மேலும்

‘மோடியின் அறிவுரையும், யாழ்ப்பாண மக்களின் யதார்த்தமும்’ – இந்திய ஊடகவியலாளரின் பார்வை

சிறிலங்கா அரசாங்கமானது ஒருபோதும் அழுத்தமின்றித் தனக்கான பணிகளை ஆற்றவில்லை என்பதைத் தனது 67 ஆண்டுகால அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிடுகிறார். இவர் கூறிய இந்த அழுத்தம் என்பது இந்திய அரசாங்கத்திடமிருந்து வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார்.

இவ்வாறு இந்தியாவின் ‘என்டிரிவி தொலைக்காட்சி’யின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான மூத்த ஆசிரியர் ‘மாயா மிர்ச்சந்தனி’, ‘என்டிரிவி’ இணையத்தில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.

பாக்கு நீரிணையின் அலைகளால் சூழப்பட்ட, பாரம்பரிய மீன்பிடிப் படகுகள் மற்றும் அவற்றின் வெறுமையான வலைகள் கடற்கரை மணலில் உலரவிடப்பட்ட, இன்னமும் சிறிலங்கா இராணுவத்தால் கண்காணிப்பிற்கு உட்பட்ட யாழ்ப்பாணத்தின் கரையோரக் கிராமமாக உள்ள இளவாலை, வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் பாதிப்பைத் தாங்கி நிற்கிறது.

சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுற்று ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் கிராமிய விவசாயம் மற்றும் மீன்பிடியை அடிப்படையாகக் கொண்ட யாழ்ப்பாணப் பொருளாதாரமானது பல்வேறு சவால்களைச் சந்திக்கின்றது.

பாக்குநீரிணையில் இந்திய மீனவர்கள் தமது இழுவைப் படகுகளுடன் உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் மிக முக்கிய அரசியல் விவகாரமாக மாறியுள்ளமை இங்கு ஆச்சரியப்படத்தக்கதல்ல.

‘எமது கடற்படுக்கையிலுள்ள கடல் வளங்கள் முற்றுமுழுதாக அபகரிக்கப்படுகின்றன. எனது தலையைப் போன்றதே இந்தியாவின் கடல்வளங்களும்’ என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது வழுக்கைத் தலையைச் சுட்டிக்காட்டியவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர்கள் அன்றாடம் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்கு பெரும் பிரயத்தனப்படும் இந்தவேளையில், தமிழ்நாட்டு அரசியற் கட்சிகள் சிறிலங்காவில் வாழும் தமிழ்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உண்மையில் உதவ விரும்பினால் தமிழ்நாட்டு மீனவர் சங்கத்திடம் இழுவைப்படகுகள் பயன்படுத்துவதைத் தடைசெய்யுமாறு கோரி, யாழ்ப்பாணத்திலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவவேண்டும் என அதிகாரத்திலுள்ள வடக்கு முதலமைச்சரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் கூறுகிறார்கள்.

அத்துமீறி உள்நுழையும் இந்திய மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளமை ஒரு ‘கெட்ட வாய்ப்பாகும்’.

ஆழமற்ற கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் தமது இழுவைப் படகுகளைப் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்கின்ற சிறிலங்கா அரசாங்கத்தின் கருத்திற்குத் தாம் உடன்படுவதாகவும் திரு.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டிலிருந்து தமக்குக் கிடைக்கும் உணர்வுபூர்வமான ஆதரவைத் தாம் வரவேற்பதாகவும் ‘ஆனால் அதேவேளையில்’ எமது நிலைப்பாடு தொடர்பாகவும் பரிசீலனை செய்யுமாறும் தமிழ்நாட்டிடம் கோரிக்கை விடுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

‘பிளவுபடாத ஒரு நாட்டிற்குள் அரசியற் தீர்வொன்றை முன்வைக்குமாறு நாம் தெளிவாக வரையறுத்துள்ளோம். எமக்கு ஆதரவு தர அவர்கள் விரும்பினால் எமது கோரிக்கைக்கும் அவர்கள் ஆதரவளிக்க வேண்டும்’ என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருவாய் போன்றன இயல்புநிலைக்குத் திரும்பவேண்டும் என்பதே கூட்டமைப்பு விரும்புகின்ற மிக முக்கிய விடயமாகும்.

இந்தியப் பிரதமர் மோடி அண்மையில் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்ட போது இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட 27,000 வீடுகளைக் கையளித்திருந்தார். இந்தியப் பிரதமரால் வீடுகள் கையளிக்கப்பட்ட கிராமங்களுள் இளவாலையும் ஒன்றாகும்.

28 ஆண்டுகளின் பின்னர் சிறிலங்காவுக்கான தனது அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்ட முதலாவது பிரதமராகவும், யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்த முதலாவது இந்தியப் பிரதமராகவும் திரு.மோடி விளங்குகிறார்.

இத்திட்டம் புதியதல்ல. 2010ல், அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் சிறிலங்கா இராணுவத்தினரால் வெற்றி கொள்ளப்பட்டு ஒரு ஆண்டின் பின்னர், யாழ்ப்பாணத்தில் போரால் இடம்பெயர்ந்த மக்களுக்கு  வீடுகளைக் கட்டிக்கொடுக்க வேண்டும் என இந்தியா தீர்மானித்தது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக 50,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் அதேவேளையில், சிறிலங்காவின் வடக்கை நாட்டின் ஏனைய பாகங்களுடன் இணைக்கும் தொடருந்துப் பாதைகளைப் புனரமைக்கும் பணியையும் இந்தியா மேற்கொண்டது.

2011ல், இளவாலையிலிருந்து எட்டுக் கிலோமீற்றர் தொலைவிலுள்ள, சிறிலங்காவுக்கு இந்தியப் பொருட்களைக் கடல்வழியாக இறக்குமதி செய்யக்கூடிய மிகக்கிட்டிய தூரத்திலுள்ள காங்கேசன்துறையில் துறைமுகம் ஒன்றை மீளக்கட்டியெழுப்புவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இந்தியாவும் சிறிலங்காவும் கைச்சாத்திட்டன.

யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணி ஒருவர் இந்நகரத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு வித்தியாசங்களையும் காணமுடியும். யாழ்ப்பாணத்தின் பழைய சுவர்களில் துப்பாக்கிச் சன்னங்களைக் காணலாம். எரிக்கப்பட்ட நிலங்களையும் இவற்றில் சில தற்போது துப்பரவாக்கப்படுவதையும் யாழ்ப்பாண நகரம் தற்போது புதுப்பொலிவுறுவதையும் காணலாம்.

இங்கு புதிய கடைத் தொகுதிகள், வைத்தியசாலைகள், செப்பனிடப்பட்ட வீதிகள், வங்கிகள் போன்றவற்றைக் காணலாம். போருக்குப் பின்னர் ராஜபக்ச அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தனித்த பங்களிப்புடனான மீள்கட்டுமானத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே யாழ்ப்பாணத்தின் செப்பனிடப்பட்ட வீதிகளை இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

ஏனெனில் இத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு உள்ளுர் ஆளணிகள் பயன்படுத்தப்படவில்லை. இத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாண வாழ் மக்கள் தமக்கான தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை.

அகிலன் கதிர்காமர் ஒரு ஆராய்ச்சியாளர். இவரது குடும்பத்தினர் யுத்தம் ஆரம்பித்த போது யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியிருந்தனர். தற்போது அகிலன் கதிர்காமர் போருக்குப் பின்னான மீள்கட்டுமானத்தை ஆராய்ந்து தனது மேற்படிப்பை நிறைவுசெய்வதற்காக யாழ்ப்பாணத்திற்குத் திரும்பியுள்ளார்.

இவ்வாறான அபிவிருத்திகள் வெறுமையாக உள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் நீண்ட கால முதலீடு மற்றும் தொழிற்துறை போன்றன ஊக்குவிக்கப்படாது விட்டால் இங்கு மிகப் பாரிய சமூக-பொருளாதார நெருக்கடி ஏற்படும் என ஆய்வாளர் அகிலன் கருதுகிறார்.

‘மக்கள் மயப்படுத்தப்பட்ட அபிவிருத்தியில் ராஜபக்ச அரசாங்கம் உண்மையில் நலன் காண்பிக்கவில்லை’ என இவர் கூறுகிறார். இங்கு பாரிய தொழிற்சாலை மற்றும் கட்டுமானம் போன்றன மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், இந்த மக்களின் உள்ளுர் பொருளாதாரமான விவசாயம் மற்றும் மீன்பிடி போன்ற துறைகள் பெரிதளவில் மேம்படுத்தப்படவில்லை என்பது ஆய்வாளரின் கருத்தாகும்.

உள்ளுர் மக்களின் கடன் அதிகரிப்பிற்கு வங்கிகளே காரணமாகும். இவ்வங்கிகள் குறைந்தளவு வட்டி விகிதத்தில் மக்களுக்கு கடன்களை வழங்குகின்றன. இதன் மூலம் மக்கள் தமது நிலங்களுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்கள் தொடக்கம் உழவுஇயந்திரங்கள் வரை அனைத்தையும் கடனுக்குக் கொள்வனவு செய்துள்ளனர். ஆனால் இவர்களால் தமது கடனை மீளவும் வழங்க முடியாத நிலையிலுள்ளனர்.

சொந்த நிலத்தைக் கொண்டிராத தொழிலாளர்கள் இரண்டு தொடக்கம் நான்கு இலட்சம் சிறிலங்கா ரூபாக்களைக் கடனாகப் பெற்றுள்ள போதிலும் அதனை ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாதவர்களாக உள்ளனர்.

இந்த அடிப்படையில், நிலத்தின் உரிமை, சிறிலங்கா இராணுவத்திடமிருந்து அதனை மீளப்பெற்றுக் கொள்வதிலுள்ள சிக்கல்கள் போன்றன யாழ்ப்பாண மக்களின் பாரியதொரு பிரச்சினையாகக் காணப்படுகிறது. போரின் போது 6500 ஏக்கர் நிலப்பரப்பு சிறிலங்கா இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீளவும் அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுகின்றன.

போர்க்குற்றங்கள் தொடர்பில் விடுக்கப்படும் அழுத்தங்கள் போன்றே நிலங்கள் கையளிக்கப்பட வேண்டும் எனவும் அழுத்தம் வழங்கப்படுகிறது. சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த கையோடு 1000 ஏக்கர் நிலப்பரப்பை அதன் உரிமையாளர்களிடம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தது.

ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் 200 ஏக்கர் நிலப்பரப்பு மாத்திரமே கிராமத்தவர்களிடம் கையளிக்கப்பட்டதாக சுமந்திரன் கூறுகிறார். ஆகவே நிலங்களைக் கையளிக்கின்ற பிரச்சினை தீர்க்கப்படுவதற்கு இன்னமும் நீண்ட காலம் எடுக்கும்.

சிறிலங்காவில் போர் முடிவடைந்தாலும், தற்போதும் யாழ்ப்பாணம் இராணுவமயப்படுத்தப்பட்ட பிரதேசமாகவே காணப்படுகிறது. போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வெளிப்படையானதும் நேர்மையானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் ராஜபக்ச அரசாங்கம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

ராஜபக்ச அரசாங்கத்தை எதிர்த்துச் செயற்பட்டவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இது யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கியது. இதனால் இங்கு வாழும் மக்கள் தமது அடையாளங்களை வெளிப்படுத்த விரும்பவில்லை.

ஜனவரி மாதத்தின் முன்னர் இந்த மக்கள் ஊடகவியலாளர்களைச் சந்திப்பதே சாத்தியப்படற்ற விடயமாகக் காணப்பட்டதாக மக்கள் கூறுகின்றனர்.

தற்போது ராஜபக்ச பதவியிலிருந்து விலகிய பின்னர், சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கொண்டுள்ள தொடர்பானது வேறுபட்டதாகக் கருதப்படுகிறது.

இதனால் கூட்டமைப்பானது போர்க் குற்றங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என புதிய அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும். அத்துடன் சிறிலங்கா வாழ் தமிழ் மக்களுக்கான இறுதியான அரசியற் தீர்வை எட்டுவதற்கான பணியில் ஈடுபடவேண்டும். அத்துடன் வடக்கு மாகாணத்தில் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளில் கூட்டமைப்பின் தலைமை அதிக கவனம் செலுத்தவேண்டும்.

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பொறுமை காத்து, தமிழ் மக்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்துச் செயற்படுவதற்கான காலஅவகாசத்தை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது பிரதமர் மோடி அதன் தலைமையிடம் வலியுறுத்தியிருந்தார்.

சிறிலங்கா அரசாங்கமானது ஒருபோதும் அழுத்தமின்றித் தனக்கான பணிகளை ஆற்றவில்லை என்பதைத் தனது 67 ஆண்டுகால அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிடுகிறார். ஆகவே இவர் கூறிய இந்த அழுத்தம் என்பது இந்திய அரசாங்கத்திடமிருந்து வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார்.

‘இந்தியாவின் தலையீட்டின் மூலம் மட்டுமே நாங்கள் மாகாண சபை முறைமையைப் பெற்றுக் கொண்டோம். இந்தியாவின் தலையீட்டின் மூலம் நாங்கள் பலதை அடைந்துள்ளோம்’ என்பது சுமந்திரனின் கருத்தாகும்.

‘இந்தியா தமிழர்களின் விடயத்தில் ஒருங்கிணைப்பாளராக, நடுவராக, அனுசரணையாளராகச் செயற்பட வேண்டும்’ என முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாக கொழும்புடன் பேச்சுக்களில் ஈடுபடுவதை விட வேறெதுவும் பயனளிக்காது என தமிழீழ விடுதலைப் புலிகளின் சினைப்பர் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான லக்ஸ்மன் கதிர்காமரின் மருமகனான கதிர்காமர் தெரிவித்தார்.

‘யாழ்ப்பாணத்தில் மக்கள் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்துகின்றனர். ஆகவே இடைவெளி என்பது ஏற்படத் தொடங்கியுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் மனப்பாங்கும் வித்தியாசமாக உள்ளது என நான் நினைக்கிறேன். ஆனால் இரண்டு தரப்பினரும் இணைந்து செயற்படவேண்டும். தமிழ் சமூகமானது சுயவிமர்சனத்தை முதலில் மேற்கொள்ள வேண்டும். இதுவே இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழியை ஏற்படுத்தும்’ என கதிர்காமர் குறிப்பிடுகிறார்.

யாழ்ப்பாணத்தின் மக்கள் தொகையானது 900,000 இலிருந்து 600,000 ஆகக் குறைந்துள்ளது. கடந்த மூன்று பத்தாண்டுகளில் இந்த மக்கள் போரின் தாக்கத்தால் புலம்பெயர்ந்துள்ளனர். ஆறு ஆண்டு சமாதான காலத்தில் இவர்களில் சிலர் நாட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ரில்கோ விடுதியின் உரிமையாளரான திலக் திலகராஜாவும் அவரது மனைவியாரான கோகிலாவும் பிரித்தானியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து காணி வாங்கி விடுதியை நிர்மாணித்து நடத்துகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் பணிபுரிய வரும் முதலீட்டாளர்கள், நிதிவழங்குனர்கள் போன்றவர்கள் தங்கிநின்று பணிபுரிவதற்கு தங்குமிடம் தேவை என திலகராஜா கூறுகிறார். தற்போது 150 பணியாளர்களுக்கு தனது விடுதி மூலம் தொழில் வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும் தான் இதன்மூலம் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்குவதாகவும், இதுபோன்று ஏனையவர்களும் இங்கு வந்து பணியாற்ற வேண்டும் எனவும் திலகராஜா தெரிவித்தார்.

திலகராஜாவும் கதிர்காமரும் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களாயினும் இவர்கள் இலங்கைத் தமிழர்களின் பொருளாதாரம், கலாசாரம் மற்றும் அரசியல் மையம் என்கின்ற பெருமையை இழந்து நிற்கும் யாழ்ப்பாணத்தை மீளவும் பொலிவுறச் செய்வதற்காக யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வரவேண்டிய தேவையேற்பட்டுள்ளது.

இதேபோன்று ஏனையவர்களும் தமது சொந்த இடம் நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் வெளிநாடுகளிலோ அல்லது சிறிலங்காவின் ஏனைய பகுதிகளிலோ தமது தொழில்வாய்ப்பை மேம்படுத்தும் எண்ணத்தைக் கைவிட்டு யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்கான வீதி கடந்த ஆறு ஆண்டில் செப்பனிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் இந்த மக்கள் தங்களில் தாங்களே தங்கியிருப்பதற்கு இன்னமும் நீண்ட காலம் தேவைப்படும் என இவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *