மேலும்

சீனாவுடன் சுமுக உறவை விரும்புகிறார் சிறிலங்கா அதிபர் – ஏஎவ்பி ஆய்வு

maithriஇவ்வாரம் சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள சிறிலங்காவின் புதிய அதிபர் சீனத் தலைமையைச் சந்தித்து சிறிலங்காவில் தடைப்பட்ட சீனாவின் திட்டங்கள் தொடர்பில் சுமூகமான பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அத்துடன் பிராந்திய சக்தியான இந்தியாவுடன் மேலும் வலுவான உறவை வளர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

சிறிலங்காவை பத்தாண்டுகளாக ஆட்சி செய்த மகிந்த ராஜபக்ச சீனாவுடன் நெருங்கிய உறவைப் பேணியதன் காரணமாக இந்தியாவுடன் சிறிலங்கா தீவு கொண்டிருந்த பாரம்பரிய உறவில் விரிசல் ஏற்பட்டது.

இவ்வாறானதொரு ஆட்சியை நடத்திய மகிந்த ராஜபக்சவை ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற தேர்தல் மூலம் தோற்கடித்த பின்னர் மைத்திரிபால சிறிசேன சிறிலங்காவின் தலைவரானார்.

சிறிலங்காவின் மிகப்பெரிய வெளிநாட்டு நிதிவழங்குனராகவும், ராஜபக்ச காலத்தில் சிறிலங்காவின் அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக செல்வாக்குச் செலுத்திய சீனாவின் திட்டங்கள் தொடர்பாக சிறிசேன தற்போது ஆராய்ந்து வருகிறார்.

இந்தியா தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனக் கருதும், சீனாவால் முன்னெடுக்கப்படும் 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான சிறிலங்காவின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்துமாறு சிறிலங்காவின் தற்போதைய அதிபர் அறிவித்ததன் மூலம் இவர் சீனாவிற்கு பீதியை ஏற்படுத்தியிருந்தார்.

இத்திட்டம் தொடர்பாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியே அது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமையன்று மூன்று நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு சீனாவுக்குச் செல்லவுள்ள சிறிசேன, சீனத் தலைமையுடன் பேச்சுக்களை நடத்தும் போது பொருளாதார அபிவிருத்தியில் குழப்பம் ஏற்படாதவாறே தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள முயற்சிப்பார் என வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்பயணத்தின் போது சீன அதிபர் ஜின்பிங் மற்றும் முக்கிய தலைவர்களுடன் சிறிசேன பேச்சுக்களில் ஈடுபடுவார் என கொழும்பு வட்டாரம் தெரிவிக்கின்றது.

‘முன்னைய அரசாங்கம் சிறிலங்காவில் சீனா சுதந்திரமாகச் செயற்படுவதற்கு அனுமதித்தது. ஆனால் இந்தியாவை எரிச்சலடைய வைக்காத சாதாரண உறவை சீனாவுடன் கட்டியெழுப்பவே அதிபர் சிறிசேன விரும்புகிறார்’ என சிறிலங்காவின் அரசியல் விமர்சகர் விக்ரர் ஐவன் குறிப்பிடுகிறார்.

‘ஆசியாவின் இரு பெரும் சக்திகளுடனும் சமமான உறவைக் கட்டியெழுப்பவே சிறிலங்கா விரும்புகிறது’ என புதுடில்லியிலுள்ள ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தின் தென்னாசியக் கற்கைகளுக்கான பேராசிரியர் பி.சகாதேவன் சுட்டிக்காட்டுகிறார்.

ஜனவரியில் இடம்பெற்ற தேர்தலின் பின்னர் வெற்றிபெற்ற சிறிசேன தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவையே தேர்ந்தெடுத்திருந்தார். இதன்மூலம் இவர் சீனாவை விட இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவது தெளிவாகிறது.

சிறிலங்கா தீவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்த பின்னர் சீர்குலைந்திருந்த உறவைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை அதிபர் சிறிசேன தற்போது மேற்கொள்கிறார்.

ராஜபக்ச ஆட்சியிலிருந்த போது, கடந்த ஆண்டு சீன நீர்மூழ்கிக்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் இந்தியா மிகவும் அதிருப்தியடைந்திருந்தது.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் தனது ‘முத்துமாலைத்’ திட்டத்தின் மூலம் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்தி இப்பிராந்தியத்தில் இந்தியா கொண்டுள்ள செல்வாக்கை முறியடித்து தனது சொந்தப் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக சீனா மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இந்திய மாக்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கும் ஏனைய அயல்நாடுகளுக்கும் இம்மாதம் பயணம் செய்திருந்தார். இதன்மூலம் இப்பிராந்தியத்தில் இந்தியா பாரம்பரியமாகக் கொண்டுள்ள கடப்பாட்டை பிரதமர் மோடி உறுதிப்படுத்தியுள்ளார்.

புதிய அரசாங்கம் சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல்கள் கொழும்பில் தரித்து நிற்பதற்கு அனுமதி வழங்கமாட்டாது என சிறிசேன அதிபராகப் பதவியேற்று ஒரு மாதத்தின் பின்னர் சீனாவுக்கான தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டிருந்தார்.

எட்டு சதவீதத்திற்கும் அதிகமான வட்டியில் சீனாவால் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட பாரிய கடன் தொடர்பாக மீள்சமரசத்தை எட்டுவதற்கான வழிவகையை சிறிலங்கா அரசாங்கம் ஆராய்வதாக சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநயக்க அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

2013ல் சிறிலங்காவின் கட்டுமானத் திட்டங்களுக்குச் செலவழிக்கப்பட்ட 2.03 பில்லியன் டொலரின் 40 சதவீதத்தை, சிறிலங்காவின் மிகப் பெரிய நிதிவழங்குனராக விளங்கும் சீனாவே வழங்கியதாக மத்திய வங்கியின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சவின் ஆட்சியின் போது இழைக்கப்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என மேற்குலக நாடுகள் விசனமுற்றபோது சிறிலங்காவை அதன் மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களிலிருந்து பாதுகாத்த சில நாடுகளில் சீனாவும் ஒன்றாகும்.

இவ்வாறான சூழலில், சிறுபான்மைத் தமிழ் சமூகத்திற்கும் பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் இடையில் சமரச முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும் போரின் போது இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் புதிய அரசாங்கம் மேற்குலக நாடுகளின் ஆதரவை வென்றெடுத்துள்ளது.

2009ல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது ராஜபக்சவின் கட்டளையின் பேரில் 40,000 வரையான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது மேற்குலக நாடுகளினதும் இந்தியாவினதும் ஆதரவுடன் மேலும் காலஅவகாசத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆங்கில வழிமூலம் – ஏஎவ்பி
தமிழில் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *