மேலும்

மகிந்தவை விடவும் சீனாவுக்கு வேண்டியவராகிவிட்ட மைத்திரி – உபுல் ஜோசப் பெர்னான்டோ

maithri-xi (3)சீனா தற்போது மைத்திரிபால சிறிசேனவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. சீனாவுக்கான அவரது பயணத்தைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்சவைவை விட மைத்திரிபால சிறிசேன தனக்கு மிகவும் வேண்டியவர் என்பதை சீனா உணர்ந்துள்ளது.

இவ்வாறு, ‘சிலோன் ருடே’ நாளிதழில், ‘உபுல் ஜோசப் பெர்னான்டோ’ எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக, மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.

கடந்த வாரம் சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது, சீன நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின் எதிர்காலம் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.

துறைமுக நகரத் திட்டத்தை அமுல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தடையானது, சீனா மற்றும் சிறிலங்கா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுமூகமான உறவைப் பாதிக்கலாம் என ஊடக ஆசிரியர் ஒருவர் சுட்டிக்காட்டிய போது, இந்திய மாக்கடலில் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் சிறிலங்கா அமைந்துள்ளதால் எல்லா நாடுகளுடனும் நல்லதொரு உறவைப் பேண வேண்டியது சிறிலங்காவைப் பொறுத்தளவில் இன்றியமையாத விடயமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்தார்.

ரணில் இக்கருத்தைத் தெரிவித்த போது சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன சீனாவில் தங்கியிருந்தார். சீனாவுக்கு மைத்திரிபால சிறிசேன பயணம் செய்த போது சிறிலங்காவில் சிறுநீரக வைத்தியசாலை ஒன்றை அமைத்துத் தருவதாக சீனா வாக்குறுதி வழங்கியது. இது சீனர்களின் தந்திரோபாயமாக உள்ளது என்பதை வரலாறு கூறுகிறது.

1970-77 காலப்பகுதியில் சிறிலங்காவை ஆட்சிசெய்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு, மறைந்த அவரது கணவரான முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ,ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவாக  அமைக்கப்பட்ட, பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக மாநாட்டு மண்டபத்தை அன்பளிப்பாக வழங்கியது சீனா.

இதேபோன்று சிறிலங்காவின் அதிபராக சந்திரிகா பதவி வகித்த போது, இவரது கணவரான பிரபல நடிகரான மறைந்த விஜய குமாரதுங்கவின் நினைவாக கலாசார அரங்கம் ஒன்றை நிர்மாணித்துத் தருவதற்கான விருப்பத்தை சீனா வெளிப்படுத்தியது.

இது பின்னர் நெலும் பொக்குன என்ற பெயரில் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் திறப்பதற்கான வாய்ப்பை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவே பெற்றிருந்தார்.

மகிந்தவின் சொந்த இடமான அம்பாந்தோட்டையில் சீனாவால் துறைமுகம் மற்றும் விமானநிலையம் போன்றன நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

தற்போது, நாட்டின் வடமத்திய பகுதியில் சிறுநீரக நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இங்கே இந்நோயைக் கட்டுப்படுத்தக் கூடிய முழுமையான வசதிகளைக் கொண்ட வைத்தியசாலை ஒன்றை நிர்மாணித்துத் தருவதாக சீனா வாக்குறுதி வழங்கியுள்ளது.

சிறிலங்காத் தலைவர்களின் தேவைகள் என்ன என்பதை சீனா நன்கு அறிந்து வைத்துள்ளது என்பதையே சீனாவின் நகர்வுகள் வெளிப்படுத்துகின்றன.

சிறிலங்கா அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பரப்புரையின் போது வடமத்திய மாகாணப் பகுதியில் மிகஎளிதாகப் பாதிக்கப்படும் சிறுநீரக நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பேன் என மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்தார்.

ஆகவே சீனா தற்போது மைத்திரிபாலவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது.

மைத்திரிபால சீனாவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து, மகிந்தவை விட மைத்திரிபால தனக்கு மிகவும் வேண்டியவர் என்பதை சீனா உணர்ந்துள்ளது.

ஏனெனில் மேற்குலகுடனும் இந்தியாவுடனும் மகிந்த ராஜபக்ச விரோதத்தை வளர்த்ததுடன் இவர் சீனாவின் அதிகாரத்தின் கீழ் செயற்பட்டார். தற்போது இந்தியாவுடனும் மேற்குலகுடனும் மைத்திரிபால நல்லுறவைக் கட்டியெழுப்புவதன் காரணமாக, அவரைத் தனது பக்கம் இழுத்தெடுப்பதற்கான முயற்சியில் சீனா இறங்கியுள்ளது.

மைத்திரிபால சீனாவுக்கான தனது பயணத்தை மேற்கொண்ட போது சீனாவில் எவ்வாறான நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை இந்தியா கூர்ந்து அவதானித்தது.

Mattala Rajapaksa International Airport

மத்தள விமான நிலையத்தை குத்தகைக்கு எடுப்பதற்கு கட்டார் மன்னர் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

சீனாவைப் போன்று தனது நிதியை அள்ளிவீசுவதற்கு இந்தியா தயாராக இல்லை. சிறிலங்காவில் சீனாவால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுடன் அமெரிக்காவின் ஊடாகப் போட்டியிடுவதென்பதே இந்தியாவின் திட்டமாகும்.

கட்டார் நாட்டின் மன்னர் அண்மையில் கொழும்பிற்கான தனது பயணத்தை மேற்கொண்டிருந்தமை இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். மத்தள அனைத்துலக விமான நிலையத்தை குத்தகைக்கு எடுப்பதற்கான தனது விருப்பத்தை கட்டார் மன்னர் வெளிப்படுத்தியிருந்தார்.

மத்தள விமான நிலையம் சீனாவால் முன்னெடுக்கப்பட்ட திட்டமாகும்.இது தற்போது நட்டத்தில் இயங்குகிறது. இங்கு தற்போது எவ்வித விமானங்களும் பறப்புக்களில் ஈடுபடுவதில்லை. இந்த நட்டத்தை சிறிலங்காவால் ஈடுசெய்ய முடியாது என்பதன் காரணமாகவே கட்டார் அரசு இதனை குத்தகைக்கு எடுப்பதற்கான தனது ஒப்புதலை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

கட்டார் அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடாகும். தனது நாட்டிற்குச் சொந்தமான அல்-உடையிட் விமானத் தளத்தை அமெரிக்க விமானப்படையினர் பயன்படுத்துவதற்கான அனுமதியை கட்டார் வழங்கியுள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்தளவில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கட்டார் விமானத் தளம் மிகவும் பயனுள்ளதாகும்.

அமெரிக்காவின் ஆசியுடனேயே மத்தள விமான நிலையத்தை குத்தகைக்கு எடுப்பதற்கான தனது ஒப்புதலை கட்டார் வழங்கியிருக்கலாம்.

மத்தள விமான நிலையத்தை வேறு சில நாடுகள் குத்தகைக்கு எடுக்கத் தீர்மானித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பான சீனாவின் எண்ணம் என்பதை துல்லியமாக எதிர்வுகூற முடியவில்லை.

எனினும், சீனாவுக்கான மைத்திரியின் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, இந்திய மாக்கடலில் உருவாக்கப்படும் எந்தவொரு சீனத் தளங்களும் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் வெளிப்படையாக அறிவித்திருந்தார்.

இந்திய மாக்கடலில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதானது இந்தியா உட்பட பூகோள மற்றும் பிராந்திய நாடுகளுக்குப் பாதிப்பை உண்டுபண்ணும் என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் டோவல் குறிப்பிட்டுள்ளார்.

உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றமானது அனைத்துலக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும் எனவும், இந்திய மாக்கடலில் சீனா தனது இராணுவத் தளங்களை உருவாக்குவதானது இப்பிராந்தியத்தின் அமைதிநிலையை நிச்சயம் பாதிக்கும் எனவும் டோவல் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘சீனா தனது செயற்பாடுகளை விரிவுபடுத்துவதானது யதார்த்தமாகும். இதன்மூலம் சீனா வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முற்படுகிறது. அத்துடன் வலுவான இராணுவ மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் விரிவுபடுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது.

சீனாவின் வளர்ச்சி என்பது ஒரு வியத்தகு மாற்றம் என்பது உண்மைதான். சீனா எதைச்செய்தாலும் அது அனைத்துலக ரீதியாகப் பாதிப்பைச் சந்திக்கும் என்பதும் உண்மையாகும். இந்திய மாக்கடல் பிராந்தியமும் பாதிக்கப்படும். இந்தியாவும் இதனால் பாதிக்கப்படும். ஆகவே அனைத்துலக ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படும் விதமாக உலக ஒழுங்கில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என நாம் கருதுகின்றோம்’ என ‘The Growth Net’  என்கின்ற தலைப்பில் மூன்று நாட்களாக இடம்பெற்ற அனைத்துலக கருத்தரங்கில் டோவல் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவியேற்றதிலிருந்து சீனாவின் வழமைக்கு மாறான வளர்ச்சி தொடர்பாக டோவலால் முன்வைக்கப்பட்டுள்ள முதலாவது வெளிப்படையான உறுதியான கருத்தாக இது நோக்கப்படுகிறது.

இந்திய மாக்கடலில் சீனாவின் பிரசன்னம் அதிகரிப்பது தொடர்பாக மோடி அரசாங்கத்தின் கீழ் சீனாவுடன் மேற்கொள்ளப்படும் 18வது சுற்று சிறப்பு பிரதிநிதித்துவ மட்ட பேச்சுக்களை டோவல் தற்போது நிறைவு செய்துள்ளார்.

இந்திய மாக்கடலின் கரையோர பட்டுப்பாதை மூலோபாயம் தொடர்பான சீனாவின் கரையோர முயற்சிகள் தொடர்பாக வினவியபோது, இப்பிராந்தியத்தில் இராணுவத் தளங்களை அமைப்பதன் மூலம் இங்கே மோதல் நிகழ வழியேற்படாது என டோவல் பதிலளித்தார்.

‘1971ல் ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய மாக்கடல் பிராந்தியமானது சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இப்பிராந்தியத்தை அமைதிமிக்கதாகத் தக்கவைத்துக் கொள்வதில் இந்தியா ஆர்வங்காண்பித்தது. கடல்சார் பாதைகளில் சுதந்திரமான போக்குவரத்து உறுதிசெய்யப்படும் என நாங்கள் நம்புவோம்’ என இந்திய மாக்கடலில் சீனாவின் இலட்சியங்கள் நிறைவேற்றப்படுவது தொடர்பாக இந்தியாவின் கருத்து என்ன என்பதை வினவியபோதே டோவல் இவ்வாறு பதிலளித்தார்.

தனது பட்டுப்பாதை மூலோபாயத் திட்டத்தின் முக்கியத்துவத்தை சிறிலங்கா அதிபரின் சீனப் பயணத்தின் போது, சீனா வலியுறுத்தியது. அதேவேளை, சீனாவின் மூலோபாயத்தைத் தோற்கடிப்பதற்கு,  இந்தியா, அமெரிக்காவைப் பயன்படுத்த முயற்சிப்பது போல் தெரிகிறது.

இந்தநிலையில், இந்தியா, சீனா மற்றும் சிறிலங்கா ஆகிய மூன்றும் இணைந்து ஏன் பணியாற்றக் கூடாது என சீன அதிபர், சிறிலங்கா அதிபரிடம் வினவியதாக சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்ததாக இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இந்திய மாக்கடலில் அமெரிக்காவின் பிரசன்னத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்துகின்ற சீனாவின் திட்டமாக இது இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *