மேலும்

19ஆவது திருத்தம் ஜனநாயகம், நல்லாட்சியை உறுதிப்படுத்தும் – நாடாளுமன்றத்தில் சம்பந்தன்

sampanthan-r19ஆவது திருத்தச்சட்டம் ஜனநாயகத்துக்கு வழிகோலுவதுடன், நல்லாட்சியையும் உறுதிப்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தனது உரையில், 19ஆவது திருத்தச் சட்டமூலத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான பல விடயங்கள் இருக்கின்றன. இவற்றை நாம் வரவேற்கின்றோம்.

19 ஆவது ஊடாக நல்லாட்சி உறுதிப்படுத்தப்படும்; மக்களின் இறைமை பாதுகாக்கப்படும்.

தற்போதுள்ள அரசியலமைப்பின்படி, ஒரு ஆண்டுக்குப் பின்னர், எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம், அதிபருக்கு இருந்தது. இது பாதகமான விடயமாகும்.

சட்டவாக்கத்துறைக்கும், மக்களின் ஆணைக்கும் இது பாதகமாகவே அமைந்தன. எனினும், 19ஆவது திருத்தங்களின் ஊடாக இந்த அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைகின்றோம்.

அதேவேளை, கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதிலும், சிக்கல்கள் இருந்து வந்தது. 19ஆவது திருத்தம்  ஊடாக இந்தச் சர்ச்சைக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது.

கட்சி தாவும் உறுப்பினர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட கட்சி சுதந்திரமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் என நம்புகிறேன். இதில் தலையிடுவதற்கு இடம் இருக்காது.

அதேவேளை, கடந்த காலங்களில் நீதித்துறை சுயாதீனமாகச் செயற்படவில்லை. அதன் நடவடிக்கைகளில் – நம்பகத்தன்மையில் சந்தேகம் இருக்கின்றது.

நிறைவேற்றுத்துறையின் தலையீடு இருந்தது. நியமனங்கள் சுதந்திரமாக இடம்பெறவில்லை. 19 ஆவது திருத்தம் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாகும். அரசியல் தலையீடுகள் நீங்கும். பக்கச்சார்பு முறை நீங்கும்.

இவ்வாறு ஏற்பட்டால் மக்களின் இறைமை பாதுகாக்கப்படும். ஜனநாயகத்தை மீள உருவாக்குவதற்குரிய சூழல் உருவாகும்.

அத்துடன், ஜனநாயகத்துக்குரிய அம்சங்கள் இந்தத் திருத்தத்தில் இருக்கின்றன. இது வரவேற்கத்தக்கது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையிலுள்ள அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வந்துள்ளார். இதை நாம் மதிக்கின்றோம்.

இதன் மூலம் அவருக்கு நன்மை கிட்டாவிட்டாலும் நாட்டு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது உறுதி.

18ஆவது திருத்தத்தின் ஊடாக அதிபரின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டது. எத்தனை தடவைகள் போட்டியிடலாம் என்றும் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனால் எதேச்சாதிகாரம் உருவாகியது.

இதனை ஜனவரி 8ஆம் நாள் மக்கள் தோற்கடித்து தெளிவான ஆணையை வழங்கினர். எனவே,மக்களின் ஆணை மதிக்கப்பட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *