அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதலுக்கு சூட்டப்பட்ட பெயர்- ‘திருமண மண்டபம்’
சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது நடத்தப்படவிருந்த தற்கொலைத் தாக்குதலுக்கு திருமண மண்டபம் (wedding hall) என்று பாகிஸ்தானிய உளவுப்பிரிவினால் பெயரிடப்பட்டிருந்ததாக, இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளியான இலங்கையை சேர்ந்த சகீர் ஹுசேனுக்கு, பூந்தமல்லி நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மூலம் பெறப்பட்டுள்ள தகவல்களை தெசிய புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ளது.
தென்னிந்தியாவில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஹுசேன், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கும் குறிவைத்திருந்ததை தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது உறுதி செய்துள்ளன.
கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியான அமீர் சுபைர் சித்திக் உத்தரவின் பேரில், வெளிநாட்டு தூதரகங்களை ஒளிப்படம் எடுத்தும், முக்கிய இடங்களின் தகவல்களை சேகரித்தும் அனுப்பியதாக சகீர் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
அவரது மடிக்கணினியில் அதற்கான ஆதாரங்களும் சிக்கி உள்ளன.
சென்னையில் சகீர் ஹுசேன் கைதானதும், கொழும்பில் இருந்து சித்திக்கை பாகிஸ்தான் திரும்ப அழைத்துக் கொண்டது.
மேலும் சகீர் ஹுசேன் பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரிகள் சிலரை பாங்கொக்கில் சந்தித்து சதித்திட்டம் தீட்டி உள்ளார்.
அப்போது, தற்கொலைக் குண்டுதாரியாக பயன்படுத்தவிருந்த 2 பேரையும் அவர் சந்தித்துள்ளார்.
அங்கு இரு தீவிரவாதிகள் மூலம் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அவர்கள் தூதரகத்துக்கு திருமண மண்டபம், தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு சமையல்காரர்கள் (cooks), தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் வெடிபொருளுக்கு வாசனைப்பொருட்கள் (Spice) என்ற சங்கேத சொற்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
மாலைதீவிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவவும் திட்டமிட்டிருந்தனர். ஆனால், சகீர் ஹுசேன் பிடிபட்டதால் அவர்கள் திட்டம் தோல்வி அடைந்துள்ளது.
இந்தத் தகவலின் அடிப்படையில், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிறிலங்காவுக்குச் சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக உள்துறை மற்றும் வெளிவிவகார அமைச்சுகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதில், கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கும் பங்கு இருப்பதால் அவர்களையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்து கைது செய்யும் நடவடிக்கையில் தேசிய புலனாய்வு அமைப்பு ஈடுபட்டுள்ளது.
சிறிலங்காவைச் சேர்ந்தவர்களுக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
எனவே, விரைவில் தேசிய புலனாய்வு குழு, சிறிலங்கா சென்று விசாரணை மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.