மேலும்

சிறிலங்கா அரசு நடத்திய உள்நாட்டுப் போர்முறை மத்திய கிழக்குக்கு பொருந்துமா?

Sri-Lankan-Tamil-refugeesஆயுதக் குழுவொன்றை முற்றாக அழிப்பதன் மூலமோ அல்லது இராணுவ வெற்றியை நிலைநாட்டுவதன் மூலமோ வெற்றிகொள்ளப்படும் எந்தவொரு யுத்தமும் ஒரு ஆட்சியை சிறந்த வழியில் நடாத்துவதற்கான வழியாக இருக்காது.

இவ்வாறு The Oxonian Globalist என்னும் ஆய்வுச் சஞ்சிகையில் Siddharth Venkataramakrishnan எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

மிக நீண்ட கால யுத்தம், கிளர்ச்சி, இராணுவக் குழுக்கள், கெரில்லாக்கள் மற்றும் தற்கொலைக் குண்டுதாரிகள் போன்றவர்கள் அரச படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பல்வேறு இன மற்றும் மத பிரிவுகளைக் கொண்ட ஒரு நாட்டிலேயே இது இடம்பெற்றது.

அரச படைகளும் பயங்கரவாதிகளும் அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டன. இவையெல்லாம் இஸ்லாமிய நாடொன்றில் இடம்பெறவில்லை. இது சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமே ஆகும்.

1983ல் சிறிலங்காவில் வாழ்ந்த சிங்கள இனத்தவருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் ஆரம்பமான உள்நாட்டு யுத்தமானது பல பத்தாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்டது. 1983 இற்குப் பின்னரான சில ஆண்டுகளில், இந்தியாவின் பிரதமர்களான இந்திரா மற்றும் ராஜீவ் காந்தியின் அரசாங்கங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட சில தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களை வழங்கியதன் மூலம் இவர்கள் கெரில்லா யுத்த முறைமையிலிருந்து மரபு வழி யுத்தத்திற்கு மாறுவதற்கான ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்திய அமைதி காக்கும் படை என்கின்ற பெயரில் 1980களில் இந்தியப் படைகள் சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்தியப் படைகள் அனுப்பப்பட்ட போதிலும் இது மோதல்கள் மேலும் அதிகரிப்பதற்குக் காலாகக் காணப்பட்டது.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது இந்திய அமைதி காக்கும் படை மற்றும் சிறிலங்கா இராணுவம் ஆகிய இரு தரப்பினருடனும் யுத்தத்தில் ஈடுபட்டது. இந்த யுத்தத்தின் விளைவால் சிறிலங்கா வாழ் மக்கள் பாதிக்கப்பட்டனர். சிறிலங்காவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையானது பாலியல் வன்புணர்வுகள் உட்பட பல்வேறு போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக இன்றளவும் குற்றம் சுமத்தப்படுகிறது.

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மீது வெற்றிகரமாகத் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட தேன்மொழி இராஜரட்ணம் இந்திய அமைதி காக்கும் படையினரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

மே 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்துடன் சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்னமும் சிறிலங்காத் தீவில் இயல்புநிலை கொண்டுவரப்படவில்லை. போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் பிரபாகரனின் 12 வயதான மகன் உயிருடன் பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் 2013ல் வெளியிடப்பட்டன.

இதற்கு முன்னர், 2011ல் சனல் 04 தொலைக்காட்சி சேவையின் காணொலி ஒன்று வெளியிடப்பட்டது. இக்காணொலியானது சிறிலங்காத் தீவில் இடம்பெற்ற பல்வேறு போர்க்கால குற்றங்களை சாட்சியங்கள் நிரூபித்திருந்தது. இதில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். பிரான்சின் லாச்சப்பேல் என்கின்ற இடத்தில் காணப்படும் பெரும்பாலான சிறிலங்காத் தமிழர்களின் வர்த்தக நிலையங்களில் பிரபாகரனின் ஒளிப்படத்தைக் காணலாம். பாரிசின் பெரும்பாலான இடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பல்வேறு காட்சிகளைக் காணலாம்.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவடைந்தமை தொடர்பில் ஒரு தீர்மானத்தை எட்டுவதும் அதனை நாம் தற்போதைய பிரச்சினைக்காகப் பிரயோகிப்பதும் யோசிக்க வேண்டிய விடயமாகும். தனது தீவிலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்த முதலாவது நாடாகத் தனது நாடே காணப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் புகழுரைத்து வருகிறது. அரச பயங்கரவாதம் என்பதை நாம் கருத்திலெடுக்காவிட்டால், சிறிலங்கா அரசாங்கம் கூறுவது உண்மைதான்.
ஆனால் ஈராக்கிய அரசாங்கமும் சிறிலங்காவைப் போல் செயற்படும் எனக் கற்பனை செய்வது கடினமானதாகும். மத்திய கிழக்கின் எல்லைகள் விரிவுபட்டதாகும். ஆனால் சிறிலங்காவுக்கு கடல் வழியாக அல்லது வான் வழியாக மட்டுமே செல்ல முடியும். இதற்கும் மேலாக, சிறிலங்காவின் சிறுபான்மையினக் குழுக்களில் ஒன்றான தமிழ் மக்களை விட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வேறெந்த சமூகமும் ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் மிதவாதச் செயற்பாட்டால் இவர்கள் புறந்தள்ளப்பட்டனர். குறிப்பாக ராஜீவ் காந்தியின் படுகொலையானது புலிகள் மீதான மக்களின் அபிப்பிராயத்தைத் தோல்வியுறச் செய்தது. ஆகவே இவ்வாறானதொரு நிலையில் சிறிலங்கா தனது நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து விட்டதாகத் தம்பட்டம் அடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் பிரபலம் பெற்றிருக்கவில்லை. புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் புலிகளுக்குத் தமது ஆதரவையும், தமிழீழத் தாயகத்திற்கான தமது ஆதரவையும் இன்றளவும் வழங்கிவருகின்ற போதிலும் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறும் சம்பவங்கள் ஊடகங்களில் முதன்மைப்படுத்தப்படுவது போன்று தமிழர்களின் பிரச்சினைகள் உலகின் கவனத்தை அவ்வளவாக ஈர்க்கவில்லை.

சிறிலங்காவில் 21வது நூற்றாண்டில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட யுத்தத்தின் விளைவுகளை சமூக ஊடகங்கள் பிரதிபலிக்கவில்லை. இந்த ஊடகங்கள் 1980 மற்றும் 1990களில் தமிழ் மக்களின் பிரச்சினையை எவ்வாறான சித்தாந்தத்துடன் நோக்கினவோ அதேபோன்றே இன்றளவும் கருதுகின்றன.

பதிலி யுத்தங்கள் மற்றும் ஆயுதக் குழுக்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தங்களிலிருந்து நாங்கள் சில பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியும். இந்தியா பிராந்திய சக்தியாக உள்ளதையும்,  இந்தியத் தமிழர்கள் சுயநிர்ணய ஆட்சியைக் கோரிவிடுவார்களோ என்கின்ற அச்சத்தையும் கருத்திற்கொண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய தமிழ்த் தேசியவாத ஆயுதக் குழுக்களுக்கும் 1980களில் ஆயுதப் பயிற்சிகளையும் ஆயுதங்களையும் வழங்கியது.

சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் முற்றுகையிடப்பட்ட போது, இந்தியா முற்றுகையிடப்பட்ட புலிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிப் பொதிகளை விமானம் மூலம் வீசியது. இந்திரா காந்தியின் இத்தகைய நடவடிக்கையானது இவரது மகன் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழர்கள் வாழும் சிறிலங்காவின் வடக்கைக் கைப்பற்றுவதற்கும், இந்தியாவின் பிராந்திய அதிகாரத்தை மேலும் விரைவுபடுத்துவதற்காக சிறிலங்காவுக்கு இந்திய அமைதி காக்கும் படையை அனுப்புவதற்கான அனுமதியை வழங்கியது.

சிறிலங்கா அரசாங்கமானது இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி தென் சிறிலங்காவில் சிங்கள தேசியவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் தனது படைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியது.

சிறிலங்காவுக்கு இந்திய அமைதி காக்கும் படை அனுப்பப்பட்டதன் பின்னர், பெரும்பாலான தமிழ்க் குழுக்கள் தமது ஆயுதங்களை ஒப்படைத்த போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இதற்கு உடன்படவில்லை. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்தது. சிறிலங்கா அரசாங்கம் இந்திய அமைதி காக்கும் படைக்கெதிராக புலிகள் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் புலிகளுக்கு ஆதரவு வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டது. இருப்பினும் இந்தியாவின் புலனாய்வுத் தோல்விகளால் இந்த யுத்தம் தவறாக வழிநடாத்தப்பட்டது.  இந்தியப் புலனாய்வின் பலவீனத்தால், இந்திய அமைதி காக்கும் படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான யுத்தத்தில் இந்தியத் தரப்பு அதிக இழப்பைச் சந்தித்தது.

1990ல் இந்தியப் படை முற்றாக சிறிலங்காவை விட்டு வெளியேறியது. இதில் பல பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர், உளவியல் பாதிப்பிற்கு உள்ளாகினர், வீடிழந்தனர். இதற்கு ஒரு ஆண்டின் பின்னர், தாயாரான இந்திரா காந்தியால் வளர்க்கப்பட்ட ஆயுதக் குழுவான புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் மகனான ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

உள்நாட்டுப் போரை மகிந்த ராஜபக்ச வெற்றி கொண்டதன் பின்னர் இவர் மாபியா அரசை நிர்வகித்து வருகிறார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர் அரசியல் சதிகள் பல அரங்கேறுவதற்குக் காரணமாக உள்ளார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இவர் பல வழிகளில் நோக்கில், பிறிதொரு ‘அசாட்’ எனக் கூறலாம்.

ஆயுதக் குழுவொன்றை முற்றாக அழிப்பதன் மூலமோ அல்லது இராணுவ வெற்றியை நிலைநாட்டுவதன் மூலமோ வெற்றிகொள்ளப்படும் எந்தவொரு யுத்தமும் ஒரு ஆட்சியை சிறந்த வழியில் நடாத்துவதற்கான வழியாக இருக்காது என்பதும் இது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான மிக வேகமான, மிகவும் வினைத்திறனுள்ள வழியாகவும் இருக்கும் என்பதே சிறிலங்காவின் உள்நாட்டுப் போரிலிருந்து கற்றுக் கொள்ளப்படும் பாடமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *