மேலும்

சிறிலங்கா இராணுவம் மீது போர்க்குற்றம் சுமத்தவில்லையாம் – கூறுகிறார் பரணகம

ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம

ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம

தமது ஆணைக்குழு முன்வைத்த அறிக்கையில், சிறிலங்கா இராணுவத்தின் மீது போர்க்குற்றம் சுமத்தும் வகையில்  எந்த விடயங்களையும் முன்வைக்கவில்லை  என்று, காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர்  ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

“ஐ.நா விசாரணை அறிக்கையை விடவும் எமது அறிக்கை பாரதூரமானது என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் அத்தகைய பாரதூரமான எத்தகைய அறிக்கையையும் நாம் தயாரிக்கவில்லை.

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டவுடன் இறுதிப் போரில் காணாமல்போன பொதுமக்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய முன்னைய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட எமது ஆணைக்குழு, சரியான தகவல்களை சேகரித்து, மிகச்சரியான அறிக்கையையே தயாரித்துள்ளது.

இந்த அறிக்கையில், நான்காம்  கட்ட ஈழப்போரில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட குற்றச்செயல்கள் மற்றும் சிறிலங்கா இராணுவம் ஒருசில சந்தர்ப்பங்களில் மேற்கொண்டுள்ள குற்றங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வெள்ளைக்கொடி விவகாரம் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பாக சிறிலங்கா இராணுவத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதேபோல போரின்போது சிறிலங்கா இராணுவத்தினரால், மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடும் படுகொலைகளை வெளிப்படுத்தும் சனல்-4 காணொளிகள் மற்றும் தகவல்களையும் நிராகரித்துவிட முடியாது.

அவை தொடர்பிலும் ஒருசில இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட வேண்டும் என்பதை எமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

போரின் போது இராணுவத்தின் தரப்பில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவை தொடர்பில் சரியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவு தான் குறிப்பிட்டுள்ளோம்.

இந்த குற்றச்சாட்டுகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதற்கமைய சரியான வகையில் இரண்டு தரப்பின் குற்றச்சாட்டுகளையும் முழுமையாக ஆராய்ந்து உண்மைகளை கண்டறிய வேண்டும்.

அவ்வாறு விசாரணைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்படலாம். ஆகவே உண்மைகளை கண்டறிய விசாரணைகள் மிகமுக்கியமானது.

இந்த அறிக்கையில் பாதகமான அல்லது பாரதூரமான விடயங்கள் இல்லை. இதுதொடர்பான  அரசாங்கத்தின் கருத்தை நிராகரிக்கின்றேன்.

அவ்வாறான நாட்டுக்கு முரண்பாடான எந்தவித தன்மைகளையும் எமது அறிக்கையில் உள்ளடக்கவில்லை.

போரின்போது விடுதலைப்புலிகள் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதைப்போல இராணுவத்தினர் மீதும் ஒருசில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பதை குறிப்பிட்டுள்ளோம்.

ஆனால் இராணுவம் போர்க்குற்றங்களை மேற்கொண்டுள்ளது என்ற ஒட்டுமொத்த தீர்மானத்தை ஒரு சந்தர்ப்பதிலேனும் சுட்டிக்காட்டவில்லை.

பரணகம அறிக்கையில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லையா அல்லது தமிழ்த் தேசியக் கூடமைப்பிற்கு நம்பிக்கை இல்லையா என்ற கேள்வி உள்ளது.

காணாமல்போனோர் தொடர்பில் நாம் கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் ஆதாரங்களை தேட ஆரம்பித்த போதே தமிழ் மக்கள் எம்மை நம்பிவிட்டனர்.

ஆனால் அனைத்துலக தரப்பிடம் மாற்றுக்கருத்துகளை கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முரண்பாட்டுக் கருத்துகளை முன்வைத்தது. அவற்றை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திருப்திப்படுத்த நாம் செயற்பட முடியாது.  எமது கடமை உண்மைகளை கண்டறிவது மட்டுமேயாகும்.

அரசாங்கம் அதற்காகவே காணாமல்போன பொதுமக்களை கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவியது. அதேபோல் அரசியல் செயற்பாடுகளிலும் எம்மை இணைத்துக் கொள்ள முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *