மேலும்

யுத்தமின்றி எதிரியைத் தோற்கடிக்கும் மூலோபாயம் – சீனாவுக்கு சன் சூ கற்றுத் தந்த பாடம்

xi-pakistanஇராணுவ மூலோபாயங்கள் தொடர்பாக சன் சூவால் எழுதப்பட்ட Art of War நூலில் அவர் பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.யுத்தமில்லாமல் எதிரியைத் தோற்கடிப்பதற்கான பல்வேறு மூலோபாயங்களை சன் சூ தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதுவே தற்போது சீன வெளியுறவுக் கோட்பாட்டில் பிரயோகிக்கப்படுகிறது.

இவ்வாறு livemint இணையத்தளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.

சீனாவின் இராணுவ மேதையான சன் சூ (Sun Tzu)  தற்போது உயிருடனிருந்து ருவிற்றரில் இணைந்திருந்தால், சீனாவில் பிறந்ததை எண்ணித் தான் எவ்வளவு பெருமைப்படுகிறார் என்பதை இந்த உலகிற்குத் தெரிவித்திருப்பார்.

சீனாவின் இராணுவ மூலோபாயங்கள் தொடர்பாக சன் சூவால் எழுதப்பட்ட Art of War நூலில் அவர் பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

யுத்தமில்லாமல் எதிரியைத் தோற்கடிப்பதற்கான பல்வேறு மூலோபாயங்களை சன் சூ தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதுவே தற்போது சீன வெளியுறவுக் கோட்பாட்டில் பிரயோகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இதிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாரத்திலிருந்து, சீனாவும் பாகிஸ்தானும் 45 பில்லியன் டொலர்களை சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை என்கின்ற திட்டத்திற்காக (CPEC)  முதலிட்டுள்ளதாக அறிவித்துள்ளன. சீனாவின் வடமேற்கிலுள்ள சின்ஜியங் பிரதேசத்திலிருந்து பாகிஸ்தானின் தென்மேற்கிலுள்ள குவாடர் துறைமுகம் வரையான பகுதியை இணைப்பதே இத்திட்டத்தின் நோக்காகும்.

இத்திட்டம் நிறைவடையும் போது 3000 கிலோமீற்றர் வரையான வீதி பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்கும் என எதிர்வு கூறப்படுகிறது. சீனாவைப் பொறுத்தளவில் இத்திட்டமானது ஒரு கல்லில் பல பறவைகளைக் கொல்வதுடன் தொடர்புபட்டதாகும்.

சீனாவால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும் இதனுடன் சம்பந்தப்பட்டதாகும். சீனாவின் திட்டம் ஒன்று மெதுவாக நிறைவேறுகிறது. சீனா எவ்வாறு பிரதான ஐந்து விடயங்களைக் கையாளுகிறது என்பதை இந்தியா கவனத்தில் எடுக்கவேண்டும்.

இந்திய உபகண்டத்தில் பாரிய கட்டுமானத் திட்டங்களுக்காக முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் இந்தியாவை தனது முற்றுகைக்குள் உட்படுத்த சீனா முயல்கிறது. தற்போது சீனா எவ்வித புதிய திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் முத்துமாலை சீனாவால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட ஒன்று எனவும் சிலர் கூறலாம்.

ஆனால் சீனா இந்திய மாக்கடலில் தனது செல்வாக்கைச் செலுத்துவதன் மூலம் இந்தியாவை முற்றுகைக்கு உள்ளாக்கும் நகர்வை மிகவும் மெதுவாக ஆனால் உறுதியாக முன்னெடுத்துச் செல்கிறது. பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் மற்றும் சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் போன்றன சீனாவின் கணிசமான முதலீடாகவும் ஈடுபாடாகவும் காணப்படுகின்றன.

நேபாளத்தில், எவரெஸ்ட் சிகரத்திற்குக் கீழே சுரங்கம் ஒன்றின் ஊடாக திபெத்திலிருந்து 540 கிலோமீற்றர் நீளமான விரைவுத் தொடருந்துப் பாதை ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தை சீனா கொண்டுள்ளது. இந்தத் தொடருந்துப் பாதை இந்திய-நேபாள எல்லைக்கு அருகாக அமைக்கப்படவுள்ளது.

2015ன் முதல் காலாண்டில், சீனா கடந்த ஆறு ஆண்டுகளாக மிக மெதுவாக மேற்கொண்ட முதலீட்டின் பெறுபேற்றைப் பெற்றுள்ளது. சீனா எவ்வாறு தனது பொருளாதாரத்தில் வளர்ச்சியை எட்டியுள்ளது?

‘பாரியளவில் வேலையின்மையை ஏற்படுத்தாது சீனா தனது உள்நாட்டின் கட்டுமானத் துறையை முன்னேற்றியதன் மூலம் முதலீட்டை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்கிறது. இதுவே சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் மிக முக்கிய காரணியாகும்.

சீனாவின் வெளிநாட்டு முதலீடுகள் அதன் உள்நாட்டுப் பொருளாதாரத்தை முதன்மைப்படுத்துவதாக மேற்கொள்ளப்படுகிறது’ என ஆய்வாளர் ஜக்கோப் ஸ்ரொக்ஸ் ஏப்ரல் 19 அன்று வெளியான வெளிவிவகார சஞ்சிகையில் ‘சீனாவின் வீதிச் சட்டங்கள்’ என்கின்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா தனது வடமேற்கிலுள்ள சின்ஜியாங் மற்றும் தெற்கிலுள்ள திபேத் போன்ற இடங்களில் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்வதானது தற்செயலான நிகழ்வல்ல. சின்ஜியாங் மற்றும் திபேத் ஆகிய இரண்டு எல்லைகளும் இனமோதலின் மையங்களாக உள்ளன. இவை இரண்டும் அபிவிருத்தியடையாத இடங்களாகும்.

இவ்விரு பிராந்தியங்களிலும் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புப் போன்றவற்றைப் பெருக்கலாம் என்பது சீனாவின் நம்பிக்கையாகும். இது நீண்ட கால அடிப்படையில் உள்நாட்டு மோதல்களைக் குறைப்பதற்கு உதவ முடியும் எனவும் சீனா நம்புகிறது.

சீனாவால் பரிந்துரைக்கப்பட்ட ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கியானது அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. கடந்தவாரம் வரை இந்த வங்கியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 57 ஆகும்.

அமெரிக்கா, யப்பான், கனடா ஆகிய நாடுகளைத் தவிர பொருளாதார வலுமிக்க மிகவும் அதிகமான நாடுகள் இந்த வங்கியில் அங்கம் வகிக்கின்றன. சீனா தனது அயல்நாடுகளில் முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்வதற்கு ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கியிலிருந்து நிதியைப் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு எவ்வித தடையும் சீனாவுக்கு இருக்காது.

பிறேசில், ரஸ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய புதிய அபிவிருத்தி வங்கியானது இதனைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.

எந்தவொரு நாடும் தனது பொருளாதாரத்தை வளர்ச்சியுறச் செய்வதற்கு எண்ணெய் வளம் மிகவும் தேவையான ஒன்றாகும். சீனாவானது உலகின் மூன்றாவது மிகப்பெரிய நிலக்கரி கையிருப்பைக் கொண்டிருப்பினும், சீனா தனக்குத் தேவையான நிலக்கரி, எண்ணெய் மற்றும் வாயு போன்றவற்றைப் பிற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்கின்றது.

ஏன் சீனா நிலக்கரியை இறக்குமதி  செய்கிறது? சீனா அவசரமாகத் தேவைப்படுகின்ற எண்ணெய் வளத்தை சேமிப்புச் செய்கின்ற நாடாக உள்ளதால் இதற்கு மேலதிகமாகத் தேவைப்படும் நிலக்கரி போன்றவற்றை இறக்குமதி செய்கிறது.

பெரும்பாலான எண்ணெய் மற்றும் வாயு ஏற்றுமதி நாடுகளுடன் சீனா மூலோபாயப் பங்காளி உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் இதனால் தனக்குத் தேவையான நிலக்கரிகளை இறக்குமதி செய்ய முடிகிறது.

சீனாவானது உலகின் அதிகூடிய மீட்கத்தக்க கனிம வாயு ஒதுக்கங்களைக் கொண்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது இன்னமும் பயன்படுத்தப்படவில்லை. இதனால் சீனாவின் எதிர்காலத் தேவைக்கு இதனைப் பயன்படுத்தலாம்.

1979லிருந்து சீனாவின் வளர்ச்சியானது தற்செயலாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல. இது மிகவும் திட்டமிடப்பட்டு தொலைநோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீனாவின் வெளியுறவுக் கோட்பாடானது இதன் பாதுகாப்பு, மூலோபாய மற்றும் பொருளாதாரத் தேவைகளை மிகத் திறமையான வழியில் முகங்கொடுப்பதற்கேற்ப வரையறுக்கப்படுகிறது.

இந்தியா தனது வலுமிக்க அயல்நாடான சீனாவிற்குச் சவாலாக விளங்க முடியும் என நம்பிக்கை கொண்டிருந்தால் சீனாவின் இத்தகைய வளர்ச்சியைக் கருத்திற்கொள்வதுடன், இதனுடைய வெளியுறவுக் கோட்பாட்டிற்கு ஒத்ததாக தனது கோட்பாட்டையும் இந்தியா வடிவமைத்துக் கொள்ளவேண்டும்.

இல்லாவிட்டால், சன் சூ எச்சரித்தது போன்று, சண்டையின்றி யுத்தம் தோற்கடிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *