மேலும்

வடக்கில் கைத்தொழில் வலயங்களை உருவாக்க சீனா விருப்பம் – இந்தியாவுக்குப் போட்டி

Yi Xianliangசிறிலங்காவின் வடக்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில், கைத்தொழில் அல்லது பொருளாதார வலயங்களை நிறுவ சீனா விருப்பம் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடன் அண்மையில் நடந்த சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஜியாங்லியாங் இந்த விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில், கரையோர கைத்தொழில் வலயம் ஒன்றை உருவாக்க சீனா விருப்பம் வெளியிட்டுள்ளதானது, இந்தியாவின் கால்விரல்களுக்குள் நுழையும் திட்டமாக இருக்கலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்து வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தை் தனது செல்வாக்குக்குட்பட்ட பிராந்தியமாக இந்தியா கருதுகிறது.

ஏற்கனவே அங்குள்ள காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் ஆகியவை மீது மூலோபாய நலன்களைக் கொண்டிருப்பதாக சிறிலங்காவுக்கு கூறியுள்ள இந்தியா, அவற்றின் அபிவிருத்தியிலும் தொடர்புபட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள அச்சுவேலியில், இந்தியா ஏற்கனவே கைத்தொழில் வலயம் ஒன்றை உருவாக்கியுள்ளதுடன், மாகாணத்தில் தொடருந்து வலையமைப்பையும் மீளமைத்திருக்கிறது.

ஆனால் வடக்கில் சீனாவின் தலையீடு இன்னமும் குறைவாகவே உள்ளது.அங்கு சீனா சில வீதிகளை அமைத்துள்ளது.

ஆனால், அதன் கனவுத் திட்டமான வடக்கு நெடுஞ்சாலைத் திட்டம், தற்போதைய மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தினால் செலவுகள் தொடர்பான மீளாய்வுக்காக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சீனாவில் உள்ள ஷென்சென் பொருளாதார வலயத்தை, சிறிலங்காவுக்கு முன்மாதிரியாக எடுத்துக் காட்டியுள்ளார் சீனத் தூதுவர்.

30 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு கிராமமாக இருந்த கரையோர ஷென்சென் பொருளாதார வலயம், இப்போது உயர்ந்த அபிவிருத்தி அடைந்துள்ளது.

சிறிலங்காவில் முன்மொழியப்பட்டுள்ள சீன பொருளாதார அல்லது கைத்தொழில் வலயங்கள், சீனர்களையோ, வெளிநாட்டு முதலீடுகளையோ மட்டும் கவர்வதாக இருக்காது.

சிறிலங்காவுக்கு அதன் கைத்தொழில் உற்பத்திகளை அதிகரிப்பதற்கு உதவுவதாகவும் பரந்தளவிலான ஏற்றுமதி வாய்ப்பை அளிப்பதாகவும் இருக்கும்.

இப்போது சீனாவுக்கு ஆடைகள் மற்றும் விவசாயப் பொருட்களை மட்டுமே சிறிலங்கா ஏற்றுமதி செய்வதையும் சீனத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் இடைநிறுத்தி வைத்துள்ள போதிலும்,தேவையான மாற்றங்களுடன் சிறிலங்காவில் தனது திட்டங்களைத் தொடர்வதில் சீனா ஆர்வம் காட்டி வருவதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *