மேலும்

ஜெனிவா தீர்மானம் இராஜதந்திர வெற்றியல்ல – என்கிறார் மகிந்த

Mahinda-Rajapaksa-ஐ.நாமனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது, சிறிலங்காவுக்குக் கிடைத்த இராஜதந்திர வெற்றி என சிலர் குறிப்பிடும் கருத்துடன் தன்னால் உடன்பட முடியாது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

ஜெனிவா தீர்மானம் தமது அரசாங்கத்தின் மிகப் பெரிய இராஜதந்திர வெற்றி என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வெளியிட்ட கருத்துக்குப் பதில் கொடுக்கும் வகையில், மகிந்த ராஜபக்ச அறிககை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர், “இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் கருத்து வெளியிட்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போது மனித உரிமைகள் பேரவையின் ஒழுங்குப் பத்திரத்திலிருந்து இலங்கையை நீக்க முடிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரைப் பாதுகாப்பதே சிறிலங்கா அரசாங்கத்தின் முதலாவது பொறுப்பாகும். நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் 6, 8ஆவது பரிந்துரைகள் அந்தப் பொறுப்புக்கு நேரடியாக எதிரானதாகும்.

தீர்மானத்தின் 6ஆவது பந்தியில், போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, சிறிலங்காவின் நீதித்துறை வரம்புக்குட்பட்ட பொறிமுறை ஒன்றை வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்களின் பங்களிப்புடன் உருவாக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாது போனாலும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவோரை, ஆயுதப்படைகளில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் நீக்குவதற்கு, 8ஆவது செயற்பாட்டுப் பந்தி வலீயுறுத்துகிறது.

அத்துடன், 4ஆவது பந்தியில், நீதி விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நிதியுதவிகள் பெறுவதற்கு அனுமதிக்கிறது. இது வெளிநாட்டு சக்திகளினால் சிறிலங்காவின் பொறிமுறை நிதியளிக்கப்பட்டு பேணப்படுவதற்கு வழியமைக்கும்.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு வெள்ளையடிக்க இன்னும் முயற்சிக்கப்படுகிறது என்பதை நான் கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சிறிலங்கா, ஜெனிவாவில் பெற்றுக்கொண்ட மிகப்பெரிய மானியம் இது என்றும், மகிந்த ராஜபக்‌ச அரசு ஆட்சியில் இருந்திருந்தால், நிலைமை இதைவிட மோசமானதாகியிருக்கும் என்றும், பொருளாதாரத் தடைவிதிப்பதற்கு இடமிருந்தது என்றும் சிலர் கூறியதை எம்மால் கேட்கமுடிந்தது.

ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவின் கடலுணவு உற்பத்திகளுக்குத் தடைவிதித்தமை அரசியல் மற்றும் மனித உரிமைகள் விடயங்களால் அல்ல; இந்து சமுத்திரத்தின் கடலுணவு ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக சட்டவிரோதமாக நடவடிக்கை மேற்கொண்டதாலேயே ஆகும்.

மேலும், ஜி.எஸ்.பி. பிளஸ் என்பது அரசில் நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகையே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *