மேலும்

சிறிலங்கா படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் உண்மையே – பரணகம ஆணைக்குழு அறிக்கை

ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம

ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம

சிறிலங்கா படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் உண்மையானதே என்று கூறியுள்ள, மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை, இதுதொடர்பாக மூத்த இராணுவத் தளபதிகள் குற்றவியல் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

2013ஆம் ஆண்டு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட, மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

178 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், 2009ஆம் ஆண்டு முடிவுற்ற, 37 ஆண்டுகாலப் போரில், அரசபடைகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள நம்பகமான குறற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அரசபடையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் உண்மையானவையே என்றும், அவை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மூத்த இராணுவத் தளபதிகளுக்கு எதிராக குற்றவியல் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சனல்-4 வெளியிட்ட  ‘போர் தவிர்ப்பு வலயம்- சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள போர்க்குற்ற காட்சிகள் உண்மையானவையே என்றும், அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பரணகம ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சனல்- 4 வெளியிட்ட காட்சியில் நாடகப்பாங்கான சில வசனங்கள் இடம்பெற்றிருந்தாலும், இதுகுறித்து  நீதிபதி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின்  சட்ட முறைமைக்குள், போர்க்குற்றங்கள் பிரிவு தனியானதாக இருக்க வேண்டும் என்றும், அது அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கேற்ப சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் பரணகம ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறையின் உயர்மட்ட உறுப்பினர்களான பா.நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் வெள்ளைக்கொடியுடன்  சரணடைய வந்த போது சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்தினால் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்ட பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பாக தனியான நீதி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் விசாரணைகள் நம்பகமானதாக இருக்காது என்றும், நடுநிலையான நீதிபதிகள் மூலம், சுதந்திரமான நீதிவிசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், பரணகம ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *