மேலும்

யாருக்கு ஆதரவு? – நிதானமாக முடிவெடுக்க கூட்டமைப்பு முடிவு

sampantharசிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு இன்னும் காலஅவகாசம் இருப்பதால், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதில்லை என்றும், தமிழ்மக்கள் , சிவில் சமூகத்தினது கருத்துக்களைக் கேட்டறிந்து நிதானமாக முடிவெடுப்பது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்றுக்காலை சிறிலங்கா நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் கூடி ஆராய்ந்தது.

சுமார் இரண்டு மணிநேரம் வரையில், இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,

”அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்த இந்தக் கூட்டத்தில் அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

பல்வேறு மட்டங்களில் இதுகுறித்து ஆராயப்பட்ட போதிலும், யாரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை.

தமிழ் மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

புத்திஜீவிகள், சிவில் சமூகத்தினரின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளவுள்ளோம்.

அதிபர் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் நாளே இடம்பெறவுள்ளது. டிசம்பர் மாதம் 8ம் நாள் தான் வேட்புமனுத் தாக்கல் தாக்கல் செய்யப்படவுள்ளது.

எனவே, இதுதொடர்பாக தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்கு எமக்கு காலஅவகாசம் இருக்கிறது.

இந்த விடயத்தில் அவசரப்பட வேண்டிய தேவையில்லை. மிகவும் பக்குவமான ஆராய்ந்து இதுதொடர்பாக நாம் தீர்க்கமான முடிவெடுப்போம்.

அதற்காக தொடர்ந்தும் எமக்குள்ளே பேச்சுக்களை நடத்தவுள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கும் கருத்துக்களே அதிகாரபூர்வமானது என்று நேற்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களை இரா.சம்பந்தனே ஊடகங்களுக்குத் தெரிவிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *