மேலும்

கொழும்புக்கு வருகிறது ரஸ்ய நாசகாரி போர்க்கப்பல்

Yaroslav-Mudryரஸ்யக் கடற்படையின் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று நான்கு நாள் பயணமாக இந்த மாத இறுதியில்  கொழும்புத்  துறைமுகத்துக்கு வரவுள்ளதாக கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் உருவாக்கப்படவுள்ள, தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்களின் கலந்துரையாடலை முன்னிட்டே, பலஸ்டிக் கப்பற் படைப்பிரிவைச் சேர்ந்த Yaroslav Mudiry என்ற பெயருடைய இந்த நாசகாரி கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளது.

கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கேணல் டிமிற்றி மிக்கேலோவ்ஸ்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நாசகாரிப் போர்க்கப்பலில், 30 அதிகாரிகள் உள்ளிட்ட 200 கடற்படையினர் பணியாற்றுவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

வரும் 24ம் நாள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும் ரஷ்ய நாசகாரிப் போர்க்கப்பல், நான்கு நாட்கள் இங்கு தரித்திருக்கும்.

வரும் நவம்பர் 27ம் நாள், 8 சார்க் நாடுகள் மற்றும் 10 ஆசியான் நாடுகளின் பாதுகாப்பு தலைவர்கள் இணைந்து, SASEAN Security Community (SSC) என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கவுள்ளனர்.

கொழும்பில் SASEAN Defence Chiefs Dialogue என்ற பெயரில், மூன்று நாட்கள் நடக்கவுள்ள இந்தக் கலந்துரையாடலில், ரஸ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனடோலி அன்ரனோவ்வும் கலந்து கொள்ளவுள்ளார்.

இது இந்தக் கூட்டத்தை ரஸ்யா மிகவும் முக்கியத்துவமாக பார்க்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கேணல் டிமிற்றி மிக்கேலோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் ரஸ்யாவும் சீனாவும் பார்வையாளர்களாக அழைக்கப்பட்டுள்ளன.

சீனாவில் இருந்து உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று இந்தக் கலந்துரையாடலுக்காக கொழும்பு வரும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கலந்துரையாடலின் மூலம், பிராந்திய பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட்டை ஊக்குவித்தல், பாதுகாப்பில் ஒத்துழைப்பு, பாதுகாப்புச் சவால்களைப் புரிந்து கொள்வதன் ஊடாக பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்புதல், போன்ற நோக்கங்களை அடிப்படையாக வைத்து இந்த SASEAN Security Community (SSC) அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

சிறிலங்காவில் இந்த ஆண்டு உருவாக்கப்படும் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஆண்டு தோறும், கலந்துரையாடல்கள் ஒழுங்கு செய்யப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *