மேலும்

நாட்டை ஒன்றுபடுத்தும் வாய்ப்பை சிறிலங்கா தவறவிட்டு விட்டது – அமெரிக்க உயர் அதிகாரி

Tom-Malinowskiமுப்பதாண்டுகாலப் போருக்குப் பின்னர், 2009ம் ஆண்டு நாட்டை ஒன்றுபடுத்தக் கிடைத்த வாய்ப்புகளை சிறிலங்கா பயன்படுத்திக் கொள்ளத் தவறியுள்ளதாகவும், இதனால், நல்லிணக்கத்தை அடைவதற்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு தற்போது, நல்லிணக்கம், நீதி, உண்மையான அமைதியை அடையும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும், ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று கொழும்பில், போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

tom-speech-colombo

“ஒருதரப்பு மறுதரப்பின் இதயங்களை வதைத்தும், மீறல்களைப் புரிந்தும், இரண்டு தரப்பும் குறைகளைப் புரிந்துள்ளன.

போர்க்களத்தில் ஒருதரப்பு வெற்றி பெற்று போரை முடிவுக்கு கொண்டு வந்திருந்தாலும், பிளவுகள் குணமடையவில்லை.

150 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா கற்ற பாடத்தை, இன்னும் பல நாடுகளும் கற்றுக்கொண்ட பாடத்தை சிறிலங்காவுக்கு பரிந்துரைக்கிறேன் -“உங்களால் உண்மையில் ஒரு உள்நாட்டுப் போரை வெல்ல முடியாது”

போருக்குப் பின்னர் ஐந்து ஆண்டுகளாக, பல்வேறு விவகாரங்கள் குறித்து சிறிலங்காவுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் இடையில், பதற்றம் நிலவி வருகிறது.

இப்போது சிறிலங்காவின் வரலாற்றில், முக்கியமான தருணமொன்று வந்திருக்கிறது. உங்களுடைய அர்ப்பணிப்புக்கு, நன்றி.

நல்லிணக்கம், நீதி, உண்மையான அமைதியை அடைவதற்கு இப்போது வாய்ப்புக் கிடைத்துள்ளது.

பின்நோக்கிப் பார்த்து, அப்பாவிகள் பாதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு, எல்லாத் தரப்பிலும் தவறு செய்தவர்களை தண்டனைக்குட்படுத்துவது அவசியம். இந்த செயல்முறைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும்.

இலங்கை மக்களும், அவர்களின் புதிய அரசாங்கமும், தமது ஜனநாயக பாரம்பரியம், சகிப்புத்தன்மை, சிவில் சமூகத்தை மீட்டெடுப்பதற்கு ஏற்கனவே பெரும் பாய்ச்சலை நடத்தியுள்ளனர். சிறிலங்காவில் அது நிச்சயம் தொடரும் என்று அமெரிக்கா நம்புகிறது.

இலங்கை மக்களிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்ப சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும், நடவடிக்கைகளை நாம் வரவேற்கிறோம்.

உங்களின் இந்த முயற்சிகள் நிலையான அமைதியைக் கொண்டு வருவதற்கு ஆதரவு வழங்க நாம் தயாராக இருக்கிறோம்.

முன்நோக்கிச் செல்வதற்கு சிறிலங்கா கடினமான தெரிவுகளை செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால், சிறிலங்காவுக்கு உதவ, அமெரிக்கா தனது சக்தியின் மூலம் எல்லாவற்றையும் செய்யும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *