மேலும்

முல்லைத்தீவில் இரு பிரதேச சபைகளுக்கு பெப்ரவரி 28ம் நாள் தேர்தல்

elections_secretariatமுல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பிரதேச சபைகளுக்கு அடுத்த மாதம் 28ம் நாள் தேர்தல் நடத்தப்படும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்களே வரும் பெப்ரவரி 28ம் நாள் நடத்தப்படவுள்ளன.

2011ம் ஆண்டு வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்ட போது, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், இந்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்டன.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் மற்றும், மீள்குடியமர்வுப் பணிகள் இன்னமும் நிறைவடையாத நிலையில் தேர்தலைப் பிற்போடுமாறு கோரி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே, இந்த புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் பிற்போடப்பட்டது.

எனினும், 2013ம் ஆண்டு வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்பட்ட நிலையிலும், கடந்த 8ம் நாள் அதிபர் தேர்தல் நடத்தப்பட்ட நிலையிலும், முறைப்பாட்டாளர்கள் தமது நீதிமன்றத்தில் மனுக்களை கடந்த 28ம் நாள் விலக்கிக் கொண்டனர்.

இதையடுத்தே, இரண்டு பிரதேச சபைகளுக்கும் வரும் பெப்ரவரி 28ம் நாள் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.

2014ம் ஆண்டு வாக்காளர் பதிவேட்டின்படி, புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிக்க 29,269 வாக்காளர்களும், கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிக்க 23,489 வாக்காளர்களும் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *