மேலும்

வடக்கில் இருந்து படையினரையோ, முகாம்களையோ அகற்றமாட்டோம் – சிறிலங்கா இராணுவத் தளபதி

Major General Krishantha De Silvaதனியார் காணிகளை ஒப்படைப்பதற்காக, வடக்கில் இருந்து  படையினரையோ முகாம்களையோ அகற்றவில்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்கள வாரஇதழுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “ சிறிலங்காவின் பூகோள ஒருமைப்பாட்டையும் இறைமையையும் பாதுகாப்பதற்கு எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

வடக்கில் மீண்டும், ஆயுதக் கிளர்ச்சி ஏற்படாமல் தடுப்பதற்கு எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

தேசிய பாதுகாப்புக்கோ அல்லது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கோ, சவால்கள் ஏற்பட்டால் அந்த அச்சுறுத்தலை முறியடிப்பதற்கு எம்மாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

வடக்கு, கிழக்கில், காணிகளை அவர்களின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக படையினரோ அல்லது படைமுகாம்களோ அங்கிருந்து விலக்கிக் கொள்ளப்படாது.

2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர். பல்வேறு இராணுவ முகாம்களுடன் இணைந்திருந்த தனியார் காணிகள் காலத்துக்குக் காலம் மீள ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு படையினரைப் பேணுவது அவசியம். நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான படையினர், படைத் தளபாடங்கள், ஆயுதங்கள் என்பன, தொடர்ந்து பேணப்படும்.

வடக்கு கிழக்கில் படையினர் விழிப்பு நிலையில் இருக்கின்றனர். நிலைமைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

எந்தவொரு தீவிரவாத  செயல்கள் விடயத்திலும், சகிப்புத் தன்மை காட்டப்படமாட்டாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *