மேலும்

ஊசலாடும் கிழக்கு, மேல் மாகாணசபைகள் – ஆளும் கூட்டணி அதிர்ச்சி

upfaசிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வசம் உள்ள கிழக்கு மற்றும் மேல் மாகாணசபைகளின் ஆட்சி எந்த நேரமும் கவிழும் நிலை உருவானதால், இரு சபைகளும் அடுத்தமாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. (மூன்றாம் இணைப்பு)

கிழக்கு மாகாணசபையின் வரவுசெலவுத் திட்டம் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது, சபையில் குறைந்தபட்ட உறுப்பினர்கள் இல்லை என்று காரணம் காட்டி ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், தொடர்ந்து விவாதம் நடத்தி, இரவு 8 மணியளவில் வாக்கெடுப்பு நடத்துவதென அறிவிக்கப்பட்டது.

நேற்றிரவு 7 மணியளவில், ஆளும்கட்சி தரப்பில் 11 உறுப்பினர்களும், எதிர்க்கட்சி தரப்பில் 15 உறுப்பினர்களும் அவையில் இருந்ததால், வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில், திடீரென அவைத் தலைவர் இன்று வரை வாக்கெடுப்பை ஒத்திவைத்துள்ளார்.

நேற்று வரவுசெலவுத் திட்ட விவாதத்தை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புறக்கணித்திருந்தன.

இந்த இரண்டு கட்சிகளும், சிறிலங்கா அதிபர் தேர்தலில் இன்னமும் தமது முடிவை எடுக்காத நிலையில், மாகாணசபையில் ஒதுங்கி நிற்கின்றன.

இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில், வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்படுவதை தடுக்க, சபையை அடுத்த மாதம் 12ம் நாள் வரை அவைத் தலைலர் இன்று ஒததிவைத்துள்ளார்.

அதேவேளை, மேல் மாகாணசபையிலும், வரவுசெலவுத் திட்ட விவாதம் நேற்று ஆரம்பித்திருந்தது.

இதன்போது, ஆளும் கூட்டணியின் உறுப்பினர்களான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த உதய கம்மன்பிலவும், நிசாந்த சிறீவர்ணசிங்கவும் அவைக்கு வரவில்லை.

ஆளும்கூட்டணியின் களுத்துறை மாவட்ட உறுப்பினரான கீர்த்தி காரியவசம் நேற்று விகாரமாதேவி பூங்காவில் நடந்த எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

மேலும் பல ஆளும் கூட்டணியின் மேல் மாகாணசபை உறுப்பினர்கள் கட்சி தாவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், நேற்றுப் பிற்பகல் போதிய உறுப்பினர்கள் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இன்று காலை வரை மேல் மாகாணசபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், மேல் மாகாணசபையின் அமர்வும் இன்று காலை அவைத் தலைவரால் அடுத்த மாதம் 20ம் நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 56 உறுப்பினர்களும், ஐதேகவுக்கு 28 உறுப்பினர்களும், ஜனநாயக கட்சிக்கு 9 உறுப்பினர்களும், ஜேவிபிக்கு 6 உறுப்பினர்களும், ஜனநாயக மக்கள் முன்னணிக்கு 2 உறுப்பினர்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 2 உறுப்பினர்களும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு 1 உறுப்பினரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஊவா மாகாணசபையிலும், கட்சித்தாவல் இடம்பெறலாம் என்பதால், கடும் குளிர் என்று காரணம் கூறி சபை அடுத்த மாதம் 15ம் நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *