எவ்பிஐயின் விசாரணை ஒத்துழைப்புகள் தொடரும்
அனைத்துலக இணைய மோசடிகள் தொடர்பாக, அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவு ( எவ்பிஐ) மற்றும் அமெரிக்க நீதித் துறை அதிகாரிகள் சிறிலங்கா அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
எவ்பிஐ அதிகாரிகள் குழு, நவம்பர் 16ஆம் நாள் முதல் 22 ஆம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருந்து இந்த விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
இதன்போது, எவ்பிஐ அதிகாரிகள் சிறிலங்காவின் சட்ட அமுலாக்கத் துறையினருடன் இணைந்து அனைத்துலக மோசடி வலையமைப்புகள் குறித்து விசாரிப்பதுடன், இணையவழி மோசடிகளிலிருந்து அமெரிக்கர்களையும் இலங்கையர்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.
இந்த நாடுகடந்த குற்ற வலையமைப்புகள் உலகெங்கிலும் பில்லியன் கணக்கான டொலர்களைத் திருடுகின்றன, இதனால் எல்லை தாண்டிய சட்ட அமுலாக்க ஒத்துழைப்பு அவசியமாகிறது.
எங்கள் கூட்டாண்மை, குற்றவாளிகளைப் பொறுப்பேற்கச் செய்யவும், இரு நாடுகளிலும் உள்ள மக்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
மேலும், இந்தப் பயணத்துடன், எங்கள் பணிகள் நின்று விடாது.
அமெரிக்க மற்றும் சிறிலங்கா சட்ட அமுலாக்கப் பங்காளிகள், துப்புகளைத் தொடர்ந்து பின்தொடர்வது, விசாரணைகளை வலுப்படுத்துவது மற்றும் குற்ற வலையமைப்புகளைச் சீர்குலைப்பது ஆகிய நடவடிக்கைகளைத் தொடர்வார்கள்.
இந்தப் பயணத்தின் போது, எவ்பிஐ மற்றும், நீதித்துறை அதிகாரிகள், சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சிறிலங்கா காவல்துறையின், கணினிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCID), குற்றவியல் குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) மற்றும் தொழில்நுட்ப உதவிப் பிரிவு (TAU) உள்ளிட்டவற்றுடன் கலந்துரையாடினர்.
இந்தக் கலந்துரையாடல்கள், புலனாய்வு உத்திகள், டிஜிட்டல் சான்றுகளுக்கான பயிற்சி, மற்றும் சிறிலங்கா காவல்துறை சோதனைகளின் போது மீட்கப்பட்ட சான்றுகளைப் பிரித்தெடுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அனைத்துலக மோசடி வலையமைப்புகளுக்கு எதிரான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தன.
இந்த சந்திப்பின் போது, செயற்பாட்டில் உள்ள இரண்டு மோசடி மையங்களின் விசாரணைகள் ஆய்வு செய்யப்பட்டன, மேலும் 80-க்கும் மேற்பட்ட மின்னணு சாதனங்கள் டிஜிட்டல் சான்றுகளுக்காகப் பரிசோதிக்கப்பட்டன.
சிறிலங்கா சட்ட அமுலாக்க அதிகாரிகளும் அமெரிக்க சகாக்களும் தொடர்ந்து தகவல்களைப் பகிர்ந்து கொள்வார்கள், புலனாய்வுத் தடயங்களைத் தொடர்வார்கள், மற்றும் பன்னாட்டுக் குற்ற வலையமைப்புகளைச் சீர்குலைக்க இணைந்து பணியாற்றுவார்கள் என்றும் அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.

