மேலும்

சம்பந்தனுக்கு கிடைக்குமா எதிர்க்கட்சித் தலைவர் பதவி? – சபாநாயகருக்கு முடிவெடுக்கும் அதிகாரம்

sampanthanசிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பாக, சபாநாயகர் சமல் ராஜபக்சவே தீர்மானிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கொண்ட பின்னர், இன்று சிறிலங்கா நாடாளுமன்றம் முதல்முறையாக கூடியது.

இதன் போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இணைந்த பின்னர்,  அந்தக் கட்சியைச் சேர்ந்த நிமால் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வதற்கு, பல்வேறு கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தன.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியைச் சேர்ந்தவர், எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியாது என்று, ஜேவிபி, மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவராக யார் செயற்படுவது என்று, சபாநாயகர் முடிவு செய்வதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஒரு முடிவெடுத்து, அதனை நாடாளுமன்றத்துக்கு அறிவிக்க தமக்கு காலஅவகாசம் தேவை என்று சபாநாயகர் சமல் ராஜபக்ச அறிவித்தார்.

நிமால் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர முடியாது என்று சபாநாயகர் முடிவெடுத்தால், அந்தப் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

தற்போதைய நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத கட்சிகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

அதேவேளை, இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படக் கூடாது என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டாளிக் கட்சிகளின் தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர் நேற்று எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

தினேஸ் குணவர்த்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *