மேலும்

ஐ.நா விசாரணை அறிக்கையின் கண்டறிவுகளும் – பரிந்துரைகளும் (முழுமையாக)

UN-reportசிறிலங்காவில் 2001ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் வகை பிரிக்கப்பட்டு, சுருக்கமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

1.சட்டவிரோத படுகொலைகள்

சிறிலங்கா இராணுவமும் துணை இராணுவக்குழுக்களும் தமிழ் பொதுமக்களையும், பாதுகாக்கப்பட்ட நபர்களையும் சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்தமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. தமிழ் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மனிதாபிமான தொண்டர்கள் உள்ளிட்டவர்கள் குறிப்பாக இலக்கு வைக்கப்பட்டதுடன், சாதாரண பொதுமக்களும் கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

பாதுகாப்புப் படையினர் செறிந்திருக்கும் சோதனைச் சாவடிகள், முகாம்களுக்கு அருகாமையிலும், பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான கொலைகள் இடம்பெற்றிருந்தமை கவனிக்கப்பட வேண்டியது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டால் அவை போர்க்குற்றங்களாகஅல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாகவே கருதப்படும்.

தமிழீழ விடுதலைப் புலிகளும் சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் ஐ.நாமனித உரிமைப் பேரவைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்கள், முரண்பட்ட அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள், சந்தேகத்திற்குரிய உளவாளிகள் உள்ளிட்டவர்களை விடுதலைப் புலிகள் படுகொலை செய்துள்ளனர். புத்திஜீவிகள், துணை இராணுவக்குழு உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் அதிகளவு பொதுமக்களே கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டால் அவை போர்க்குற்றங்களாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாகவே கருதப்படும்.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் மற்றும் அதனை அண்டிய நாள்களில் அடையாளம் காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் அடையாளம் காணப்படாதவர்களும் சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்தவர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சில விடயங்கள் பற்றி உறுதி செய்ய வேண்டியிருப்பினும், வீடியோ மற்றும் ஏனைய ஆதாரங்களின் அடிப்படையில் இந்த விடயங்கள் கூறப்பட்டுள்ளன. கைதுசெய்பய்பட்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டமைக்கு போதியளவு ஆதாரங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டால் அவை போர்க்குற்றங்களாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாகவே கருதப்படும்.

2. சுதந்திரத்தை ஒடுக்குதல் குறித்த உரிமை மீறல்கள்

சிறிலங்கா இரர்ணுவத்தினர் சட்டவிரோத கைதுகள், தடுத்து வைத்தல்கள் போன்றவற்றை மேற்கொண்டுள்ளனர். துணை இராணுவக் குழுக்கள் கடத்தல்களில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறான அநேக சந்தர்ப்பங்கள் பலவந்த கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத படுகொலைகளாக பதிவாகியுள்ளன.

சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் கைதுகள் தொடர்பான சம்பவங்களுடன் தொடர்புடைய தரப்பினர் வெள்ளை வான்களைப் பயன்படுத்தி இவற்றை மேற்கொண்டுள்ளனர். இந்த நபர்களின் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு படையினர் தடை ஏற்படுத்தவில்லை. இவ்வாறான நடவடிக்கைகள் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களுக்கு புறம்பானது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியனவற்றை பயன்படுத்தி சட்டவிரோத கைதுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன, இந்த இரண்டு சட்டங்களும் 2011ம் ஆண்டு வரையில் முழுமையாக நடைமுறையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சட்டவிரோத கைதுகள் தடுத்து வைத்தல்கள் தெளிவான அனைத்துலக மனித உரிமை சட்டங்களுக்கு புறம்பானது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டால் அவை போர்க்குற்றங்களாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாகவே கருதப்படும்.

3.பலவந்தமான காணாமல் போதல்கள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை விசாரணைக்கு உட்படுத்திய காலப்பகுதியில் பல்லாயிரக் கணக்கானவர்கள் பலவந்தமான முறையில் காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளமைக்கான வலுவான ஆதாரங்களும் சாட்சியங்களும் கிடைத்துளள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்குமாகாணங்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. யுத்தத்தின் பின்னர் பாரியளவில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் இவ்வாறு பலவந்தமான அடிப்படையில் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர்.

காணாமல் போனவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் ஒடுக்கியுள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படாமை ஒர் உரிமை மீறலாகும். காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

4.பொதுமக்கள்  நிலைகள் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல்

நடத்தப்பட்டமைக்கான போதியளவு சாட்சியங்கள் காணப்படுகின்றன. படையினர் இவ்வாறு பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதனாலும் பலவந்தமான காணாமல் போதல்கள் பதிவாகியுள்ளன. படையினரிடம் சரணடைந்த அல்லது ஒப்படைக்கப்பட்டவர்கள் புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளனர்.

5. சித்திரவதைகள் மற்றும் மிகக் கொடூரமான துன்புறுத்தல்கள்

சிறிலங்கா இராணுவத்தினர் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதைகளில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. யுத்தத்தின் பின்னர் உடனடியாக பாரியளவில் பொதுமக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் தடுத்து வைக்கப்பட்டனர். இராணுவ முகாம்கள், காவல் நிலையங்கள் மற்றும் புனர்வாழ்வு மையங்களிலும், இனம் தெரியாத இரகசிய முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டனர்.

மிகவும் திட்டமிட்ட வகையில் பாரியளவில் சித்திரவதைகள் மேற்கொண்டமைக்கான சாட்சியங்கள் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சித்திரவதைகளுக்கு எதிரான அனைத்துலக பிரகடனத்தில் சிறிலங்கா கைச்சாத்திட்டுள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில் சிறிலங்காவில் பாரியளவில் சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டால், அவை போர்க்குற்றங்களாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாகவே கருதப்படும்.

6. பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பால் நிலை சார் வன்முறைகள்

ஆண்கள் மற்றும் பெண்கள் மீது சிறிலங்கா  படையினர் பாலியல் வன்கொடுமைகளையும், ஏனைய வழிகளிலான பாலியல் சித்திரவதைகளையும் மேற்கொண்டதாகக் கருதத் தேவையான சாட்சியங்கள் கிடைத்துள்ளன.. குறிப்பாக யுத்தத்தின் பின்னர் இந்த நிலைமை அதிகரித்தது. விசாரணைகளின் போது தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், தண்டனை விதிக்கவும் இவ்வாறு பாலியல் வன்கொடுமைகளை படையினர் ஒர் கருவியாகப் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை குறித்த சமூகப் பார்வை, அழுத்தங்கள், அடக்குமுறைகள்; காரணமாக கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் பற்றிய பூரண தகவல்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை. எவ்வாறெனினும், சிறிலங்கா அரச படையினர் பாரியளவில் பாலியல் வன்கொடுமைகளையும், பாலியல் சித்திரவதைகளையும் மேற்கொண்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.. இவற்றில் சில குற்றச்செயல்கள் போர்க்குற்றங்களாகவே கருதப்பட வேண்டும்.

7. கடத்தல்கள் மற்றும் பலவந்த ஆட்சேர்ப்பு

2009ம் ஆண்டு வரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வயது வந்தவர்களை கட்டாயப்படுத்தி படையில் இணைத்துக் கொண்டமைக்கான தகவல்கள் கிடைத்துள்ளன.. இராணுவ மற்றும் ஏனைய உதவிகளை வழங்க இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் பணிக்கப்பட்டனர். குடும்பத்துடன் தொடர்புகளைப் பேண இவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இறுதிக் கட்டப் போரின்போது பலவந்தமான ஆட்சேர்ப்பு நடவடிக்ககள் அதிகளவில் இடம்பெற்றன. கடத்தப்பட்டவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தப்பிக்கவோ அல்லது கடத்தப்பட்டவர்களை விடுவிக்கவோ முயற்சித்த போது உடல் ரீதியாக தாக்கப்பட்டதுடன் வேறும் அடக்குமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.

பலவந்தமான ஆட்சேர்ப்பு பலவந்தமாக பணிக்கு அமர்த்துவது ஜெனிவா பிரகடனத்திற்கு முரணானது. பலவந்தமாக கடத்தப்பட்டு படையில் இணைக்கப்பட்டவர்களின் சுதந்திர நடமாட்டம் முழுமையாக தடுக்கப்பட்டது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டால், அவை போர்க்குற்றங்களாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாகவே கருதப்படும்.

8. சிறுவர் போராளிகளை படையில் சேர்த்தல் மற்றும் போரில் ஈடுபடுத்தல்

தமிழீழ விடுதலைப் புலிகள் பல ஆண்டுகளாக சிறுவர் போராளிகளை படையில் இணைத்து அவர்களை யுத்தத்தில் ஈடுபடுத்தினர். இறுதிக் கட்ட போர் இடம்பெற்ற மாதங்களில் இந்த நடவடிக்கை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அல்லது கருணா குழுவும் பாரியளவில் சிறுவர் போராளிகளை இணைத்துக் கொண்டமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இந்த நடவடிக்கையானது அனைத்துலக சிறுவர் உரிமை சட்டங்களுக்கு முரணானது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டால், அவை போர்க்குற்றங்களாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாகவே கருதப்படும்.

ஐ.நாமனித உரிமைப் பேரவையின் விசாரணைக்குழுவிற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கருணா குழுவின் சிறுவர் படை சேர்ப்பு விவகாரம் படையினருக்கு தெரிந்திருந்தும் அது கண்டுகொள்ளப்படவில்லை. எனவே இதன் ஊடாக சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சிறுவர் உரிமைச் சட்டங்களை மீறியுள்ளது. சிறிலங்கா அனைத்துலக சிறுவர் உரிமை பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

9. போரினால் பொதுமக்களுக்கும், அவர்களின் உடமைகளுக்கும் ஏற்பட்ட பாதிப்பு

அநேகமான தாக்குதல் சம்பவங்கள் போர் விதிமுறைகளுக்கு முரணான வகையில் இடம்பெற்றுள்ளது.  போர் தவிர்ப்பு வலயத்தில் காணப்படும் இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு அனுமதியுண்டு என்ற போதிலும், அதனால் தற்செயலாக ஏற்படக்கூடிய பொதுமக்கள்  பாதிப்புக்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்கள் இழப்புக்களை வரையறுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். பதுங்கு குழிகளில் இருக்க முடியாத பலர் போர் தவிர்ப்பு வலயத்தில் இருந்த போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள்  கொல்லப்பட்டனர்.

பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதியில் காணப்படும் இராணுவ நிலைகள் மீதான தாக்குதல்கள் மிகுந்த நிதானத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்கள் பகுதிகளில்  நிலை கொண்டிருந்தாலும்,  அவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் சிவிலியன்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புக்களை கவனத்திற்கொண்டிருக்க வேண்டும். அனைத்துலக மனிதாபிமான சட்டங்களின் அடிப்படையில் பொதுமக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. யுத்தத்தில் பங்கேற்கும் ஒரு தரப்பின் தவறுகள் காரணம் காட்டி பொதுமக்கள்  இழப்புக்கள் குறித்த பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. எவ்வாறெனினும் பொதுமக்கள்  இழப்புக்கள் குறித்த பூரணமான விசாரணை நடத்தப்படவில்லை, இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

வன்னி மருத்துவமனை மற்றும் ஏனைய மருத்துவமனைகள் மீது தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் மருத்துவமனைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முடியாது. மனிதாபிமான நோக்கங்களிலிருந்து விலகிச் செயற்பட்டால் மட்டுமே தாக்குதல் நடத்தப்பட முடியும். இந்த மருத்துவமனைகள் இராணுவ தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டமைக்கு எவ்வித சான்றுகளும் கிடையாது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டால், அவை போர்க்குற்றங்களாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாகவே கருதப்படும்.

மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் படையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் கவனிக்கப்பட வேண்டியது. மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் போது மிகவும் துல்லியமாக இலக்கை மட்டும் தாக்கக்கூடிய ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் இருந்தால் அவ்வாறான ஆயுதங்கள் பயன்பாட்டை படையினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாது படையினர் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள்  இழப்பு ஏற்பட்டிருந்தால் அது மனிதாபிமான மீறலாகவே கருதப்படும்.

தாக்குதல் நடத்தப்படும் போது எச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இராணுவத் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக அறிவித்து மக்களை அந்தப் பகுதியிலிலிருந்து வெளியேற போதியளவு கால அவகாசம் வழங்கி அதன் பின்னரே தாக்குதல் நடத்தப்பட வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மருத்துவமனைகள் மற்றும் ஏனைய பொதுமக்கள்  நிலைகளை இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தவில்லை என விசாரணைகளின் மூலம் உறுதியாகியுள்ளது. எவ்வாறெனினும், எறிகணைத் தாக்குதல்களுக்கு எதிர் தாக்குதல் நடத்தும் மையங்களை புலிகள் பொதுமக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகாமையில் நிறுவியமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களின் போது பொதுமக்கள் பாதிக்கப்படுவதனை தடுக்கும் வகையில் புலிகள் செயற்படவில்லை. இதன் ஊடாக தமிழீழ விடுதலைப்புலிகள் பொதுமக்களை பாதுகாக்கத் தவறியுள்ளனர்.

10. நடமாட்டத்தை வரையறுத்தல்

தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்கள் வன்னியிலிருந்து வெளியேறுவதனை தடுத்தனர் என நம்புவதற்கான காரணங்கள் விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் ஊடாக புலிகள் மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு தடை ஏற்படுத்தியுள்ளனர். 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த சட்டம் கடுமையாக்கப்பட்டது. இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தப்பிச் செல்ல முயற்சித்த சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளனர். இதன் போது சிலர் உயிரிழந்தனர். யுத்தத்தின் போது அல்லாமல் இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டால், அவை போர்க்குற்றங்களாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாகவே கருதப்படும்.

போர் இடம்பெற்ற பகுதியில் மக்களை தங்கியிருக்க வற்புறுத்தியதன் மூலம் புலிகள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்.

11. மனிதாபிமான உதவிகளை வழங்க மறுத்தல்

வன்னியில் சிறிலங்கா அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. மக்கள் நடமாட்டம் முதல் கொண்டு பல்வேறு வழிகளில் கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டிருந்தன. மனிதாபிமான தொண்டர்களின் நடமாட்டமும் வரையறுக்கப்பட்டது. பொதுமக்ககளுக்கு நலன்களை வழங்க மனிதாபிமான தொண்டர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளும் மனிதாபிமான தொண்டர்கள் சுயாதீனமாக நடமாட அனுமதிக்கவில்லை.

போர் வலயத்தில் மக்கள் கடுமையான மனிதாபிமான தேவைகளை எதிர்நோக்கியிருந்த போதிலும் அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து மக்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியது. குறிப்பாக உணவு, மருந்துப் பொருள் விநியோகம் கூட தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் பட்டினி பிணியை எதிர்நோக்க நேரிட்டது. இந்த நடவடிக்கையானது அனைத்துலக மனிதாபிமான சட்டங்களுக்கு முரணானது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டால், அவை போர்க்குற்றங்களாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாகவே கருதப்படும்.

12. உள்ளக இடம்பெயர்வாளர்களின் உரிமைகளை முடக்குதல்

மனிக்பாம் மற்றும் ஏனைய இடம்பெயர் முகாம்களில் வாழ்ந்து வந்த மக்களின் உரிமைகள் முடக்கப்பட்டதுடன் அவர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டனர். அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் இடம்பெயர் மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்படவில்லை. மக்களுக்கு போதியளவு சுகாதார வசதிகள் வழங்கப்படவில்லை. உணவு, குடிநீர், ஏனைய சுகாதார வசதிகள் உரிய முறையில் இடம்பெயர் முகாம்களுக்கு வழங்கப்படவில்லை.

தமிழர்கள் என்ற இனத்துவ காரணத்திற்காக இடம்பெயர் மக்கள் சந்தேக நபர்களாக  நோக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்த நடவடிக்கையானது அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் மனித உரிமை மீறலாகும். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டால், அவை போர்க்குற்றங்களாக அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாகவே கருதப்படும்.

இவ்வாறு ஐ.நா விசாரணை அறிக்கையின் கண்டறிவுகளில் கூறப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் கண்டறிவுகளின் அடிப்படையில், ஐ.நா விசாரணைக்குழு, தமது பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.

பரிந்துரைகள்

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் கடந்த கால தோல்விகளின் காரணமாகவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் குறித்து பொறுப்பு கூறல்களை நடத்தவில்லை.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்..

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அரச படையினர், எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் துணை இராணுவக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மீண்டும் வன்முறைகள் வெடிக்காமல் இருப்பதனை தடுக்க உறுதியான  நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

புதிய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு வரவேற்கப்பட வேண்டியது. எனினும் உள்நாட்டு மற்றும் அனைத்துலக தரப்பினை திருப்திபடுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு சில சம்பவங்களுக்கு மட்டும் தண்டனை விதிப்பது போதுமானதாக அமையாது. சில பத்தாண்டுகளாக அனைத்து இன சமூகங்களும் எதிர்நோக்கி வந்த பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு எடுத்தால் மட்டுமே மீளவும் பிரச்சினைகள் வராமல் இருப்பதனை தடுக்க முடியும்.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறல் விவகாரம் உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு அப்பாலானதாக அமைய வேண்டும். இவ்வாறான பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு வழங்கிய நாடுகளில் முன்வைக்கப்பட்ட தீர்வுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்துலக தலையீட்டுடன் கூடிய கலப்பின நீதிபதிகளின் குழுவை உள்ளடக்கி விசாரணை நடத்த வேண்டும்.

சிறிலங்காவில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியனவற்றை உறுதி செய்ய ஐ.நா அமைப்பு தொடர்ந்தும் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும்.

சிறிலங்காவின் நிலைமைகள் குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து உறுப்பு நாடுகள் ஆவன செய்ய வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கான பரிந்துரைகள்

ஐ.நாமனித உரிமைகள் பேரவையின் இந்த அறிக்கை மற்றும் ஏனைய அறிக்கைகளின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுவதனை கண்காணிக்க உயர் மட்டக் குழுவொன்றை நிறுவி அதன் ஊடாக கண்காணிக்கப்பட வேண்டும். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் ஏனைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதும் கண்காணிக்கப்பட வேண்டும்.

சிறிலங்காவின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு முழு அளவில் அழைப்பு விடுக்கப்பட வேண்டும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப ஆலோசனகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

உண்மையைக் கண்டறிதல் மற்றும் குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் குறித்த பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

உண்மை, நீதி குறித்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறப்புப்  பிரதிநிதியை  சிறிலங்காவுக்கு அழைக்க வேண்டும். ஐ.நா பொதுச்செயலாளரின் ஏனைய பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும். குறிப்பாக சட்டவிரோத படுகொலைகள், கடத்தல்கள் காணாமல் போதல்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிநிதிகள் சிறிலங்காவுக்கு அழைக்கப்பட வேண்டும்.

நிறுவன ரீதியான மாற்றங்கள்

அரசியலமைப்பு பேரவையின் ஊடாக சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சுயாதீனமான நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை உறுதி செய்யும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். நீதிமன்றில் வழக்குகளை தொடரக்கூடிய வகையில் அதிகாரமளிக்கப்பட வேண்டும்.

பாலியல் வன்முறை, சித்திரவதைகள், பாலியல் தொந்தரவு மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டுள்ளது என்பதனை படையினருக்கு மிகத் தெளிவாக அறிவுறுத்த வேண்டும். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் நேரடியாகவும் நிறுவன ரீதியாகவும் விசாரணை நடத்தி தண்டிக்கப்படுவர். மனித உரிமை ஆர்வலர்கள் மீதான சகல கண்காணிப்புக்களும் நிறுத்தப்பட வேண்டும்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சாட்சியங்களுடன் நிரூபிக்கப்படும் படை அதிகாரிகள், படையினர் மற்றும் ஏனைய பொதுத்துறை ஊழியர்கள் பணி நீக்கப்பட வேண்டும்.

இராணுவத்தினர் தனியார் காணிகளை பயன்படுத்தி வருகின்றனர், இந்த காணிகளை உரிமையாளர்களிடம் வழங்குவதனை துரிதப்படுத்தவும். பொதுமக்கள்  விவகாரங்களில் இராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டாம்

அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளைப் பேணி வரும் தரப்பினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும், புலனாய்வுத் தகவல்கள் திரட்டும் மற்றும் கண்காணிப்பு பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படக்கூடாது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து உயர்மட்ட ரீதியில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்துலக சட்டங்களுக்கு அமையான வகையில் தேசியப் பாதுகாப்பு கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

நீதித்துறைக்கான பரிந்துரைகள்

சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டங்கள் உரிய முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும். அனைத்துலக தரத்தில் இந்த சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும். சாட்சிப் பாதுகாப்பு பொறிமுறைமை சுயாதீனமாக இருக்க வேண்டியதுடன் அது தொடர்பில் நியமிக்கப்படும் அதிகாரிகள் சுயாதீனமானவர்களாக இருக்க வேண்டும்.

அனைத்துலக குற்றவியல் சட்டம் குறித்த ரோம் பிரகடனம் மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் பலவந்தமான காணாமல் போதல்கள் குறித்த ஜெனிவா பிரகடனம் ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து நபர்களையும் பலவந்த கடத்தல்களிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றன குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படக் கூடிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டும். குற்றச் செயல்கள் தொடர்பில் பொறுப்பு கூறல்களை உறுதி செய்யும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஆதாவது குற்றச் செயலை மேற்கொள்ள ஆணையிட்டவர் அல்லது கட்டளையிட்டவர்  குற்றச்செயல்களுக்கு பொறுப்பு சொல்லக்கூடிய வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்.

அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்புடன் கூடிய கலப்பு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம், அனைத்துலக சட்டத்தரணிகள், அனைத்துலக விசாரணையாளர்கள் உள்ளடக்கிய- குற்றவாளிகளை தண்டிக்கக் கூடிய வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும். போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறியவரை தண்டிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும்.

சகல குற்றவியல் விசாரணைகளும் கிரமப்படுத்தப்பட வேண்டும். ஆட்கொணர்வு மனு, அடிப்படை உரிமை மீறல் முதல் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்குழுக்களின் பரிந்துரைகளுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடயவியல் மற்றும் இரசாயன பகுப்பாய்வு போன்ற ஆதாரங்களை வழக்கு விசாரணைகளில் பயன்படுத்திக் கொள்ளவும், ஆய்வுகளை நவீன தொழில்நுட்ப அடிப்படையில் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக மரபணு, இரசாயன பகுப்பாய்வு உள்ளிட்டவை.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவர் தொடர்பிலும் மீளாய்வு செய்யப்பட வேண்டும். வழக்குத் தொடரப்பட வேண்டும் அல்லது அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். சித்திரவதைகளின் மூலம் வாக்கு மூலம் பெற்றுக்கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட தண்டனை அனுபவித்து வருவோரின் வழக்குகள் மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

உண்மை மற்றும் அறிந்து கொள்வதற்கான உரிமை

காணாமல் போனவர்கள் குறித்த அதிபர் ஆணைக்குழுவின் விசாரணைகள் சுயாதீனமான நிறுவனம் ஒன்றின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களுக்கு அமையவும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

கைதிகள் பற்றிய மத்திய தரவுத் தளமொன்று அமைக்க வேண்டும். உறவினர்கள் தகவல்களை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமைய வேண்டும். கைதிகள் பற்றிய விபரங்கள் சிறைகளில் வைக்கப்பட வேண்டும்.

பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நிறுவப்பட்டு ஆராயப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படாத அனைத்து ஆணைக்குழுக்களினதும் அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும். ( பொதுமக்கள்  இழப்பு குறித்த இராணுவ நீதிமன்ற விசாரணை அறிக்கை, காணாமல் போனவர்கள் குறித்த அதிபர் விசாரணை அறிக்கை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கைகள்)

மனித உரிமை மீறல்கள் குறித்த முழு அளவிலான தகவல்கள் பேணப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களை உளவியல் ரீதியாக வலுப்படுத்தும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும்.

ஐ.நாமுறைமை மற்றும் உறுப்பு நாடுகள்

அனைத்துலக தரத்தில் நீதித்துறையில் மாற்றங்களை செய்ய தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவம் உள்ளிட்ட படைத்தரப்பினர் அனைத்துலக அமைதி காக்கும் பணிளுக்காக உள்வாங்குதல், இராணுவப் பயிற்சி பரிமாற்றம் போன்ற நடவடிக்கைகளின் போது கடுமையான ஆய்வு நடத்தப்பட வேண்டும், குற்றச் செயல்களுடன் தொடர்புபடாதவர்களுக்கே சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமான மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க எங்கெல்லாம் எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் தண்டிக்க வேண்டும்.

சித்திரவதைகள் அடக்குமுறைகள் இடம்பெறாது என பூரண உறுதி அளிக்கப்படும் வரையில் தமிழர்களுக்கு இனி பிரச்சினைகள் கிடையாது என கருதி நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அமுலாக்கத்தை கண்காணிக்க வேண்டும். சிறிலங்காவின் மனித உரிமை நிலைமைகள் கண்காணிக்கப்பட வேண்டும். சிறிலங்காவில் போதியளவு மனித உரிமை நிலைமைகள் முன்னேற்றம் பதிவாகாவிட்டால் அனைத்துலக ரீதியில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க ஐ.நாமனித உரிமைப் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *