மேலும்

கொமன்வெல்த் மாநாட்டின் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் சிறிலங்காவின் முயற்சி படுதோல்வி

கொமன்வெல்த் மாநாட்டின் மூலம் பெருமளவு வெளிநாட்டு முதலீடுகளைக் கவரலாம் என்று திட்டமிட்டிருந்த சிறிலங்காவுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் சிறிலங்காவில் நடத்தப்பட்ட கொமன்வெல்த் மாநாட்டின் வர்த்தக மன்றக் கூட்டத்தில், 10 பில்லியன் டொலர் முதலீட்டை எதிர்பார்த்து 50 முதலீட்டுத் திட்டங்களை சிறிலங்கா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சும், முதலீட்டுச் சபையும் சமர்ப்பித்திருந்தன.

கொமன்வெல்த் மாநாடு முடிந்து ஒரு ஆண்டு நிறைவடைவடைந்துள்ள போதும் அவற்றில் இரண்டு திட்டங்களில் மாத்திரமே, முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

கடந்த ஆண்டு நொவம்பர் மாதம், மூன்று பிரதான சீன நிறுவனங்கள் முதலீட்டுச் சபையுடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

அவற்றில், இரண்டு கொமன்வெல்த் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட 50 திட்டங்களில் உள்ளடக்கப்பட்டவையாகும்.

இந்த ஆண்டு துவக்கத்தில் 12 முதலீட்டாளர்களுடன் பேசி வருவதாக, சிறிலங்கா முதலீட்டுச் சபை கூறியிருந்த போதிலும், எஞ்சிய 48 திட்டங்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவரத் தவறியுள்ளன.

இதுகுறித்து தற்போதைக்கு எதுவும் கூறமுடியாது என்றும் சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்த்தளவுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கத் தவறியுள்ளது.

2012ம் ஆண்டு 1.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை சிறிலங்கா இலக்கு வைத்திருந்த போதும், 160 மில்லியன் டொலர் குறைவாகவே முதலீடுகள் இடம்பெற்றிருந்தன.

2013ம் ஆண்டில் 2 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை சிறிலங்கா எதிர்பார்த்த போதும், 610 மில்லியன் டொலர் குறைவாகவே முதலீடுகள் கிடைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *