மேலும்

ஜெனிவா கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – காலையில் ஜோன் கெரி, பிற்பகலில் மங்களவின் உரை

UNHRCஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று  ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று இந்தக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

இன்று தொடக்கம் 27ம் நாள் வரை நடைபெறவுள்ள 28வது அமர்வில், சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று அந்த அறிக்கை ஆறு மாதங்களுக்குப் பிற்போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தனது உரையில் குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், இன்றைய அமர்வின் ஆரம்பத்தில், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் வீடியோ உரையும் நேரலையாக ஒளிப்பரப்பப்படவுள்ளது.

ஐ.நா பொதுச்செயலரின் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன், தற்போது சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஐ.நா அறிக்கை பிற்போடப்பட்டதற்கு தமிழர் தரப்பில் எழுந்துள்ள அதிருப்தியை அவர் ஐ.நா பொதுச்செயலரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தால், பான் கீ மூன் தனது இன்றைய உரையில் அதுபற்றி குறிப்பிடக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, பேரவையின் இன்றைய அமர்வில் மூன்று கட்டங்களாக பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் உரையாற்றவுள்ளனர்.

காலை அமர்வில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி உரையாற்றுவார்.

பிற்பகல் அமர்வில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் உரை இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, மங்கள சமரவீர பீஜிங்கில் இருந்து நேற்று ஜெனிவா சென்றிருந்தார்.

அவர் இன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல்ஹுசேனை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இதன்போது, சிறிலங்காவுக்கு வருமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு  மங்கள சமரவீர முறைப்படி அழைப்பு விடுப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *