மேலும்

சீன-அமெரிக்க-இந்திய உறவுகளின் பண்புகள் – ஓர் ஒப்பீடு- II

us-india-chinaசீனாவை சர்வதேச விவகாரங்களில் தலையிட வைக்கும் அல்லது ஈடுபாட்டை உருவாக்கத் தூண்டும் மேலைத்தேய தந்திரோபாயத்தில், சிறீலங்காவின் சிறுபான்மை இனமாக காட்டப்படும் தமிழினமும் சிக்குப்பட வாய்ப்புகள் பல உள்ளன. புதினப்பலகை’க்காக *லோகன் பரமசாமி.

கடந்த கட்டுரையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உறவுக்கும், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் இருக்கக் கூடிய உறவுகளின் பண்புகளை ஆராயும் தொடர்ச்சியாக இந்த கட்டுரை அமைகிறது.

இந்திய அமெரிக்க உறவில், இந்தியாவின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கிலும், பொருளாதார வியாபார நலன்களை அதிகப்படுத்திக் கொள்ளும் போக்கிலும், அமெரிக்க செயற்பாடுகள் இருப்பதையிட்டு பார்க்கப்பட்டது.

அதேவேளை உலகில் சீனாவின் இராணுவ பொருளாதார மேலாண்மை  வளர்ச்சிக்கு பதிலீடாக, இந்தியாவை முன்னிறுத்தி, இந்தியாவின் ஊடாகவே சீனாவை பல சமநிலைக்குள் உள்ளாக்கும் கொள்கையை அமெரிக்கா கொண்டிருக்கிறது என்பதும் பார்க்கப்பட்டது.

ஆனால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் ஒரு மாறுபட்ட கோணத்தில் உள்ளன. பூகோள முகாமைத்துவம் குறித்ததான வகையிலேயே இது பார்க்கப்படுகிறது. சிக்கல் மிகுந்த செலவுகள் மிகுந்த  உலக நாடுகளுக்கிடையிலான உறவு நிலையைக் கையாளும் பொறுப்புகளுக்குள் சீனாவைச் சிக்கவைக்கும் அதேவேளை, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார நலன்களை அடையக்கூடிய பொறுப்புகளிலிருந்து தள்ளிவைக்கும் தன்மை ஒன்று தெரிகிறது.

இந்த சர்வதேச மேலாண்மைக்கான நகர்வுகளில் பிரதானமாக இந்து சமுத்திர பிராந்தியம்,  பிரதான பாத்திரத்தை பூகோள அரசியலில் கொண்டிருக்கிறது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்திய வல்லரசின் பிராந்திய அரசியல் கட்டுப்பாட்டு எல்லைக்குள் இருக்க கூடிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளுக்கு, அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பயணமும் இதன் அடிப்படையிலேயே அமைந்திருந்தது என்பதை இந்திய கட்டுரையாளர்கள் வெற்றிப் பெருமிதத்துடன் கூறிக் கொள்வதிலிருந்து தெரிந்து கொள்ள கூடியதாக உள்ளது.

சீனாவுக்கும், இந்திய- அமெரிக்க கூட்டுக்கும் இடையிலான மேலாதிக்கப் போட்டி இன்று இந்து சமுத்திரத்துடன் நின்றுவிடாது தென்கிழக்காசிய  பிராந்தியங்கள் உட்பட சர்வதேச நாடுகள் அனைத்திலும் வலுவான, நேரடியான தாக்கங்களை விளைவித்து வருகின்றன. சீனாவின் சுய வளர்ச்சி குறித்த தன்னல அரசியல் கொள்கைகளுக்கும், அமெரிக்காவின் சர்வதேச அரசியல் தலைமைத்துவ போக்கிற்கும் இடையில் அகப்படும் எந்த அரச கட்டமைப்பும் பல்வேறு இராசதந்திர சிக்கல்களுக்குள் உட்பட்டு வருகின்றன. இதற்குள் சீன வளர்ச்சியுடன் தன்னை போட்டியாளனாக கருதும் இந்தியாவும் அடங்கும்.

நீண்டகால மேலாதிக்க நலன்களையும், தலைமைத்துவத்தையும் மையமாக கொண்டு, கிழக்காசிய நாடுககளில் தனது கூட்டுகளை அமெரிக்க வல்லரசு உருவாக்கி வருகிறது. ஆனால், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியின் நிமித்தம் பண்டங்களின் தேவையும் மூலப்பொருட்களின் நகர்வும் அதிகரித்து வரும் பருமனுக்கு ஏற்ப, சர்வதேச வர்த்தகத்தையும் அதற்கான வலைப்பின்னல் கட்டுமானங்களையும் அதிகரிக்க வேண்டிய நிலை சீனாவுக்கு உள்ளது.

ஆனால் சீனாவின் இந்த வளர்ச்சியின் போக்கில் தற்பொழுது உருவாக்கப்படும் கட்டுமானங்கள் உச்சநிலையை எட்டும்போது,  பாதுகாப்பு கேந்திர நிலைகளாக மாறுவதற்கு நிறைய சாத்தியங்கள் இருக்கிறது என்பது அமெரிக்க பார்வையாக உள்ளது. இங்கே யார் பிழை, யார் சரி என்பதற்கு அப்பால் சம்பவங்களின் பின்னணிகளையும், நீண்டகால நலன்களையும் கருத்தியல் பண்புகளையும் மையமாகக் கொண்டு பார்க்கப்படுமானால், அமெரிக்க-சீன உறவுத் தன்மையையும் உலகின் தற்போதைய போக்கையும் இலகுவாகக் காணலாம்.

சீன- அமெரிக்க உறவு கடந்த முப்பத்தைந்து வருட காலமாக பல்வேறு வகைகளிலும் முன்னேறி வருவதாகவே பார்க்கப்படுகிறது. 1972ஆம் ஆண்டு  அமெரிக்க சனாதிபதி ரிச்சார்ட்டு நிக்சன் காலத்தில் அமெரிக்காவுக்கு சோவியத் ரஷ்யாவை உள்ளடக்கிக் கொள்ளும் தேவையின் நிமித்தம் புதிய மக்கள் சீன குடியரசுடன் உறவு வைத்து கொள்வது அவசியமாகப்பட்டது.

விட்நாமிய யுத்தத்தை நிறைவு செய்து கொள்வதற்கும், சீனாவிலிருந்து மிகக்குறைந்த செலவில் ஒப்பீட்டு பொருளாதார அளவீடுகளுக்கு ஏற்ப ஆரம்பக் கட்டத்தில் சிறியவகை வர்த்தக உடன்படிக்கைகளை உருவாக்கிக் கொள்வதற்கும் அமெரிக்க- சீன உறவு மேலும் பயன்பட்டது.

அத்துடன் இந்து சமுத்திர பாதுகாப்பு நிலையிலிருந்து பார்க்க வேண்டுமாயின், வங்காளதேச உருவாக்க வரலாற்று காலத்திலிருந்து பார்ப்பது முக்கியமாகிறது. அது 1971 டிசம்பர் மாதம் 3ஆம் திகதி, இந்தியப்படைகள் வங்காளதேசத்தினுள் நுழைந்த போது அமெரிக்கா  USS Enterprise என்ற அணுஆயுத நாசதாரி கப்பலை வங்கக்குடாவில் நிறுத்தியது.

பாகிஸ்தானிய படைகள் வங்காளதேசத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் யுவதிகளையும் படித்தவர்களையும் கொன்று குவித்த போது, அது பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினை என்ற பார்வையில் இருந்த அமெரிக்கா, பாகிஸ்தான் வங்கப் போரிலே வெற்றி கொள்ள முடியாத நிலை ஏற்பட்ட போது, இந்த அணுஆயுத மிரட்டலை இந்தியாவுக்கு எதிராகப் பிரயோகித்தது.

இந்த மிரட்டலுக்குப் பதிலாக சோவியத் சோசலிச குடியரசு, வெல்லாடிவாஸ்ரெக் தளத்திலிருந்து தனது இரண்டு அணுஆயுத கப்பல்களை இந்தியாவுக்கு ஆதரவாக வங்கக்கடலிலே நிறுத்தியது. அமெரிக்காவின் நீண்டகாலக் கூட்டாளியான பாகிஸ்தானின் நெருங்கிய கூட்டு நாடாகவும் சீனா இருந்தது. இந்நிலையில் தான் சீனாவுக்கு அன்றைய அமெரிக்க அதிபர் றிச்சார்ட்டு நிக்சன் அவர்கள், முதன் முறையாக பயணம் மேற்கொள்ள இருந்தார். இதனால் அமெரிக்க-சீன உறவு மௌனமான, tacitally முறையில் சினேகித நிலை இருந்தது.

மிகப்பெரிய படைநகர்வின் காட்சியாகவும் அயல்நாட்டில் இடம்பெறும் மனிதப்படுகொலைகளைத் தட்டிக் கேட்கும் ஒரு வல்லரசின் செயற்பாடாகவும் காணப்பட்ட வங்க யுத்தம், இரண்டாம் உலகப்போரின் பின்னர், அதிக ஆளணி, காலாட்படைகள் சரணடைந்த யுத்தமாக அமைந்தது.

ஆனால் அன்றைய இந்திராகாந்தி அரசு மூன்று மாத காலத்திற்குள் அனைத்து பாகிஸ்தானியப் படைகளையும் விடுவித்து விட்டது. இந்த இந்திய நன்நடத்தையூடாக சோவியத்தின் செல்வாக்கு ஏற்கனவே இந்தியாவில் இருப்பது போல, பாகிஸ்தானிலும் உருவாகக் கூடிய ஒரு நிலை தென்பட்டது.

என்னதான் நீண்டகால நண்பனாக இருந்தாலும், வங்க யுத்தத்தில் சோவியத்தின் தலையீட்டினால்  அமெரிக்காவுக்கு கையாலாகாத நிலை ஏற்பட்ட காரணத்தால்,  இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சோவியத்தின் செல்வாக்கு மேலோங்கக் கூடிய தன்மை வலுவடைந்ததை சரி செய்யும் பொருட்டு, சீனாவூடாக வியாபார முறையிலான பாகிஸ்தானுக்கான ஆயுத உதவிகள் அமெரிக்காவினால் செய்யப்பட்டது.

ஆனால், பின்பு 80களின் இறுதியில் சோவியத்தின் வீழ்ச்சியும் மேலை நாடுகளிடத்தில் முதலாளித்துவ இலாபத்தை அதிகம் பெருக்கும் ஒப்பீட்டு பொருளாதார முறையில் குறைந்த செலவிலான உற்பத்திப் போக்கின் வளர்ச்சியும் இதனால் ஏற்பட்ட உள்நாட்டு வேலைவாய்ப்பும் சீன பொருளாதாரத்திற்கும், அரசியல் நிர்வாக கட்டுமான செலவீனங்களை நிவர்த்தி செய்யவும், இராணுவ ஆளனி வளர்ச்சிக்கும் அடிகோலியது.

உள்நாட்டுப் பொருளாதார புள்ளிவிபரங்கள் எதுவும் வெளியே விடப்படாத நிலையில், மிகவும் கவனமாக திட்டமிடக்கூடிய கூட்டு தலைமைத்துவத்தின் பண்பும், அமெரிக்காவை ஒர் சமூக வாழ்க்கைத்தர, பொருளாதார வளர்ச்சி அளவீட்டு குறியாக கொண்ட சீன கொள்கையும், பிற்காலத்தில் சர்வதேச மட்டத்தில் சீனா முதலிடத்தைப் பெற்றுக் கொள்ளும் நிலைக்குச் செல்லக்கூடும் என்ற அச்சத்தை மேலைத்தேய பொருளியல் புள்ளிவிபர அடிப்படையிலான ஆய்வுகள் கண்டறியக் கூடிய நிலை எழுந்தது.

உற்பத்தி நுகர்வு குறித்த கற்கைகள், சீன வேலைவாய்ப்பும் சமூக வளர்ச்சியும் குறித்த ஆய்வுகளில் தமது ஈடுபாட்டைக் காட்டத் தலைப்பட்டன. இது  உலகில் அமெரிக்கத் தலைமைத்துவம் குறித்த கேள்விகளில் சீன வளர்ச்சி பெரும் தாக்கத்தை விளைவிக்கக் கூடிய நிலை அறிந்து கொள்ளப்பட்டது.

மேலும் 80களின் இறுதியிலும் 1990களின் ஆரம்பத்திலும் இரண்டு முரண்பட்ட கருத்தியல்களான தாராள சனநாயக வாதத்திற்கும், கம்யூனிச வாதத்திற்கும் இடையில் இருந்து வந்த போட்டி கம்யூனிசத்தின் வீழ்ச்சியால் முடிவுக்கு வந்தது. மேலைத்தேய நாடுகளின் ஆய்வாளர்கள் தாராள சனநாயக வாதத்தின் வெற்றி அடிப்படை கருத்தியல்களின் முடிவோ என எண்ணவும் தலைப்பட்டனர். Francis Fukuyama என்ற ஆய்வாளரின் கருத்துகள் மூலம் இதனை கண்டு கொள்ளலாம்

ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற புதிய சமய அரசியல் கருத்தியலின் வளர்ச்சி தாராள சனநாயகத்தின் வெற்றிகளை மீண்டும் கேள்விகளுக்குள் உள்ளாக்கியது. உலகின் பிரதான எதிரியாகவும் மேலை நாடுகளால் பார்க்கப்பட்டது. ஆனால் இஸ்லாமியம் வெட்ட வெட்டத் தழைக்கும் மரமாக முடிவு இன்றி சென்று கொண்டிருந்த வேளை, இஸ்லாமியத்தால் அதிகம் பாதிக்கப்படாத நாடான  சீனாவின் அதீத வளர்ச்சி அமெரிக்க தலைமைத்துவத்தையே கேள்விக்கு இடமாக கூடிய நிலையை வலியுறுத்திய போது, கிழக்கு நோக்கிய மீள்பார்வை செய்ய வேண்டிய கட்டம் ஏற்பட்டது.

இந்த மீள் பார்வையில் சீன கம்யூனிசமும் அதன் சர்வதேச நாடுகளிடையேயான முதலீடுகளும், மேலைத்தேய வங்கிகள், சொத்துகள் மீதான பொறுப்புகள் காரணமாக சீனாவை நேரடியாகவோ மறைமுகமாகவோ சிதைவடைய செய்யமுடியாத நிலை உணரப்பட்டது. அத்துடன் யுத்த குணங்கள் அற்ற சீனாவை, ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டுமாயின் சனநாயகம், மனித உரிமை, சர்வதேச விவகாரங்களுக்குள் தலையிட வைத்தல், சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை மட்டுமே ஆயுதமாக பயன்படுத்த வேண்டிய புதிய யுக்திகள் அமெரிக்க சமூக அரசியல் பொருளாதார பாதுகாப்பு ஆய்வாளர்களால் வகுக்கப்பட்டது.

இத்தகைய இன்றைய நிலையில் சீனா குறித்த சரியான கருத்தியல் வரையறைகளை வகுத்துத் கொள்ள முடியாத தன்மை இருப்பதாகவே கருதப்படுகிறது. ஆனால் மேலைத்தேய பிரபல அரசியல் கோட்பாட்டாளர்களும் தத்துவ மேதைகளுமான John Locke ,Thomas Hobbs போன்றவர்களின் அடிப்படை கொட்பாடுகளை பின்பற்றும் வகையில், “நலன்களின் அடிப்படையிலேயே மனித இனம் வளச்சி அடைகிறது. புலம் மிகுந்த தலைமையாளன் ஒருவன் இருப்பதன் மூலமே உலகின் ஒழுங்குகள் அமையப்பெறும்” என்ற கோட்பாடுகளை விட்டு விலகாது, சீனா மீதான அணுகுமுறைகளை வகுத்து நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த அணுகுமுறை நகர்வுகளிற்கு ஏற்ப இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் கிழக்கு, தென்கிழக்காசிய பிராந்தியத்திலும் தனது மேலாதிக்கத்திற்காக சீனாவுடன் அமெரிக்கா போட்டியில் உள்ளது. ஆனால் தனித்து நின்று சீனாவை முறியடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதானது, முன்பு சோவியத்தின் போட்டியை கையாள சீனாவை தனது நண்பனாகப் பார்த்த அமெரிக்கா, இன்று முன்பு சோவியத்தின் நண்பனாக கருதப்பட்ட இந்தியாவை சீன கையாள்கைக்காக பயன்படுத்துவது கவனிக்கத்தக்கது.

அதேவேளை சீன- அமெரிக்க உறவு பல்வேறு முரண்பாடுகளுக்கு மத்தியில் பொருளாதார நலன்கள் மற்றும், அதன் வலைப்பின்னலின் அடிப்படையிலும் நகர்ந்து கொண்டு செல்கிறது.

கொரிய யுத்த காலமாயினும் சரி, தாய்வான் தீவை உரிமை கோரும் விடயமாயினும் சரி, திபெத்திய மக்களின் சீன படையெடுப்பிற்கு எதிரான கிளர்ச்சிகளாயினும் சரி, தியனமென் படுகொலைகளாயினும் சரி,  இறுதியாக அண்மையில் இடம்பெற்ற தென்சீனக் கடல் பகுதியில் இடம்பெற்றுவரும் அதிகார இழுபறிகளாயினும் சரி, எந்த ஒரு காரணத்தை வைத்தும் சீனாவை நேரடியாக ஏனைய பிராந்திய நாடுகளை போல் சிதைத்துவிட முடியாத நிலை அனைத்து தாராள சனநாயக கொள்கை நாடுகளுக்கும் உள்ளது.

பதிலாக அமெரிக்காவோ உலகின் புவியியல் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நில, கடல், வான்பரப்புகளில் சீன வளர்ச்சிகளையும் அதன் கூட்டுகளையும்  இனம்கண்டு அதிகார மேலாண்மையை நிலைப்படுத்தும் போட்டியில் உள்ளது. இது ஏற்கனவே குறிப்பிட்டது போல, இந்து சமுத்திர பிராந்தியம் உட்பட சோவியத் கம்யூனிச காலத்தில் எவ்வாறு அதற்கு எதிராக சினேகித நாடுகளை தம் வசப்படுத்த முயன்றதோ, அதேபோல சீன கம்யூனிசத்திற்கு எதிராக தற்போது போட்டி போட்டு வருகிறது.

ஆனால் ஒரு மாறுபட்ட நிலை என்னவெனில், சோவியத்துடன் கூட்டு சேர்ந்திருந்த நாடுகள் தத்தமது நாடுகளில் பல சமூக பொருளாதார மாற்றங்களை உருவாக்கி இருந்தன. தற்போது சீனா உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை.

பொருளாதார, சர்வதேச வர்த்தக வளர்ச்சியின் பயனாக சர்வதேச கடல் போக்குவரத்தை தடைகளற்றதாக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக அமைத்து கொள்ள வேண்டிய நிலை சீனாவுக்கு ஏற்பட்டுள்ளது. உலகின் கப்பற்போக்குவரத்தில் கடல்வழி ஒழுங்கைகளில் காணப்படும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகப் பகுதிகளை கையகப்படுத்த வேண்டிய நிலைக்கு சீனா வந்துள்ளது.

தென்சீனக் கடற்பரப்பு, சிங்கப்பூர், இந்தோனேசியா, பர்மா, வங்காளதேசம், சிறீலங்கா, மாலைதீவு, பாகிஸ்தான், ஆபிரிக்க நாடுகளை தனது வர்த்தக பொருளாதார உடன்படிக்கைகள் மூலமும், கடன் உதவித்தொகைகள் மூலமும் தனது தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் போக்கைக் கொண்டதாக உள்ளது.

உள்நாட்டிலே எவ்வாறு தனது உறுதியான கட்டுமானங்களை சீனா அமைத்ததோ, அதேபோல வெளிநாடுகளுடனும் அமைத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.  ஆனால் இது நீண்டகால அமெரிக்க ஆசியப் பிராந்திய வலுநிலைக்கு மேலும் அச்சுறுத்தலாக அமையும் என்பது வலு சமநிலை குறித்த ஆய்வாளர்களின் பார்வையாகும்.

தற்கால உலகம் தன்னல நோக்குடனான விதிகளையும் சட்டதிட்டங்களையும் கொண்ட சர்வதேச முறைமையினால் கட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விதிகளும் சட்ட திட்டங்களும் பிராந்திய வலுநிலைகளுக்கு ஏற்ப பலாபலன்களை அனுபவிக்கும் தன்மை கொண்டதாகவே உள்ளது.

சிறிய, வலுக் குறைந்த நாடுகள் தற்கால நடைமுறை உலக ஒழுங்கிற்கு ஏற்றாற்போல் தமது நலன்களை முன்னிலைப்படுத்திப் பார்க்கின்றன. மனித உரிமை, சனநாயகம்; மனித குலத்திற்கு பேரழிவு ஏற்படுத்த கூடிய ஆயுதங்களை உற்பத்தி செய்தல், அவற்றை விற்பனை செய்தல், சூழல் மாசுபடுத்தல் கட்டுப்பாடுகள், சர்வதேச சட்டங்களை உருவாக்குதல், விதிமுறைகளை உருவாக்குதல் எல்லாம் பலம்வாய்ந்த அரசுகளின் நலன்களின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது.

சீன வெளியுறவு கொள்கையை பொறுத்தவரையில் அதற்கு இன்னமும் முன்னுரிமை வழங்கவில்லை என்பதை இறுதியாகத் தெரிவு செய்யப்பட்ட சீன வெளியுறவு அமைச்சர், சீனாவின் ஆட்சி அதிகாரத்தில் முன்னணியில் இருக்கக் கூடிய 25பேர் கொண்ட Politburo என்று அழைக்கக்கூடிய உயர் அதிகாரசபையில் இருந்து தெரிவு செய்யப்படாமல், 204 பேர் கொண்ட மத்திய குழுவிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருப்பது  எடுத்து காட்டுவதாக மேலைநாட்டு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையிலே நிரந்தர வாக்குரிமை பெற்றிருந்த போதிலும், பீஜிங் தலைமைத்துவம் சர்வதேச விவகாரங்களில் நேரடியாக தலையிடாத போக்கை கடைப்பிடிப்பதால், சர்வதேச பொறுப்புகளிலிருந்து தனித்து இருப்பதன் மூலம் வெளியுறவுக் கொள்கை குறித்த செலவுகளை குறைத்துக் கொள்கிறது. குறிப்பாக தேவையற்ற கூட்டு யுத்தங்களில் அகப்படாது தவிர்த்து கொள்கிறது.

அதேவேளை வெளியுறவு நடவடிக்கைகள் யாவும் உள்நாட்டு பொருளாதார நலன்கள் குறித்ததாகவே பேணி வருகிறது. வியாபார நோக்கத்திற்காக மாத்திரம் சர்வதேச உறவை வளர்த்து வரும் சீனா, மேலைத்தேய இராசதந்திர விதிகளில் (norms) தான் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்து வருவது, மேலை நாடுகளுக்கு சீனாவை தமது தேவைக்கு ஏற்ப சிக்க வைப்பதில் பெரும் சிரமங்கள் இருப்பதாக கருதுகின்றனர்.

அதேவேளை மேலைத்தேய கூட்டுகளுக்கு பதிலாக, தனக்கு ஆதரவான கூட்டுகளை உருவாக்கிக் கொள்ளவும் சீனா தவறவில்லை. உதாரணமாக Shangai Corporation Organisation என்ற அமைப்பை மேலை நாடுகளின் கூட்டான NATO வுக்கு பதிலீடாகவும், Asian Infrastructure Investment Bank (AIIB) எனும் வங்கியை,  Asian Development Bank (ADB) மற்றும்  World Bank ஆகியவற்றிற்கு பதிலீடாவும் உருவாக்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் மேற்படி தாராள சனநாயகவாத நாடுகளின் செல்வாக்கு பெற்ற வங்கிகளில் சீனா தனது செல்வாக்கு அதிகம் இல்லாததால் தனக்கென ஒரு நிதி தளம் ஒன்றை உருவாக்கி கொள்ள சீனா முயல்வதாக அண்மைய கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

புதிய மேலைத்தேய யுக்திகளுக்கு ஏற்ப நிதி வசதிகளும் குறைந்த வட்டி, கடன்கள் மூலமும் வறிய நாடுகளை தமது கட்டுக்குள் கொண்டு வரமுனையும் மேலை நாடுகளின் யுக்திக்கு பதிலாக, சர்வதேச நாடுகளுடன் இருதரப்பிற்கும் நன்மை தரக்கூடிய உடன்படிக்கைகள் மூலம், உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும், முதலீடுகள் முலம் சர்வதேச நாடுகளின் நன்மதிப்பையும் பெற்று, அமெரிக்காவையே மிஞ்சி விடும் அளவில் ஒரு மென்பல வல்லரசாக சீனா உருவாகி வருகிறது.

அதாவது அதீத முதலீடுகள் மூலம் வறிய நாடுகளை தனக்கு கடன்பட்ட நிலையில் வைத்திருக்க முயல்வதும், அமெரிக்க கூட்டு நாடுகளுக்குள் இருக்கும் இந்நாடுகளை தம் பக்கம் இழுக்கும் செயலாகவும், இது அமெரிக்காவினால் பார்க்கப்படுகிறது.

மேலைத்தேய முதலாளித்துவப் பொருளாதாரப் போக்கை தமது உள்நாட்டு அரசியல் பொருளாதார வழமைகளாகக் கொண்ட, ஆசிய-ஆபிரிக்க நாடுகள் சீன பொருளாதார உதவிகளைப் பெற்றுக்கொண்ட போதிலும் தமது நன்றிக்கடனை அமெரிக்க பக்கம் வைத்திருப்பதான பார்வை ஒன்றும் உள்ளதை இங்கே மறுத்துவிடலாகாது.

இதற்கு நல்ல உதாரணமாக, சீனாவிடம் அதிக கடன்களைப் பெற்றுக் கொண்ட சிறீலங்கா, இன்று அமெரிக்க, இந்திய சார்பாக செயற்படுவது சீனாவை சிறீலங்காவின் உள்நாட்டு அரசியலில் தனது பார்வையை செலுத்த வேண்டிய தேவையை உருவாக்கி உள்ளது என்பதை இங்கே கவனத்தில் எடுத்து கொள்ளலாம்.

தெற்காசியாவில் அரசு நிலையை எட்டத்துடிக்கும் தேசியங்களில் தமிழ் தேசியம் முக்கியமானதாகும்.  தமிழ் தேசியத்தின் கடந்த தசாப்தகால போராட்ட அனுபவங்கள் மிகவும் கசப்பானவை. ஒரு அரசாக வேண்டிய தேவையின் நிமித்தம் பல்வேறு கொள்கைப்போக்குகளை கொண்ட பிரதிநிதிகள் இருப்பதில் எந்தவித தவறோ ஆச்சரியமோ இல்லை.

தமிழ்த் தேசியத்தில் சீன சார்பு இறக்கை கொண்ட ஒரு பகுதி இருப்பது தனது பெறுமானத்தையும் கேள்வியையும் அதிகரிக்கத் தூண்டுவதாக அமையும் என்பது குறித்தும் சிந்திக்கத் தயங்காது. இதுகுறித்து தமிழினம் புதிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. சீனாவை சர்வதேச விவகாரங்களில் தலையிட வைக்கும் அல்லது ஈடுபாட்டை உருவாக்கத் தூண்டும் மேலைத்தேய தந்திரோபாயத்தில் சிறீலங்காவின் சிறுபான்மை இனமாக காட்டப்படும் தமிழினமும் சிக்குப்பட வாய்ப்புகள் பல உள்ளன.

இந்த கட்டுரையின் முடிவாக, அமெரிக்க வல்லரசு தற்போது தனது தேவைக்கு ஏற்றவகையில், இந்தியாவின் சமூக, பொருளாதார, அரசியல், இராணுவ,  இராசதந்திர வலு நிலையை ஊக்கப்படுத்தும் வகையில், மிகவும் முனைப்பாக உள்ளது என்பதை கடந்த கட்டுரைகளில் பார்க்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சீன அமெரிக்க உறவினை வெளிக்காணக் கூடியதாக இருக்கிறது.

சீனாவின் பிராந்திய விஸ்தரிப்பின் செயற்பாட்டை முடக்கும் விதத்தில் முனைந்து நிற்கும் அமெரிக்கா, சோவியத்தை உள்ளடக்கிக் கொள்ள சீனாவை நாடியது. இன்று சீனாவை உள்ளடக்கிக் கொள்ள, இந்தியாவை நாடி நிற்கிறது. அவ்வாறாயின் வருங்கால உலகில் பொருளாதார, அரசியல்,  இராணுவ, இராசதந்திர வலு நிலையைப் பெற்றுக் கொண்டு விட்ட இந்தியாவை எவ்வாறு கையாளலாம் என்பதை இனிவரும் கட்டுரையில் காணலாம்.

*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்தினை எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *