மேலும்

வல்லமை தாராயோ…!

ki-pi-annaநட்டாற்றில் விடப்பட்டது போல், இரண்டாவது தடவை நாம் உணர்ந்து, இன்றோடு ஒரு மாதம். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், முள்ளிவாய்க்கால் பேரழிவு முதல்முறையாக எம்முள் அந்த உணர்வை ஏற்படுத்தியது.

மார்ச்- 08ம் நாள் மீண்டும் அதே உணர்வு எமையெல்லாம் ஆக்கிரமித்தது.

அது எமது பயணத்தில் மறக்க முடியாத ஒருநாள்.

‘புதினப்பலகை’யை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர், அதன் முதன்மைப் பங்காளர், ஆசிரியர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட கி.பி.அரவிந்தன் அவர்களை நாம் இழந்து போன நாள் அது.

‘புதினப்பலகை’யில் அவரது பங்களிப்புக்கு அப்பால், ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர், கவிஞர், எழுத்தாளர், இனப்பற்றாளர், இவை எல்லாவற்றையும் விட, சமூக அக்கறையும் – மனிதநேயமும் மிக்க ஒரு மாமனிதர்.

இப்படி அவருக்குப் பல பரிமாணங்கள்.

அவரின் ஆளுமையின் கீழ் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியதையிட்டு, ‘புதினப்பலகை’யும், அதன் ஆசிரியர் குழுமமும் என்றைக்கும் பெருமை கொள்ள முடியும்.

‘அறி – தெளி – துணி’ என்ற தாரக மந்திரத்துடன், ‘புதினப்பலகை’ பிறப்பெடுத்த நாள் முதல், அது எதிர்கொண்ட சோதனைகள் எல்லாவற்றையும் தாண்டி, நிமிர்ந்து நிற்கிறது என்றால், அதற்குக் காரணம், கி.பி.அரவிந்தன் என்ற மிடுக்கான மாமனிதரின் ஆன்மா அதில் உறைந்து போயிருப்பது தான்.

நெருக்கடியான சூழலில் உருவாக்கப்பட்ட ‘புதினப்பலகை’யைக் கொண்டு நடத்திய, சமநேரத்திலேயே அவர் நோயுடனும் போராட வேண்டிய நிலை தோன்றி விட்டது.

அந்தக் கொடிய நோய் அவரை இவ்வளவு விரைவாக எம்மிடம் இருந்து பிரித்துச் செல்லும் என்று நாம் அறியோம்.

2015- மார்ச் 08ம் நாள்- ஒரு கணம் தவித்துப் போய் – செய்வதறியாது திகைத்துப் போய் நின்றோம்.

அடுத்து என்ன என்ற கேள்வி எம்முன் தோன்றியது உண்மை.

ஆனால், அந்தக் கேள்வி எம்மை சோர்வுகொள்ள விடவில்லை.

அவரது பயணத்தை தொடர்வதே அவருக்கு நாம் செய்யும் மரியாதை என்ற வைராக்கிய உணர்வு தான் எம்முள் தோன்றியது.

இது கி.பி.அரவிந்தன் அவர்கள் எமக்குள் இந்த ஆறு ஆண்டுகளில் ஏற்படுத்திய துணிவாக – தைரியமாக – எடுத்துக் கொள்ளலாம்.

அந்த துணிவும், அவரது விருப்பும் தான், அவர் மறைந்து போன பின்னரும், ‘புதினப்பலகை’யை இன்றைக்கும் உங்கள் முன் கொண்டு வருகிறது.

தமிழர்கள் விடுதலை பெறவும், உரிமைகளை அடையவும், தனது வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட, கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவுகளைச் சுமந்து கொண்டு, நடைபோட முனைகிறது ‘புதினப்பலகை’.

2009ம் ஆண்டு ‘புதினப்பலகை’யை ஆரம்பிக்கும் போது, நாம் எதைக் கூறினோமோ அதையே மீண்டும் உறுதியோடு சொல்கிறோம்.

“செய்திகளில் நம்பகத் தன்மையையும், தனித்துவத்தையும், தரத்தையும் ‘புதினப்பலகை’யில் தொடர்ந்தும் பேணுவோம்.

தமிழ் பேசும் மக்களின் ‘நலன்’ மட்டும் தான் என்றென்றும் ‘புதினப்பலகை’ தளத்தின் இலக்காக இருந்து வந்தது.

அந்த இலக்கை மட்டுமே குறியாக வைத்து, நாம் பயணிப்போம்.

இலங்கைத் தீவிலும், தமிழ்நாட்டிலும், உலகப்பரப்பு எங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களதும், தமிழரல்லாத தமிழர் நலன் விரும்பிகளதும், மற்றும் அனைத்துலக சமூகத்தாரினதும் – ஒருங்கிணைப்புடனும், ஒத்துழைப்புடனும் ‘புதினப்பலகை’ பணியாற்றும்.

தமிழ் சமுகத்தின் இயல்புகளான – உள்வாங்கும் சுபாவம், திறந்தமனப் பக்குவம், ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் என்பவற்றை வளர்த்தெடுக்கும் ஒரு தளமாகவும், அவற்றுக்கு வலுச்சேர்த்து, அவற்றைத் தமிழரது வாழ்வியல் பண்பாடாக மாற்ற முயல்வோருக்கான ஒரு களமாகவும் ‘புதினப்பலகை’ தொடர்ந்து விளங்கும்.

உலக வரலாற்றை நகர்த்திய ஏனைய தேசிய இனங்களின் பட்டறிவுகளைப் பரிமாறி, உலகின் செல்நெறி பற்றிய நுண்ணறிவுகளைப் பெற்று – அவற்றுக்கு அமைவாக – ஈழத்தமிழரது தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அனைத்துலக மட்டத்தில் எடுக்கப்படும் ஈழத்தமிழரது அரசியல் முன்முனைவுகளுக்கும் ‘புதினப்பலகை’ துணையாய் இருக்கும்.

உண்மையை அறிய வைத்து, ஐயங்களைத் தெளிய வைத்து, செயற்படும் துணிவை ஊட்டி — தமிழ்த் தேசிய இனத்தை ‘புதினப்பலகை’ ஒரு நேரிய பாதையில் தொடர்ந்தும் அழைத்துச் செல்லும்.”

என்றென்றும் எம் உணர்வுகளோடு ஒன்றியிருக்கும், கி.பி.அரவிந்தன் அவர்கள், இந்தப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான ஆன்ம வல்லமையை, எமக்குக் கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு நடைபோடுகிறோம்….!

ki-pi

– புதினப்பலகை குழுமத்தினர்

08.04.2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *