பலாலி, காங்கேசன்துறையை அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அரசு தயக்கம்
காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா நிதி வழங்க முன்வந்த போதிலும், சிறிலங்கா அரசாங்கம் அதில் ஆர்வம் காட்டவில்லை என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்ட அவர் நேற்று யாழ்.ஊடக மையத்தில் நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்தால், அது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தின் காரணமாகவே, சிறிலங்கா அரசாங்கம் அவற்றை அபிவிருத்தி செய்யத் தயங்குகிறது.
யாழ்ப்பாணத்தில் நிலவும் மூடுபனி மற்றும் காற்று மாசுபாடு காரணமாக, பார்வைத்திறன் குறைந்து, விமானங்கள் தரையிறங்க முடியாமல் போனதால், கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
பலாலி விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகள் கூட பொருத்தப்படவில்லை என்பதை அறிந்து தான் அதிர்ச்சியடைந்தேன்.
இந்தச் சூழல், இந்திய வணிகர்களையும் பெரும் முதலீட்டாளர்களையும் யாழ்ப்பாணத்திற்கு நேரடியாக வருவதிலிருந்து ஊக்கமிழக்கச் செய்கிறது.
இதனால் அவர்கள் கொழும்பு வழியாகவே சிறிலங்காவுக்குள் நுழைய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.
காங்கேசன்துறை துறைமுகமும் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் முக்கிய பங்காற்ற முடியும்.
இந்த இரண்டு வசதிகளையும் பொறுப்பேற்று மேம்படுத்துவதற்கு இந்தியா உதவி வழங்க முன்வந்திருந்தது.
சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை, தென்பகுதி நலன்களால் தூண்டப்பட்டிருக்கிறது., இதன் மூலம் வணிகத் தொடர்புகள் அனைத்தும் கொழும்பு வழியாகவே நடைபெற வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
யாழ்ப்பாணம் விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை குறித்து, இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும், இது தொடர்பாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முறைப்பாடு அளிக்கப் போவதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
