மேலும்

மன்னம்பிட்டி முகாமில் கொல்லப்பட்டு திருமலை கடலில் வீசப்பட்டார் பிரகீத் – விசாரணையில் தகவல்

Prageeth Ekneligodaகடத்தப்பட்டு காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொலை செய்யப்பட்டு, கடலில் வீசப்பட்டிருக்கலாம் என்று, இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கொல்லப்பட்டு, திருகோணமலைக் கடலில் வீசப்படுவதற்கு முன்னதாக, பிரகீத் எக்னெலிகொட மன்னம்பிட்டி பகுதியில் உள்ள சொறிவில பகுதியில் இருந்த முகாம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பிரகீத் எக்னெலிகொடவின் சடலம் முதலில் சொறிவில பகுதியிலேயே புதைக்கப்பட்டதாக, இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஒரு சந்தேகநபர், தகவல் வெளியிட்டுள்ளார்.

பின்னர், புதைகுழியில் இருந்த பிரகீத் எக்னெலிகொடவின் சடலம், மழை வெள்ளத்தினால், வெளியே மிதந்தபோது, அதனை அங்கிருந்து அகற்றி, திருகோணமலைக் கடலில் வீசியதாகவும், அந்த சந்தேக நபர் தகவல் வெளியிட்டுள்ளதாக, உயர்மட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எக்னெலிகொடவை 2010ஆம் ஆண்டு இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவரே கடத்தி வந்தனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்கள் இருவரும் தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக்காவலில் இருக்கின்றனர்.

அந்த இரண்டு புலனாய்வு அதிகாரிகளும், கருணா குழுவுடன் சேர்ந்த இயங்கிய முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களாவர்.

எக்னெலிகொட, மன்னம்பிட்டி பகுதியில் இருந்த இடைத்தங்கல் முகாம் ஒன்றில் வைத்து கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்த முகாம் கருணா மற்றும் பிள்ளையானின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அந்தக் காலகட்டத்தில், பிள்ளையானே அந்த முகாமின் பொறுப்பாளராகச் செயற்பட்டிருந்தார்.

அதேவேளை, முன்னைய அரசாங்கத்தில் பாதுகாப்பு பிரிவின் உயர் மட்டத்தில் இருந்து ஒருவரின் நேரடியான உத்தரவின் பேரிலேயே பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டிருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *