மேலும்

இடையறாத இலட்சிய தாகத்துடன் பயணித்த, நெஞ்சுரம்மிக்க தமிழினி – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

thamiliniஇடையறாத இலட்சிய தாகத்துடன் பயணித்த, நெஞ்சுரம்மிக்க தமிழினி அவர்களின் எண்ணமெல்லாம் தமிழ்மக்களின்  விடுதலைபற்றியும் தமிழ்ப்பெண்களின் உயர்ச்சிபற்றியதாகவுமே இருந்திருக்கின்றன.  அவரது எண்ணங்கள் ஈடேற இதய  சுத்தியோடு நாம் அனைவரும் உழைக்கவேண்டும்.

இவ்வாறு, விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மறைவு குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது.

“உணர்வும் அறிவும் ஆளுமையுங் கொண்ட ஒரு ஜீவன் எம்மை விட்டு ஏகிவிட்டது.

புற்றுநோய்த் தாக்கத்தினால் உயிர்துறந்த சகோதரி தமிழினி அவர்களின் அகால மரணம் தமிழ் மண்ணின் ஒரு  பேரிழப்பாகும்.

சகோதரி தமிழினி அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்டு  வந்தவர். அதன் காரணமாகப் போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுப் புனர்வாழ்வு பெற்றுத் திரும்பியவர்.

தமிழ் மக்களுக்கிடையே எழுச்சி பெற்ற விடுதலைப் போராட்டமானது இனத்துக்கான விடுதலைப் போராட்டம் என்ற மட்டத்துடன்  மட்டும் நின்று விடவில்லை. அது சமூக விடுதலை நோக்கியதாக, பெண்விடுதலையை நோக்கியதாகப் பல்பரிமாணம்மிக்க ஒரு  போராட்டமாகவே நடைபெற்றது.

தனித்துவமான பண்பாட்டுடன் கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகத்தின் போக்கில் பெண் அடக்குமுறை என்பது  காலாதிகாலமாக இருந்தே வந்திருக்கிறது.

அத்தகைய ஆணாதிக்கச் சமூகத்தில், பெண்களும் ஆண்களுக்குச் சமனான உரித்தைப்  பெற்றவர்கள் என்ற பாரதியின் புதுமைப்பெண் சிந்தனைக்கு விடுதலைப் போராட்டமானது செயல் வடிவம் கொடுத்திருந்தது  என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.

வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த பெண்கள் விடுதலைப் போராட்டத்தில் தம்மையும் இணைத்துக் கொண்டு வீரவீராங்கனைகளாக  வீரியம் பெற்றார்கள்.

எம் சமூகத்தில் தாய் தந்தையர்க்கும் பின்னர் கணவருக்கும் பின்னால் அடங்கி ஒடுங்கி,  நாணிக்கோணி வாழ்ந்த எமது பெண்கள் சமர்க்களத்தில் தீரத்துடன் போராடும்  வல்லமை பெற்றார்கள்.

சமூகக்  கட்டமைப்புகளைத் தலைமையேற்று நடாத்தும் வல்லமை பெற்றார்கள்.

அத்தகைய பெண் தலைமைத்துவத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக சகோதரி தமிழினி அவர்கள் விளங்கியிருக்கின்றார்.

போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்டபோதிலும் சகோதரி தமிழினி அவர்களின் இழப்புத் தொடர்பாக எமது  மக்கள் கொண்டிருக்கின்ற கவலையும் கரிசனையும் அந்தப் பெண் போராட்ட காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை முறையையும்  அவரிடத்தில் காணப்பட்ட தலைமைத்துவப் பண்பையும் பறைசாற்றுவனவாகவே அமைகின்றன.

சகோதரி தமிழினி அவர்கள் புனர்வாழ்வுச் சிறையில் இருந்த காலப்பகுதியில், 2010ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்  தேர்தல் நடைபெற்றது. அப்போது, தமிழினி அவர்களை அரசதரப்பில் இணைந்து தேர்தலில் போட்டியிடுமாறும்,  அவ்வாறு போட்டியிட்டால் அவருக்கு விடுதலையை வழங்குவதாகவும் அப்போதைய அரசாங்கம் தமிழினியுடன் பேசியதாகவும்,  அந்தப் பேரத்துக்கு சகோதரி தமிழினி அவர்கள் சோரம் போகவில்லை என்பதையும் அறிந்து பெருமைப்பட்டேன்.

இடையறாத இலட்சிய தாகத்துடன் பயணித்த, நெஞ்சுரம்மிக்க தமிழினி அவர்களின் எண்ணமெல்லாம் தமிழ்மக்களின்  விடுதலைபற்றியும் தமிழ்ப்பெண்களின் உயர்ச்சிபற்றியதாகவுமே இருந்திருக்கின்றன.

அவரது எண்ணங்கள் ஈடேற இதய  சுத்தியோடு நாம் அனைவரும் உழைக்கவேண்டும். இதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.

தமிழினி அவர்கள் ஒரு முன்னாள் போராளி என்ற நிலையில் தானும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடலாம் என்ற  நிலையிலும் தமிழினி அவர்களை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்ட அவரது கணவர் பாராட்டுக்குரியவர்.

அந்த முன்னுதாரண  புருசரினதுந் தமிழினி அவர்களின் குடும்பத்தினரதும்  ஆற்றொணாத் துயரில் நானும் பங்கு கொள்கின்றேன்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *