மேலும்

யாழ்ப்பாண ஆலயங்களில் மணி ஒலிக்க, தீபம் ஏற்ற சிறிலங்கா படையினரால் தடை

Jaffna-Armyஉலகெங்கும் இன்று மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படும் நிலையில், யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் சிறிலங்கா படையினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வீதிகளெங்கும், சிறிலங்கா படையினரும், காவல்துறையினரும் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே யாழ்.பல்கலைக்கழகச் சூழல், இராணுவக் கெடுபிடிக்குள் சிக்கியிருந்த நிலையில், இன்று குடாநாட்டின் சகல பகுதிகளிலும், படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.குடாநாடு முழுவதும் இன்று காலை முதல் கடுமையாக கொட்டிக் கொண்டிருக்கும் மழைக்கும் மத்தியில், பாதுகாப்பு பணியில் சிறிலங்கா படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இன்று ஆலயங்களில் மணி ஒலி எழுப்பக் கூடாது என்றும், தீபம் ஏற்றக் கூடாது என்றும் சிறிலங்கா படையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இன்று மாலையில், மணி ஒலி எழுப்பவோ, தீபம் ஏற்றவோ கூடாது என்று ஆலய பூசகர்களை இராணுவத்தினர் தனிப்பட்ட முறையில் மிரட்டியுள்ளனர்.

நேற்று வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறவிருந்த சிறப்பு பூசை வழிபாடுகளை தடுத்து நிறுத்த சிறிலங்கா இராணுவத்தினர் முயன்றனர்.

எனினும், படையினரின் எச்சரிக்கையையும் மீறி அங்கு பூசை வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *