மேலும்

பலரின் அதிகாரங்களைக் குறைத்த சிறிலங்காவின் அமைச்சரவை மாற்றம்

dilan-appointmentசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று புதிய அமைச்சர்களுக்கு நியமனங்களை வழங்கிய போது, ஏற்கனவே அமைச்கர்களாக இருந்தவர்களிடம் இருந்து சில பொறுப்புகளை மீள எடுத்துக் கொண்டுள்ளார்.

எட்டு அமைச்சர்கள் வகித்த அமைச்சுப் பொறுப்புகள் இவ்வாறு மீள எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சர்ச்சைக்குரிய சில அமைச்சர்களும் அடங்கியுள்ளனர்.

அமைச்சர் கபீர் ஹாசிம் வசமிருந்த உயர்கல்வி அமைச்சு மீளப் பெறப்பட்டு, கலாநிதி சரத் அமுனுகமவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில், பிரதி உயர் கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் ராஜீவ் விஜேசிங்க, தனது பதவியில் இருந்து விலக, உயர் கல்வி அமைச்சர் கபீர் ஹாசிமின் தன்னிச்சையான முடிவுகளே காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தொடர்பாக அமைச்சர் கபீர் ஹாசிம் எடுத்த முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தனது பதவியை விட்டு விலகியதுடன், எதிர்க்கட்சி வரிசையிலும் அமர்ந்து கொண்டார்.

அதுபோலவே, விமான சேவைகள் பிரதிஅமைச்சராக இருந்த பைசர் முஸ்தபாவும் பதவியில் இருந்து விலகியிருந்தார். தற்போது விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிடம் இருந்து அந்தப் பொறுப்பு நீக்கப்பட்டுள்ளது.

மத்தல விமான நிலையத்தின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தியது, கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை விரிவாக்க உடன்பாட்டை ரத்துச் செய்தது போன்ற நடவடிக்கைகளை அர்ஜீன ரணதுங்க மேற்கொண்டிருந்தார்.

தற்போது அவரிடம் இருந்து அந்தப் பொறுப்பு நீக்கப்பட்டு, ரெஜினோல்ட் குரேயிடம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய நியமனங்களின் போது, கரு ஜெயசூரிய, ஜோசப் மைக்கல் பெரேரா, துமிந்த திசநாயக்க, கயந்த கருணாதிலக, விஜேதாச ராஜபக்ச, ஜோன் அமரதுங்க ஆகியோரிடம் இருந்தும் அமைச்சுப் பொறுப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள போதும், அவர்களில் பலரும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் வகித்த பதவிகளை விடக் குறைவான பதவிகளிலேயே நியமிக்கப்பட்டுள்ளனர்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களான, பவித்ரா வன்னியாராச்சி, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜீவன் குமாரதுங்க, மகிந்த சமரசிங்க, டிலான் பெரேரா, ஜகத் புஸ்பகுமார, லக்ஸ்மன் செனவிரத்ன, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, லலித் திசநாயக்க, சி.பி.ரத்நாயக்க ஆகியோர், தரம் குறைக்கப்பட்டு, இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *