மேலும்

மீண்டும் அரசியலுக்கு வருவாரா மகிந்த ராஜபக்ச? – கேணல் ஹரிகரன்

col-hariharan-1மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக சுமத்தப்படும் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்படாவிட்டால், ராஜபக்சவை ஆதரிக்கும் 5.8 மில்லியன் வாக்காளர்களும் அவரை ஒரு அதிகாரத்துவ ஆட்சியாளராக நோக்குவதை விட, ஒரு அரசியல் தியாகியாகவே கருதுவார்கள்.

இவ்வாறு, ‘சிலோன் ருடே’ நாளிதழில், இந்திய ஆய்வாளரான ‘கேணல் ஆர்.ஹரிகரன்’ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.

ஜனவரி 2015ல் இடம்பெற்ற சிறிலங்கா அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, பிரதமராக வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கிறாரா?

சிறிலங்காவில் தற்போது செயற்படும் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் நகர்வுகளும், ராஜபக்சவுக்கு ஆதரவான அரசியற் சக்திகளின் செயற்பாடுகளையும் விரிவாக நோக்க வேண்டும். சிறிலங்காவின் அரசியற் சூழ்ச்சிகளின் தலைவராக விளங்கும் ராஜபக்ச மீண்டும் பிரதமராகலாம் என்கின்ற சந்தேகம் ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களின் ஊகமாகக் காணப்படுகின்றது.

மகிந்த ராஜபக்ச பத்து நாட்களுக்கு முன்னர் ‘தி ஹிந்து’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கூட தான் மீண்டும் அரசியலுக்கு உள்நுழையவுள்ளதாக நேரிடையாகக் கூறவில்லை. இதற்குப் பதிலாகத் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் மோசடி விசாரணை தொடர்பாக முறைப்பாடு செய்ததன் மூலம் தன்னை ஒரு ‘தியாகியாகச்’ சித்தரிப்பதற்கு இவர் முயற்சி செய்துள்ளார்.

mahinda

‘நான் இந்த அரசாங்கத்திற்கு எனது ஆதரவை வழங்குகிறேன். ஆனால் அவர்கள் எம்மீது மோசடிக் குற்றச்சாட்டை முன்வைத்து எம்மைச் சிறையிலடைக்க விரும்புகிறார்கள். எங்களுடைய கடவுச்சீட்டுக்களை எவ்வித சாட்சியமுமின்றி எடுத்துள்ளனர். இவ்வாறான ஒரு சூழலில் நான் எவ்வாறு அரசியலிலிருந்து ஓய்வுபெற முடியும்? நான் ஓய்வுபெறப் போகிறேன் என ஒருபோதும் கூறவில்லை. தற்போது நான் ஓய்வெடுக்கிறேன்’ என ராஜபக்ச நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே ஏப்ரல் 2015ல் சிறிலங்காவில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் ராஜபக்ச போட்டியிட விரும்புகிறார் என்பது உறுதியாகிறது.

நிச்சயமாக, ராஜபக்ச மற்றும் அவரது உறவினர்களுக்கு எதிராக நாள்தோறும் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், முன்னாள் அதிபர் தனது தீர்மானத்தை மிக விரைவாக எடுக்க வேண்டியுள்ளார். ராஜபக்சவாலும் அவரது உறவினர்களாலும் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் போன்றன இவர்களின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

ஆனால் இக்குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்படாவிட்டால், ராஜபக்சவை ஆதரிக்கும் 5.8 மில்லியன் வாக்காளர்களும் ராஜபக்சவை ஒரு அதிகாரத்துவ ஆட்சியாளராக நோக்குவதை விட இவரைத் தொடர்ந்தும் ஒரு அரசியல் தியாகியாகவே கருதுவார்கள்.

மக்களின் மனநிலையைத் தனக்குச் சாதகமாகத் தக்கவைத்துக் கொள்வதில் ராஜபக்ச மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுவது போல் தெரிகிறது. அரசியல் போட்டியில் மீண்டும் குதிப்பதற்கு முன்னர் சிங்கள மக்களின் ஆதரவை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கான நகர்வுகளிலும் ராஜபக்ச ஈடுபடுகிறார்.

இவரது ஆதரவாளர்களாலும் தேசிய சுதந்திர முன்னணி போன்ற சிறிய கட்சிகளாலும் ஒழுங்குசெய்யப்பட்ட இரண்டு ஆர்ப்பாட்டப் பேரணிகள் மிகவும் சிறப்பாக நடந்தேறின. இப்பேரணியில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ராஜபக்ச பொதுத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் ஆட்சிப்பீடத்தில் அமரவேண்டும் என உந்துதலளிப்பதாகக் காணப்பட்டது.

ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என சிறிய கட்சிகள் விரும்புவதில் தனிப்பட்ட நலன் உள்ளடங்கியுள்ளது. இவர் மீண்டும் ஆட்சியைப் பிடிக்காவிட்டால் தேசிய சுதந்திர முன்னணி, தொழிற்கட்சி மற்றும் மகாஜன எக்சத் பெரமுன போன்ற கட்சிகள் அரசியலிலிருந்து விலக வேண்டிய நிலையேற்படலாம். ஏனெனில் இவை அனைத்தும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு நலன்களைப் பெற்றிருந்தன.

ராஜபக்சவோ அல்லது இவரால் பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியோ ஆர்ப்பாட்டப் பேரணிகளில் பங்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்விரு ஆர்ப்பாட்டப் பேரணிகளும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவில் தலைமையிலேயே மேற்கொள்ளப்பட்டது.

பொய்யான காரணத்தை முன்வைத்து விமல் வீரவன்சவின் மனைவியார் இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்தைத் தனிப்பட்ட ரீதியில் விமல் வீரவன்ச எதிர்த்து நிற்கிறார். இதனால் இவர் ராஜபக்சவுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் மூன்று முக்கிய விடயங்களைத் தாம் இழந்து விடுவோமோ என சிங்கள மக்களும் அரசியற் கட்சிகள் சிலவும் கருதுகின்றன.

ராஜபக்ச இல்லாதவிடத்து அரசியல் நிலைத்தன்மை பாதிக்கப்படும் எனவும், நாட்டில் தொழில்வாய்ப்பு மற்றும் அபிவிருத்தி வாய்ப்புக்களை வழங்கும் சீனாவின் பாரிய திட்டங்கள் தடைப்படலாம் எனவும் புலிகள் மீண்டும் தலையெடுக்கலாம் எனவும் சிங்கள மக்களும் அரசியற் கட்சிகள் சிலவும் அச்சம் கொள்கின்றன.

இப்பரப்புரையில் இடதுசாரிக் கட்சிகளின் பங்களிப்பானது சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை தடுப்பதற்கான ஒரு பயனுள்ள விடயமாகக் காணப்படலாம்.

19வது திருத்தச் சட்டத்தின் முக்கியத்துவத்தை சிறிலங்கா அரசாங்கம் அரசியல் யாப்பில் அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்த போது இதில் நாடாளுமன்றின் பிரதான எதிர்க்கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் கலந்துகொண்டது. 19வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றில் முன்வைப்பதன் மூலம் இதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான சிறிசேனவின் தந்திரோபாய நகர்வாக இது இருக்கலாம்.

தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறிசேன தலைமை தாங்குகின்ற போதிலும், கட்சிக்குள் உள்ள ராஜபக்சவின் ஆதரவாளர்களின் நகர்வுகளை முறியடித்து ராஜபக்சவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தடைப்படுத்தி ராஜபக்சவுக்கும் அவரது உறவினர்களுக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தண்டனை வழங்குவதை நோக்காகக் கொண்டிருக்கலாம்.

19வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றின் ஊடாக அரசியல் யாப்பில் இணைப்பதற்கான முயற்சிகளை தேசிய ஐக்கிய அரசாங்கம் விரைந்து முன்னெடுப்பதானது ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்கான நகர்வாகும். ராஜபக்சவுக்கு எதிராக சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட தேர்தல் பரப்புரையின் போது நிறைவேற்று அதிகார முறைமை நீக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது தேர்தல் ஆணையம், சுயாதீன காவற்துறை ஆணையம், பொதுச்சேவைகள் ஆணையம், அரசியல் சீர்திருத்தப் பேரவை போன்ற ஆணைக்குழுக்களை மீளவும் நிறுவுவதன் மூலம் நிறைவேற்று அதிபர் கொண்டுள்ள முக்கிய அதிகாரங்களைக் குறைப்பதற்காகவே 19வது திருத்தச் சட்டம் தொடர்பாக ஆராயப்படுகிறது.

நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழிப்பதற்கான ஒப்புதலை நாடாளுமன்றம் வழங்கியிருந்தாலும் கூட, இந்த விடயத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வலதுசாரி ஜாதிக ஹெல உறுமய நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழிப்பதை எதிர்த்து நிற்கிறது.

எனினும், சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்ற பின்னர் அமைக்கப்படும் புதிய நாடாளுமன்றின் கீழ் மேலும் முழுமையான அரசியல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பிலிருந்து வெளிவரும் ‘டெய்லி நியூஸ்’ ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

ஆகவே ராஜபக்ச அரசியற் களத்தில் இறங்குவதற்கு முன்னர் நன்றாக ‘ஓய்வெடுக்கின்ற போதிலும்’ இவர் சிறிதளவு, ஆனால் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது போலவே தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *