மேலும்

வடக்கு மாகாண முதலமைச்சரால் சென்னையில் ஆற்றப்பட்ட உரை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது – தி இந்து

Tamil war survivors at a camp in Vavuniyaகடந்த 25 ஆண்டுகளின் பின்னர் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமிழர் சமூகத்தின் தலைவர் என்ற வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்தியாவின் சென்னையில் மக்கள் மத்தியில் எடுத்துக்கூறிய முதலாவது அரசியற் தலைவராக விக்னேஸ்வரன் நோக்கப்படுகிறார். இவரால் சென்னையில் ஆற்றப்பட்ட உரையானது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவ்வாறு THE HINDU ஆங்கில நாளிதழில் K. VENKATARAMANAN எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் இந்தியாவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு இந்தியா உதவவேண்டும் என சென்னையில் வைத்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளதானது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் அ.அமிர்தலிங்கம் இந்திய மண்ணில் தமிழ் மக்களின் நீதிக்காக கோரிக்கை விடுத்த காலத்திலிருந்து இதுவரை தமிழ்த் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களில் மிகவும் உணர்ச்சிமிக்கதாகவும், காலத்திற்குப் பொருத்தமானதாகவும் அமைந்துள்ளது.

இதனை வரலாற்று ரீதியாக நோக்கில், 1989ல் அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து கடந்த 25 ஆண்டுகளின் பின்னர் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமிழர் சமூகத்தின் தலைவர் என்ற வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்தியாவின் சென்னையில் மக்கள் மத்தியில் எடுத்துக்கூறிய முதலாவது அரசியற் தலைவராக விக்னேஸ்வரன் நோக்கப்படுகிறார். இவரால் சென்னையில் ஆற்றப்பட்ட உரையானது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அத்துடன் சிறிலங்கா இராணுவ நடவடிக்கையானது மே 2009ல் முற்றுப்பெற்றதன் பின்னரான ஈழத்தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியற் தலைவரால் சென்னையில் நிகழ்த்தப்பட்ட முதலாவது உரையாக வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை அமைந்துள்ளது.

இந்தியாவால் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அழுத்தத்தின் விளைவாக நடாத்தப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் வடக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் விக்னேஸ்வரனால் மேற்கொள்ளப்பட்ட இந்தியாவுக்கான முதலாவது பயணமாக இது அமைந்துள்ளது.

போதியளவு அதிகாரத்தைக் கொண்டிராத மாகாண சபை நிர்வாகமானது இராணுவ ஆட்சிக்குள் அகப்பட்டிருந்த சூழலில் சிறிலங்கா உச்ச நீதிமன்றின் முன்னாள் நீதிபதியான விக்னேஸ்வரன் மக்கள் மன்றத்தால் வழங்கப்பட்ட ஆணையை ஏற்று வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். இவ்வாறான ஒரு கெட்டவாய்ப்பான சூழலில், தனக்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணையின் மூலம் விக்னேஸ்வரன் மாகாண சபையை முன்னோக்கி வழிநடாத்திச் செல்கிறார்.

‘பாதுகாப்பும் இறையாண்மையைப் பாதுகாத்தலும்’ என்கின்ற தலைப்பில் சென்னையிலுள்ள கே.ஜி.கண்ணபிரான் நினைவுச் சொற்பொழிவில் வடக்குமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரை நிகழ்த்தியமையானது ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் ஏற்கனவே இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா எத்தகைய பங்களிப்பை வழங்குகிறது என்பதை வினவுகின்ற மிகமுக்கிய குறிப்பிடத்தக்க ஒரு சம்பவமாக அமைந்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் இறையாண்மை என்கின்ற பெயரில் மக்களின் சுதந்திரம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட முடியாது என்பது திரு.விக்னேஸ்வரனின் உரையின் மிகமுக்கிய கருத்தாகக் காணப்பட்டது. ‘அரசாங்கத்தின் பாதுகாப்பு’ என்பதை விட ‘மக்கள் பாதுகாப்பு’ என்பது பாதுகாப்பு என்கின்ற எண்ணக்கரு மூலம் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என விக்னேஸ்வரன் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

எதுஎவ்வாறிருப்பினும், முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரனின் உரையானது உரிமைகள் தொடர்பான விவாதமாகக் காணப்படவில்லை. இது இந்தியாவின் மனசாட்சிக்கு விடுக்கப்பட்ட ஒரு உணர்ச்சிகரமான முறையீடாகக் காணப்பட்டது. ஈழத்தமிழர் விவகாரத்தை இந்தியா ஒருபோதும் அசட்டை செய்துவிட முடியாது என்பதைக் கோருகின்ற ஒரு மனுவாக விக்னேஸ்வரனின் உரை அமைந்திருந்தமை தெளிவாகும்.

விரிவாக நோக்கில், விக்னேஸ்வரனின் உரையானது அனைத்துலக சமூகத்தின் முன்னால் மிதவாத தமிழ்த் தலைமையால் முன்வைக்கப்பட்ட ஒரு நம்பகமான முறைப்பாடாகக் காணப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக சமூகத்திடம் அதன் இராஜதந்திர, ஆயுத மற்றும் தார்மீக ஆதரவை வழங்குமாறு கோரியபோது சிறிலங்கா அரசாங்கத்தால் அனைத்துலக சமூகத்திடம் வெளிப்படையாக முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் உத்தரவாதங்கள் போன்றவற்றை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது உரையின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டே திரு.விக்னேஸ்வரன் இந்தியாவிடம் தமிழ் மக்களின் பிரச்சினையில் பங்கெடுக்க வேண்டுமென்கின்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

சிறிலங்காவின் அரசியல் யாப்பில் வரையப்பட்டுள்ள 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவேன் எனவும், இதன்மூலம் சிறிலங்காவில் செயற்படும் தமிழ் அரசியற் கட்சிகளுடன் சமரசப் பேச்சுக்களை மேற்கொள்வேன் என்பதையும் உறுதிப்படுத்தி மே 2009ல் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீமூனுடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டமையை திரு.விக்னேஸ்வரன் தனது உரையின் போது மீளவும் நினைவுபடுத்தினார்.

இந்தியாவின் சட்ட மற்றும் தார்மீகக் கடப்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாணசபை முதலமைச்சர் குறிப்பிடும்போது, 1987ல் மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கை மற்றும் போரின் இறுதிக்கட்டத்தில் இந்திய அரசாங்கத்தால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட இராணுவ, அரசியல் மற்றும் புலனாய்வு சார் உதவிகள் போன்றன சிறிலங்காவில் வாழும் தமிழ் சமூகத்திற்கு பயனுள்ள ஒரு அரசியற் தீர்வை அந்நாட்டு அரசாங்கம் வழங்கும் என்கின்ற உறுதிப்படுத்தலின் விளைவாகவே இந்தியாவால் வழங்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டினார்.

இவை அனைத்தும் சிறிலங்கா அரசாங்கத்தால் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டவை என்பது தெளிவானதாகும் எனவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ராஜபக்ச இத்தகைய வாக்குறுதிகளை வழங்காதிருந்திருந்தால் இந்தியா தனது தலையீட்டை அடக்கி வாசித்திருக்கலாம். ஆனால் சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தமானது வெறுமனே பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என அதிபர் ராஜபக்ச பொய்யுரைத்திருந்தார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற, இடம்பெறும் இராணுவ-அரசியல் மோதலை எந்தவொரு வெளியாரின் தலையீட்டால் தடுக்கமுடியாது. இதனை இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்தே தடுக்க முடியும். சிறிலங்காவில் நிலவும் அரசியற் பிரச்சினை யுத்தத்தின் மூலம் தீர்க்கப்பட முடியாது. இந்நிலையில் எவ்வித அதிகாரமும் வழங்கப்படாது வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டமை, மாகாண சபைக்கு இணையாக இராணுவ நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டமை போன்ற சூழலில் சிறிலங்காவின் வடக்கில் நீதி மற்றும் சமாதானம் போன்றவற்றை ஒருபோதும் நிலைநிறுத்த முடியாது.

இந்திய அரசாங்கத்திடம் வடக்கு மாகாண முதலமைச்சர் விடுத்துள்ள கோரிக்கைகளில், தனது மாகாணத்தில் நிலவும் இராணுவமயமாக்கலைத் தடுப்பதற்கு இந்தியா உதவவேண்டும் என்பதே பிரதானமானதாகக் காணப்படுகிறது. வடக்கில் இராணுவமயமாக்கல் நிலவுகிறது என்பதை அனைத்துலக சமூகம் நன்கு புரிந்துகொண்டுள்ள போதிலும், இந்த விடயத்தை அனைத்துலக சமூகம் தனது கருத்திலெடுத்துச் செயற்படுத்தவில்லை. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழ் செயற்படும் அரசாங்கத்தின் உள்ளக அரசியற் சூழலானது முற்றிலும் மாற்றமடைந்துள்ளது. சிறிலங்காவின் உள்ள அரசியல் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது.

சமாதான காலத்திலும் போரின் போதும் சிறிலங்காவில் அமைதி நிலவுவதற்கு உத்தரவாதமளித்த அனைத்துலக சமூகமானது இங்கு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டிய தேவையெழுந்த போது அப்போதைய அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்களிப்பைக் கோரிநின்றது.

சிறிலங்காவில் செயற்படும் இரு பெரும் பிரதான அரசியற் கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் பங்களிப்புடனேயே நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைக்கு நாடாளுமன்றம் மூலம் தீர்வுகாண முடியும் என்பதையும் அனைத்துலக சமூகம் வலியுறுத்தியிருந்தது. எவ்வாறெனினும், சிறிலங்காவின் தற்போதைய நாடாளுமன்றம் மற்றும் சிறிலங்காத் தீவு முழுமையிலும் நிலவும் அதிகார வலு போன்றவற்றுக்கு இடையிலான தற்போதைய உறவு நிலையானது நாட்டில் நிலவும் எந்தவொரு பிரச்சினைக்கும் மகிந்த ராஜபக்ச என்கின்ற தனிமனிதனின் விருப்பு வெறுப்புப் பிரதிபலிப்பதாக மாறியுள்ளது.

நாட்டில் தொடரும் இராணுவமயமாக்கல், வடக்கின் மக்கள் வாழ்வுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள், வளர்ந்து வரும் சிங்கள ஏகாதிபத்தியவாதக் குழுக்கள், இவர்களால் நாட்டில் வாழும் முஸ்லீம்கள் உட்பட்ட சிறுபான்மைக் குழுக்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள், ஜனநாயக ஆட்சிமுறைமையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், நீதியாட்சி குழிதோண்டிப் புதைக்கப்படுதல், அரசாங்கத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள், தலையீடுகள் போன்ற அனைத்திற்கும் திரு.ராஜபக்சவே காரணமாவார்.

சிறிலங்காவில் மீண்டும் சட்ட ஆட்சி மற்றும் ஜனநாயகம் போன்றன தளைப்பதற்கு இந்தியா தனது பங்களிப்பை நல்கவேண்டும் என திரு.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை அவ்வளவு இலகுவாக அடைந்துவிட முடியாது. இந்தியாவானது ராஜபக்சவின் ஆட்சியில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதற்கான அல்லது சிறிலங்காவில் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவருக்கு வெளிப்படையாக தனது ஆதரவை வழங்குவதை உறுதிப்படுத்துவதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும்.

அதிபராகச் செயற்படும் கடந்த ஒன்பது ஆண்டுகாலத்தில், ராஜபக்ச குறிப்பிடத்தக்க இரண்டு வெற்றிகளை நிலைநாட்டியுள்ளார். அதாவது நாட்டின் அரசியலில் தனக்கென ஒரு ஏகபோக உரிமையை நிலைநாட்டியுள்ளமை மற்றும் மேற்குலக நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றால் தனக்கெதிராக மேற்கொள்ளப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்பில் இராஜதந்திர ரீதியாக வெற்றி கொள்வதற்காக இந்தியா மற்றும் சீனா ஆகியவற்றுடன் இராஜீக உறவுகளைப் பலப்படுத்தியுள்ளமை போன்றனவே அவ்விரு வெற்றிகளாகும்.

இவ்வாறான ஒரு பின்னணியில் தற்போது மூன்றாவது தடவையாகவும் சிறிலங்கா அதிபராகப் போட்டியிடுவதற்கான அதிகாரத்தைப் பெற்றுள்ளார். இவர் மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பது நிச்சயமற்றது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் ராஜபக்ச சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார். இந்நிலையில் இவர் ஜனவரி மாதத்தில் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் கடந்த காலத்தைப் போன்று சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெறுவாரா என்பது எதிர்வுகூற முடியாததாகும்.

இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். கடந்த தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கே கூட்டமைப்புத் தனது ஆதரவை வழங்கியிருந்தது. சிறிலங்காத் தீவு முழுவதிலும் ராஜபக்ச தனக்கான முதலாவது அதிபர் தேர்தலில் அமோக ஆதரவைப் பெற்றதைத் தடுத்து அவருக்கான வாக்குப் பலத்தைக் குறைக்கும் நோக்குடனேயே கடந்த தேர்தலில் கூட்டமைப்பானது பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியது.

ராஜபக்சவுக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் தெளிவான ஒருதலைப்பட்ச நிலைப்பாட்டை எடுப்பதானது சிங்கள சமூகத்தின் மத்தியில் அச்சுறுத்தலாக அமையலாம். இருப்பினும் பரந்துபட்ட அடிப்படையில் சிறிலங்காவில் ஜனநாயக ரீதியான எதிர்ப்புத் தேவை என்பதைக் கருத்திற்கொண்டு தமிழ்க் கட்சிகள் தமது தீர்வை எட்டவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *