மேலும்

சம்பூரில் ஏப்ரல் இறுதிக்குள் 579 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படுவர் – ஒஸ்ரின் பெர்னான்டோ

austin-sampoorதிருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூரில், இருந்து இடம்பெயர்ந்த 579 குடும்பங்கள், ஏப்ரல் மாத இறுதிக்குள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியர்த்தப்படுவர் என்று கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு வசதியாக, அந்த இடத்தில் தற்போது உள்ள கடற்படைப் பயிற்சி முகாம், அருகில் வேறோரு இடத்துக்கு மாற்றப்படும்.

அந்தப் பகுதியில், இந்தியா மற்றும் ஜப்பானிய நிதியுதவியுடன், இரண்டு அனல்மின் திட்டங்களை நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுடன் நான் கலந்துரையாடல் நடத்தியிருந்தேன். அவர்கள், அனல்மின் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

எவ்வாறாயினும், அனல்மின் திட்டங்களைச் சுற்றிய பகுதிகளில், சுற்றாடல் பாதிப்புகள் இருக்கும். சுற்றாடல் பாதிப்புகள் குறித்த கரிசனைகளால், அனல்மின் திட்டப் பகுதிகளை அண்டி, மீள்குடியேற்றம் இடம்பெறாது.

மொத்தமாக 822 குடும்பங்கள், நான்கு முகாம்களில் வசிக்கின்றன. அவர்களில் 579 குடும்பங்கள் சம்பூரை சேர்ந்தவை.

தற்போது கடற்படைப் பயிற்சி முகாம் அமைந்துள்ள பகுதியில் தான் மீள்குடியேற்றம் இடம்பெறும். அது கடற்படையின் அடிப்படைப் பயிற்சி முகாமாகும்.

இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். இடம்பெயர்வதற்கு முன்னர், குறித்த பிரதேசத்தில் வசித்த மக்களை அடையாளத்த் உறுதிப்படுத்த வேண்டும்.

வாக்காளர் பட்டியலை அதற்கு பயன்படுத்தலாம். எம்மால் 579 குடும்பங்களை பரிசீலிக்க முடியும்.வெளியில் இருந்து எவரையும் கொண்டு வரமாட்டோம்.

எனினும், இடம்பெயர்ந்த மக்கள் இழப்பீட்டைப் பெற்றிருந்தால், அவர்கள் மீளக்குடியேற முடியாது.

அந்தப் பகுதியில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு, 1500 ஏக்கர் நிலம் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தில், 800 ஏக்கரை திரும்பவும் பொது மக்களுக்கு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையிலேயே, இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மனிதர்கள் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *