மேலும்

மைத்திரிக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Suresh-Premachandranமீள்குடியேற்றம், நிலங்கள் விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

“இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவது குறித்த பேச்சுகள் நடைபெற்று வரும் வேளையில்,  அவ்வாறு நாடு திரும்புவர்கள் மீளக்குடியேறுவதற்கான நிலங்கள் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

உள்ளூர் மக்களின் சில நிலங்கள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, இந்தியாவிலிருந்து வருபவர்களின் மீள்குடியேற்றம் எந்த அளவுக்கு சாத்தியமாகும்?

இராணுவத்தின் பிடியில் இருக்கும் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டு அங்கு மக்கள் தமது சொந்த இடத்தில் மீளக்குடியேறுவதற்கு இந்தியா அழுத்தம் கொடுத்தால் அது மிகவும் வரவேற்கத் தக்கதாக அமையும்.

புதிய அதிபருடன் நாங்கள் பல முறை பேசியுள்ளோம். அவர் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து முழுமையாக அறிந்துள்ளார்.

அவ்வாறே, இந்தியாவுக்கும் மக்களின் மீள்குடியேற்றம், காணாமல்போனவர்கள் குறித்த விபரங்கள் இல்லாமை, விசாரணைகள் ஏதுமின்றி ஆண்டுகள் கணக்கில் சிறையிலுள்ள தமிழர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் போன்றவை முழுமையாகத் தெரியும்.

சிறிலங்கா அதிபரின் புதுடெல்லிப் பயணத்தின் போது உறுதியான தீர்வுகள் எட்டப்படும் வகையில் இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது” எனவும் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *