மேலும்

கனடா: ஈழத்தமிழ் அறிஞருக்கு கனேடிய நாடாளுமன்றம் மதிப்பளிப்பு

Professor Chelva Kanaganayakam“பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்கள் நவம்பர் 22 அன்று அமரராகினார். இவரது இழப்பானது கனடாவுக்குப் பாரியதொரு இழப்பாகும். புலமைவாதி ஒருவரை பண்பாளன் ஒருவரை கனடா இழந்துவிட்டது. பேராசிரியர் அவர்கள் இவரது சக புலமைவாதிகளாலும் இவரது மாணவர்களாலும் நன்கு போற்றப்படுகிறார்” – நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்னோல்ட் சான்.

சிறிலங்காவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அண்மையில் கனடாவில் அமரத்துவம் அடைந்தவருமான  பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்கள் நேற்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்னோல்ட் சானால் [Member of Parliament Arnold Chan] கனேடிய பொதுச்சபையில் [Canadian House of Commons] மதிப்பளிக்கப்பட்டார். இவர் ரொரன்ரோ பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழிப் பேராசிரியராகக் கடமையாற்றினார்.

பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்கள் மறைந்த அன்றைய தினம் இவர் கனேடிய இலக்கியக் கற்கைகள் மற்றும் கலாசாரத்திற்காக ஆற்றிய அளப்பரிய சேவையைப் பாராட்டி கனேடிய றோயல் சமூகத்தின் உறுப்பினராக மதிப்பளிக்கப்பட்டிருந்தார். இவர் ரொரன்ரோ பல்கலைக்கழகத்தின் University of Toronto தென்னாசியக் கற்கைநெறிகளுக்கான இயக்குனராகவும் பதவி வகித்தார். ரொரன்ரோவில் ஆண்டுதோறும் தமிழ் கற்கைகளுக்கான கருத்தரங்கு இடம்பெறுவதற்கு பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார். அத்துடன் பேராசிரியர் அவர்கள் தமிழ் இலக்கியத் தோட்டம் Tamil Literary Garden என்கின்ற அமைப்பை நிறுவியவர்களில் ஒருவராவார்.

“பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்கள் நவம்பர் 22 அன்று அமரராகினார். இவரது இழப்பானது கனடாவுக்குப் பாரியதொரு இழப்பாகும். புலமைவாதி ஒருவரை பண்பாளன் ஒருவரை கனடா இழந்துவிட்டது. பேராசிரியர் அவர்கள் இவரது சக புலமைவாதிகளாலும் இவரது மாணவர்களாலும் நன்கு போற்றப்படுகிறார். தத்துவவாதி என்ற வகையில் பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்கள் பல்வேறு விடயங்களுக்கு வழிகாட்டியாகவும் இந்த உலகில் தமிழ் கவிதையின் கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்துள்ளார். இது 2002ல் ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் கனேடியத் தமிழர் ஒருவர் ஆங்கில மொழிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டதன் மூலம் மேலும் பெருமைப்படுத்தப்படுகிறது” என நேற்று கனேடிய நாடாளுமன்றில் உரை நிகழ்த்திய போது சான் குறிப்பிட்டார்.

“கனேடியப் பல்கலைக்கழகத்தில் ஆசியக் கற்கைகள் நிறுவகம் ஒன்றை நிறுவுவதற்கும், ஆண்டுதோறும் தமிழ்க் கற்கைகளுக்கான கருத்தரங்கை மேற்கொள்வதற்கும் பேராசிரியர் அவர்கள் முதன்மைப் பங்காற்றியுள்ளார். இவர் தென்னாசியக் கற்கைகளுக்கான இயக்குனராகவும் சேவையாற்றியுள்ளார். இவர் முதன்மையான கல்விமானாகவும் கொலனித்துவத்திற்குப் பின்னான இலக்கியத்தை விமர்சிக்கின்ற ஒரு புலமைவாதியாகவும்   கல்வித்துறையால் அடையாளங் காணப்பட்டுள்ளார். அத்துடன் நவீன மற்றும் மரபுசார் தமிழ் கவிதைகளின் பிரதான ஒரு மொழிபெயர்ப்பாளர் என இவர் இலக்கிய உலகால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் செல்வா அவர்கள் அவரது அளப்பரிய சேவைக்காக கனேடிய றோயல் சமூகத்தால் கௌரவிக்கப்பட்ட அன்றைய தினம் இவர் அமரத்துவம் அடைந்தார். இவர் இந்த உலகை விட்டு மறைந்த போது இவருக்கு வயது 62 மட்டுமே. இவரது இழப்பால் துயருற்றிருக்கும் பேராசிரியர் செல்வா அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நான் இந்த வேளையில் எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என சான் மேலும் குறிப்பிட்டார்.

பேராசிரியர் கனகநாயகம் அவர்கள் சிறிலங்காவின் கொழும்பில் பிறந்தார். நான்கு பிள்ளைகளைக் கொண்ட இவரது குடும்பத்தில் இவர் இளையவராவார். இவரது தந்தையாரான பேராசிரியர் வி.செல்வநாயகம் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகவும் பெரும் மதிப்பளிக்கப்பட்ட ஒரு கல்விமானாகவும் விளங்கினார். பேராசிரியர் கனகநாயகம் அவர்கள் ஆங்கில மொழியில் உயர் கல்வியைக் கற்றதுடன் 1976ல் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பட்டதாரியாக வெளியேறினார். இதன்பின்னர் பொதுநலவாய புலமைப்பரிசிலின் கீழ் பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

செய்தி வழிமூலம் : BY MAHESH ABEYEWARDENE – ‘The Sri Lanka Reporter’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *