மேலும்

இரண்டு நாள் பயணமாக மார்ச் 14இல் கொழும்பு வருகிறார் மோடி

Narendra-Modiஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 14ம் நாள் இரண்டு நாள் அதிகாரபூர்வ அரசுமுறைப் பயணமாக சிறிலங்காவுக்கு வரவுள்ளதாக, இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வரும் மார்ச் 14 மற்றும் 15ம் நாள்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி , சிறிலங்காவில் உயர்மட்டக் கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என்று தெரியவந்துள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இந்தியாவுக்கான முதலாவது அரசுமுறைப் பயணம் இடம்பெற்று சரியாக ஒரு மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு வரவுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வரும் பெப்ரவரி 16ம் நாள் தொடக்கம், 19ம் நாள் வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்தப் பயண அட்டவணையை இரண்டு நாட்டு அரசாங்கங்களும் இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

1987ம் ஆண்டு, இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி சிறிலங்காவுக்கு மேற்கொண்ட அரசு முறைப் பயணத்துக்குப் பின்னர்- கடந்த 27 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் சிறிலங்காவுக்கு அரசுமுறைப் பயணமாக வரவுள்ளார்.

இதன் போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான பேச்சுக்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *