மேலும்

இளைஞர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பால் உருப்பெற்றதே தமிழ்த் தேசியம் – யதீந்திரா

jatheendra-campain (2)இன்று பல அரசியல்வாதிகளும் அர்த்தம் விளங்காமல் உச்சரித்துவரும் தமிழ்த் தேசியம் என்பது, இளைஞர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பால் உருப்பெற்ற ஒன்று. இது குறித்து இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளரான அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் எல்லைப்புற கிராமங்களைச் சேர்ந்த இளைஞர் குழுக்களை நேற்றுச் சந்தித்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தேர்தல் காலங்களில் அனைவரும் இளைஞர்களை நோக்கி வருகின்றனர் அவர்களது ஆதரவை தேடி வருகின்றனர்.

ஆனால் இளைஞர்களுக்கு அரசியலில் பங்களிப்பதற்கு வாய்ப்பு வழங்குங்கள் என்று கேட்டால், அதற்காக குரல் கொடுப்பதற்கு இங்கு எவரும் இல்லை.

இன்று நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக, ஓரணியில் நிற்கிறோம் என்றால், அதற்குக் காரணம் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் தியாகங்களே என்பதை இன்று சில அரசியல்வாதிகள் மிகவும் இலகுவாக மறந்துவிட்டனர்.

இன்று பல அரசியல்வாதிகளும் அர்த்தம் விளங்காமல் உச்சரித்துவரும் தமிழ்த் தேசியம் என்பது, இளைஞர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பால் உருப்பெற்ற ஒன்று. இது குறித்து இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

இனிவரும் உள்ளுராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்கு இளைஞர்கள் யுவதிகள் முன்வர வேண்டும்.

எங்களுக்கு இடம் தாருங்கள் என்று கேட்பதற்கு உங்களுக்கு உரிமையுண்டு. ஏனெனில் இது உங்களின் அரசியல்.

கூட்டமைப்புக்குள் இளைஞர்களுக்கு இடமில்லை என்று சொல்லுவதற்கு எவருக்கும் உரிமையில்லை. ஏனெனில் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் நோக்கமே தமிழ்த் தேசிய அரசியலை வலுப்படுத்துவதுதான். இளைஞர்களின் பங்களிப்பு இல்லாமல் எவ்வாறு தமிழ்த் தேசிய அரசியலை பலப்படுத்த முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

jatheendra-campain (2)

jatheendra-campain (1)அதேவேளை, நேற்று திருகோணமலை தேர்தல் தொகுதியிலுள்ள விவசாய சம்மேளன தலைவர்களை சந்தித்து பேசிய, வேட்பாளரும் அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா,

“தேர்தல் காலம் என்பது வாக்குறுதிகளை வாரி வழங்கும் காலமாகும். போக முடியாத ஊருக்கு வழி சொல்லுபவர்களையும், செய்ய முடியாத காரியங்களை செய்வேன் என்று சத்தியம் செய்பவர்களையும், தேர்தல் காலத்தில் தாராளமாக பார்க்க முடியும்.

மக்கள் கேட்பதற்கு எல்லாம் ஆமாம் என்று சொல்லிவிட்டு, தேர்தல் முடிந்ததும் வேட்பாளர்கள் ஒடிவிடுகின்றனர். இதுதான் தேர்தல் அரசியல்.

ஆனால் இவ்வாறு அரசியல்வாதிகள் மக்களின் வாக்குளை பெற வேண்டும் என்பதற்காக கூறும் பொய்யான வாக்குறுதிகள்தான் மக்கள் மத்தியில் அரசியல்வாதிகள் தொடர்பில் தவறான எண்ணங்கள் ஏற்படுவதற்கான காரணமாகின்றன.

மக்கள் அசியல்வாதிகள் என்றாலே பொய்யர்கள் திருடர்கள் என்று எண்ணுகின்றனர்.

நான் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகின்றேன். இந்த தேர்தலில் வெற்றிபெற்றால், நீங்கள் என்ன செய்வீர்கள் என்று நீங்கள் என்னை கேட்டால், என்னால் கூறக் கூடிய பதில் ஒன்றுதான். அதாவது, என்னால் செய்யக் கூடிய விடயங்கள் அனைத்தையும் உங்களுக்காக செய்வேன்.

ஒரு எதிர்க்கட்சி அரசியல் வாதியால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவை அனைத்தையும் மக்களுக்காக செய்வேன்.

அதேவேளை அரசுசாரா நிறுவனங்கள், தனியார் துறையினரை அணுகி அவர்களின் மூலமாகவும் உங்களுக்கு உதவி செய்ய முயற்சிப்பேன்.

இதைத் தவிர வேறு எந்தவொரு வாக்குறுதியையும் என்னால் வழங்க முடியாது. இதற்கு மாறாக நான் எதைக் கூறினாலும் அது உங்களை ஏமாற்றி வாக்குகளை பெறும் நோக்கம் கொண்டதாகவே அமைந்திருக்கும்.

மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற நான் விரும்பவில்லை. இன்று வாக்குகளுக்காக உங்களை ஏமாற்றும் ஒருவர் வெற்றிபெற்றால் அவரிடமிருந்து எவ்வாறு நீங்கள் நேர்மையை எதிர்பார்க்க முடியும்?

எங்களை பொறுத்தவரையில் அரசியல் என்பது உரிமைசார்ந்த ஒன்று. எங்களுடைய உரிமைகளுக்காக மட்டுமே இந்த தேர்தல் அரசியலை பயன்படுத்தி வருகின்றோம்.

ஏனைய சமூகங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளை போன்று எங்களால் அபிவிருத்தி நடவடிக்கைகளை தீர்மானிக்க முடியாது.

அப்படி தீர்மானிக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இணைய வேண்டும். அப்படி இணைந்தால் நாங்கள் முற்றிலுமாக எங்களது உரிமைசார் அரசியலை கைவிட வேண்டிவரும்.

எனவே அதனை எங்களால் செய்ய முடியாது. இதுதான் எங்களது உண்மையான நிலைமை. தேர்தல் கால வாக்குறுதிகள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *