபடையினர் மீது போட எத்தனித்திருந்தால் புலிகள் அந்தச் சடலங்களைப் புதைத்திருக்கவோ, எரித்திருக்கவோ மாட்டார்கள்.

இறுதி நேரத்தில் சடலங்களை எரிக்கவோ, புதைக்கவோ அவர்களுக்கு நேரம் கிடைத்திருக்கவும் மாட்டாது.

அதேவேளை, அரசபடைகள், முள்ளிவாய்க்காலைக் கைப்பற்றிய போது. நூற்றுக்கணக்கான புலிகளின் சடலங்களை மீட்டதாகவே கூறியிருந்தனதே தவிர, பொதுமக்களின் சடலங்களை மீட்டதாக கூறவில்லை.

இறுதிப் போரில் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்று நம்ப வைப்பதற்காக அரசாங்கம் அதனை அப்போது மறைத்திருந்தது.

அதேவேளை, பரணகம ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பல பொதுமக்கள், தாம் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் சடலங்களைக் கடந்து வந்ததாக கூறியிருந்தனர்.

அவ்வாறாயின், கொல்லப்பட்ட பொதுமக்களின் சடலங்களுக்கு நடந்தது என்ன என்று இந்த ஆணைக்குழு ஆராய முனையவில்லை.

போரின் இறுதிக்கட்டத்தில் அதிகளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த ஆணைக்குழு, அதற்கான பழியை இராணுவத்தின் மீது போட விரும்பவில்லை.

அதற்காகவே புலிகளின் மீது போட்டுத் தப்பிக்க முனைந்திருக்கிறது.

புலிகள், போர்க்குற்றங்களை இழைக்கவில்லை என்றோ, அவர்கள் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றோ நாம் வாதிடவில்லை.

புலிகளாலும், இறுதிக்கட்டப் போரில் பொதுமக்களுக்கு சில இழப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்றே பல சாட்சியங்கள் கூறப்பட்டுள்ளன.

ஆனால், இந்த விடயத்தில், ஆணைக்குழுவின் அறிக்கை பக்கசார்பான ஒன்றாகவே அமைந்திருக்கிறது.

அதுபோலவே, ஒட்டுமொத்த இராணுவமும் போர்க்குற்றங்களை இழைக்கவில்லை – திட்டமிட்ட போர்க்குற்றங்கள் அல்லது இனஅழிப்பு நடக்கவில்லை என்பதையும், இந்த ஆணைக்குழு வலியுறுத்தியிருக்கிறது.

இதுதான் இந்த அறிக்கையின் முக்கியமானதும் பிரதானமானதுமான விடயம்.

அதாவது அரசாங்கத்தையும், இராணுவத்தையும் காப்பாற்றுவதில் இந்த ஆணைக்குழு எவ்வளவு சிரத்தை கொண்டுள்ளது என்பதை இது வெளிப்படுத்துகிறது.

திட்டமிட்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும், புலிகளின் நடவடிக்கைகளாலேயே, சில தாக்குதல்களைப் படையினர் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் நிறுவ முனைகிறது பரணகம ஆணைக்குழு.

இதன் மூலம், அரசாங்கத்தின் மீதான, போருக்குத் தலைமை தாங்கிய அரசியல் தலைமை மீதான, ஒட்டுமொத்த இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்திருக்கிறது இந்த ஆணைக்குழு.

அதற்குப் பதிலாக, போர்க்குற்றங்களை ஒப்புக்கொண்டு, அவை தனிநபர்களின் குற்றங்களாக பதிவு செய்து, அவற்றுக்குப் பொறுப்பான களமுனை கட்டளை அதிகாரிகளை தண்டிக்கவும் பரிந்துரைத்திருக்கிறது.

ஒரு பக்கத்தில் சில காத்திரமான பரிந்துரைகளை இந்த ஆணைக்குழு முன்வைத்திருந்தாலும், ஒட்டுமொத்தத்தில், மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தையும், இராணுவத்தையும் காப்பாற்றுகின்ற- ஐ.நா நிபுணர்குழுவின் குற்றச்சாட்டை பொய் என்று நிராகரிக்கின்ற பிரதான நிகழ்ச்சி நிரலில் இருந்து, அது விலகிச் செல்லவில்லை என்பதே உண்மை.

– என்.கண்ணன்

வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *