மேலும்

யாழ்ப்பாணத்தில் ரணில் பங்கேற்ற நிகழ்வுகளை வடக்கு மாகாணசபை புறக்கணிப்பு

CM-NPCயாழ்ப்பாணத்தில் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்ற நிகழ்வுகளில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் மற்றும் ஆளும்தரப்பினர் எவரும் கலந்து கொள்ளவில்லை.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவி வரும் நிலையில், ரணில் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு முதலமைச்சருக்கு உரியமுறையில் அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதனையடுத்தும், தாம் வடக்கு மாகாணசபையுடன் தொடர்பு வைத்துக் கொள்ளப் போவதில்லை என்றும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனேயே பேசுவேன் என்று ரணில் கருத்து வெளியிட்டிருந்த நிலையிலும், வடக்கு மாகாணசபையின் ஆளும் கட்சியினர் அதிருப்தியடைந்திருந்தனர்.

இந்தநிலையில், இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், கர்ப்பிணித் தாய்மாருக்கு உதவி வழங்கும் நிகழ்விலும், பிரதமர் ரணில் பங்கேற்ற நிகழ்வுகளிலும், வடக்கு மாகாணசபையின் ஆளும்தரப்பைச் சேர்ந்த எவரும் பங்கேற்கவில்லை.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன் ஆகியோர் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர்.

இன்னொரு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரன், முதலமைச்சர் விக்னேஸ்வரன் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தாம், ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்வுகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்புகளை நிராகரித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அவர் இந்த நிகழ்வில் பங்கேற்காதமை வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *