மேலும்

மைத்திரி ஆட்சியிலும் பயங்கரவாத தடைச்சட்டம் – பகீரதி மீது பாய்ந்தது

Arrestபிரான்சில் இருந்து வந்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட, முருகேசு பகீரதி என்ற பெண்ணை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு தடுத்து வைத்திருப்பதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் தனது தாய், தந்தையரைப் பார்ப்பதற்காக வந்து திரும்பிய போது, 41 வயதான, பகீரதியும் அவரது 8 வயது மகளும் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

பகீரதி, 1997ம் ஆண்டு தொடக்கம், 2000ம் ஆண்டு வரை கடற்புலிகளின் தளபதியாக இருந்தவர் என்று கூறியே சிறிலங்கா காவல்துறை அவரை கைது செய்துள்ளது.

முன்னதாக இவரை 72 மணித்தியாலம் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றப்பட்டது.

எனினும் விசாரணைகள் முடிவுறாததால், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவரைத் தடுத்து வைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

இதன்படி, 90 நாட்களுக்கு அவரைத் தடுத்து வைத்திருக்க முடியும் என்றும், எனினும், விசாரணைகளை தாம் விரைவாக முடிப்போம் என்று நம்புவதாகவும் அவர் ஏஎவ்பிடம் கூறியுள்ளார்.

பயங்கரவாத விசாரணைத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகீரதியுடன் தங்கியிருக்க, பிரெஞ்சு குடியுரிமை பெற்ற அவரது 8 வயது மகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவர் இன்னொரு பாதுகாவலரிடம் செல்ல விரும்பினால் அதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதரகம், பகீரதிக்கான தூதரக உதவிகளை அளித்துள்ள போதிலும், எந்த விபரங்களையும் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *