மேலும்

சிறிலங்கா அமைதியை வெற்றி கொள்ளவில்லை – தந்தை செல்வா நினைவுப் பேருரையில் சந்திரிகா

sjv-selva-memoriolசிறிலங்கா போரில் வெற்றி பெற்ற போதும், அமைதியை இன்னமும் வெற்றி கொள்ளவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட, கட்சியின் நிறுவுனரான எஸ்.ஜே.வி.செல்வநாயகம், நினைவுப் பேருரையை நிகழ்த்திய போதே, சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது உரையில், “ தந்தை செல்வா அவர்களை எனக்குத் தெரியும். எனது தந்தையாருடன் வந்து பேசியபோது அவரை நான் சந்தித்திருக்கிறேன்.

டாக்டர் நாகநாதனுடைய கடைசி மகள் எனது நண்பியாகவிருந்த காரணத்தினாலே அங்கே நேரம் செலவிடுகின்ற போது, சிலவேளை அங்கேயும் அவரை சந்தித்திருக்கின்றேன். அவரையொரு நேர்மையான அரசியல்வாதியென நாம் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம்.

இன்று அவருடைய நினைவுப் பேருரையினை வழங்குகின்றபோது இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான பிளவுகள், பிரச்சினைகள் உலகில் ஏற்படுகின்றதைப் பற்றி சிலசிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கின்றேன். அப்படியான பிளவுகள், பிரச்சினைகளுக்கான காரணங்கள், அவற்றை தீர்த்துக்கொள்வதற்கான சில வழிமுறைகளையும் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

sjv-selva-memoriol

இலங்கையை நாம் எடுத்து நோக்குமேயானால், 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த நாள் முதல் பெரும்பான்மை இனம் தன்னுடைய ஆதிக்கத்தால் மற்றவர்களை புறக்கணித்து அதிகாரங்களை தம்முடைய கைகளில் வைத்துக் கொண்டதன் காரணமாக பலவித பிரச்சினைகள் எழுந்தன. இனங்களுடைக்கிடையில், மொழிகளுக்கிடையில், மதங்களுக்கிடையிலான புறக்கணிப்புக்களினாலும் அனைவரையும் இணைத்துக் கொள்ளாத ஒரு மனப்பாங்கிலும் இந்தப் பிரச்சினைகள் எழுந்தன.

இவ்வாறான பல சம்பவங்கள் இந்தக் காலகட்டத்தில் இடம்பெற்றன. அனைவரையும் இணைத்துக் கொள்ளாமல், பெரும்பான்மையினராக இருக்கின்ற காரணத்தினாலேயே மற்றவர்களை புறக்கணித்து பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி செய்ததனால் சிறுபான்மை இனத்தவர்கள் தமது பிரச்சினைகளை முன்கொணர வேண்டி ஏற்பட்டது.

இதன் காரணமாகத்தான் பல இடங்களில் இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்க முடியாத நிலையில் அவர்கள் வன்முறையை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

ஓர் இனத்தின் மனதிலேயிருந்த எதிர்பார்ப்புகள் தகர்க்கப்படுமாக இருந்தால் அது வெடிகுண்டாக மாறும் என்று ஓர் அறிஞர் கூறியிருக்கின்றார்.

பெரும்பான்மை இனம் தம்முடைய அரசியல் பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக ஒரு பிரசாரத்தை மேற்கொண்டது. அதாவது, மற்றவர்கள் எதிரிகள் என்ற பிரசாரத்தை மேற்கொண்டு அவர்களை எதிரிகளாக சித்திரித்து அதன் மூலமாக பெரும்பான்மை இனத்தவர்களுடைய அதிகார பலத்தை தாங்கள் வைத்துக் கொள்கின்ற ஒரு யுக்தியை பல நாடுகளிலே கையாள்வதை காணக்கூடியதாக உள்ளது. இலங்கையிலும் அதுதான் நடந்துள்ளது.

சுதந்திரமடைந்த காலந்தொட்டு வடக்கு மற்றும் கிழக்கு மக்களுடைய புறக்கணிப்பு பல விதங்களிலே இருந்தன. பொருளாதாரமாக இருக்கலாம், அரசியல் அதிகாரமாக இருக்கலாம், அவர்களுடைய மேற்படிப்பாக இருக்கலாம், வேலைவாய்ப்பாக இருக்கலாம் இவையனைத்திலும் புறக்கணிக்கப்பட்டு அவர்கள் வெளியில் விடப்பட்ட காரணத்தினால், இங்கேயும் வன்முறைகள் ஆரம்பித்ததை நாம் காணக்கூடியதாக இருந்தது.

நாடாளுமன்றத்திலேயும் இவ்வாறு ஜனநாயகத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருக்கின்ற காரணத்தினாலேயே இங்கே நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

உண்மையான ஐக்கியம் ஏற்பட வேண்டுமானால் வேற்றுமையை ஏற்றுக்கொண்டு அந்த வேற்றுமையின் சிறப்பை வெளிப்படுத்துகின்ற ஓர் அபிப்பிராயத்தின் மூலமாகத்தான் அந்த ஐக்கியம் ஏற்பட முடியுமே தவிர, வேற்றுமையினால் மாறுபட்டவர்கள், மற்றவர்கள் என்று அடக்கியோ புறக்கணித்தோ ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது.

இன்று நாம் போரிலே வெற்றி பெற்றிருக்கின்றோம். ஆனால் சமாதானத்தினை வெற்றிகொள்ளவில்லை. ஆனால் பல யுத்த வெற்றியாளர்கள் சமாதானத்தை வெற்றிக்கொள்ளவில்லை என்பதுதான் சரித்திரம்.

ஏனென்றால், சமாதானத்தை வெற்றி கொள்வதற்கு வித்தியாசமான மனப்பாங்கு அவசியம். தாழ்மையாக மற்றவர்களை சேர்த்துக் கொள்கின்ற மாறுபட்ட சிந்தனைகள் அவசியமாக இருக்கிறது.

இந்த நாட்டின் சமூகங்கள் சுதந்திரமடைந்த காலம் தொட்டு ஜனநாயக முறைப்படி தங்களுடைய உரிமைகளை நிலைநாட்டுவதற்காக பல காலம் உழைத்தார்கள், போராடினார்கள். முதலில் சம உரிமைகளை கோரினார்கள். பின்னர் அது கிடைக்காதபோது சமஷ்டி ஆட்சி முறையை கேட்டார்கள். அதையும் செவிமடுக்காத போது தனிநாடு கோரினார்கள். இவையனைத்தும் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டதன் விளைவாகத்தான் வன்முறை உருவானது.

தந்தை செல்வா அவர்கள், தமிழ் சமூகத்தின் உரிமைக்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தார். பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார். சிங்கள தீவிரவாதக் குழுக்கள் சிறு சிறு குழுக்களாக இருந்தபோதும் அரசியலிலே அந்தந்த காலகட்டத்திலிருந்த பெரும்பான்மை கட்சிகளோடு தம்மை இணைத்துக்கொண்டு இந்த ஒப்பந்தங்களை நிறைவேற்றவிடாது தடுத்தமை எமது நாட்டின் வரலாறு.

1956 இல் சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக்கப்பட்டபோது அது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்றல்ல. வெளிநாட்டவர்களிடமிருந்து விடுபட்ட எமது நாட்டை சுயமொழி, சுயகலாசாரத்தை வெளிக்கொணர வேண்டுமென்ற அடையாளத்தை ஏற்படுத்துவதற்காக முதலிடம் கொடுக்கப்பட்டதுதான் உண்மை.

ஆனால் அந்த நேரத்தில் விடப்பட்ட தவறு என்னவென்றால் மற்ற மொழிகளை பேசுகின்றவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். வேற்றுமொழியாகிய ஆங்கிலம் அதிலிருந்து வெளியே விடப்பட்டது.

இதன் காரணமாக அந்தத் தருணத்திலேயேயும் எண்ணிக்கையிலே சிறுபான்மையினர்கள் நாட்டின் ஐக்கியத்துக்குள்ளே இணைத்துக் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டார்கள். இதுபோன்று பல்வேறு சந்தரப்பங்களில் இவ்வாறான புறக்கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு தேசியக் கட்சிகளும் ஒரு தீர்வு வருவதை தவிர்த்து தாங்கள் எதிர்க்கட்சியிலே இருக்கின்ற போது எதிராக செயற்பட்டார்கள்.

1994 ஆம் ஆண்டு நான் ஆட்சிக்கு வந்தபோது மக்கள் மத்தியிலே எவ்வாறான அபிப்பிராயம் இருக்கின்றது என்பதை கண்டுபிடிப்பதற்காக ஒரு நிகழ்ச்சியை செய்தபோது 23 சதவீமானவர்கள்தான் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்றார்கள். மற்றவர்கள் போரினால்தான் இதனை முறியடிக்க முடியுமென்றார்கள்.

அதன்பின் இரண்டு வருடகாலமாக வெண்தாமரை இயக்கங்கள் போன்ற வேலைத்திட்டங்களூடாக மக்களுடைய மனங்களை மாற்றுவதற்கு நாம் எடுத்த முயற்சிகளின் பலனாக இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த பிரச்சினை தீர்வுபற்றி அபிப்பிராயம் கேட்டபோது 68 சதவீதமானவர்கள் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்படவேண்டுமென்ற தமது நிலைப்பாட்டை தெரிவித்தனர்.

எனவே, அரசியல் தலைவர்களுடைய அபிப்பிராயமாகட்டும், மக்களுடைய அபிப்பிராயமாகட்டும் அதிலே மனப்பாங்கு மிகவும் அவசியமானது. அதுமாத்திரமல்லாமல் மற்றவர்கள் மீதுள்ள சந்தேகம் மற்றும் அச்சத்தை நீக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

வெறுமனேயே ஒரு பொருளாதார மீட்சி மூலமாக மக்களுடைய முழுமையான அபிலாஷைகளை அடைந்துவிட முடியாது. மாறாக, அரசியல் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதன் மூலமாக அந்த மக்களுக்கு தீர்வினை வழங்கவேண்டும்.

நாம் அதிகாரப் பகிர்வு யோசனை அடங்கிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தபோது விடுதலைப்புலிகள் ஒரு பக்கமாகவும், எதிர்க்கட்சி இன்னொரு பக்கமாகவும் செயற்பட்டதன் விளைவாக அதனை செயற்படுத்த முடியாது போனது.

ஆனால் இன்றைக்கு மிகவும் முக்கியமான சரித்திரத்தில் என்றுமில்லாத சந்தர்ப்பமொன்று ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றாக சேர்ந்து அரசாங்கத்தை அமைத்துள்ளது. அதனோடு வேறு சில கட்சிகளும் கூட அதற்கு ஆதரவாக செயற்படுகின்றன.

இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்தி இதுவரைக்கும் நாம் அடைய முடியாதிருந்த அதிகாரப் பகிர்வின் மூலமாக அனைவருக்கும் சம உரித்து ஏற்படுத்துகின்ற ஒரு நிலையை கட்டியெழுப்புவதன் மூலமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

தற்போதைய அரசாங்கம், காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது, குறிப்பாக பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது,போரின் இறுதிக்கட்டத்தில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதன் மூலம், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவது, தமிழர்களுக்கு சமவாய்ப்புகளை வழங்கும் வகையில், எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்க நிலையான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவது ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது.

போரிலே வென்றதால் சமாதானம் ஏற்படப் போவதில்லை. நாட்டில் உண்மையான சமாதானம் ஏற்படுவதற்கான வழிமுறையை நாம் ஏற்படுத்தலாம் என நான் நம்புகின்றேன். அதற்கான சகல முயற்சிகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *