ஐ.நா சிறப்பு அறிக்கையாளருக்கு வெளிவிவகார அமைச்சு பதிலளிக்கும்
22வது அரசியலமைப்பு திருத்த வரைவு தொடர்பாக, நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுநர்களின் சுதந்திரம் குறித்த, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்வைட் எழுப்பிய கவலைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்கும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக, அரசியலமைப்பைத் திருத்தும் முன்மொழிவு குறித்து, சிறிலங்கா அரசாங்கத்திற்கு அனுப்பிய கடிதத்தில், சட்டர்வைட் கவலை தெரிவித்திருந்தார்.
முன்மொழியப்பட்டதாகக் கூறப்படும் வடிவத்திலும் அதன் தாக்கங்களிலும், இந்தத் திருத்தம், “நீதிமன்றத்தின் சுதந்திரம் மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமை, அதிகாரப் பகிர்வு, தேவையற்ற செல்வாக்கு, அழுத்தம் அல்லது தலையீடு இல்லாமல் நீதிபதிகள் தங்கள் பணிகளைச் செய்யும் திறன், மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை உள்ளிட்ட அனைத்துலக மனித உரிமைகள் தரநிலைகளுக்கு இணங்காமல் இருக்கலாம்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
முன்மொழியப்பட்ட சீர்திருத்தம் குறித்த மேலதிக தகவல்களையும் அவர் கோரியிருந்தார்.
இந்த நிலையில், சிறிலங்கா அரசாங்கம், வெளிவிவகார அமைச்சின் மூலம், ஐ.நா சிறப்பு அறிக்கையாளருக்கு விரைவில் விரிவாக பதிலளிக்கும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
சேவைத் தேவைகள் மற்றும் தற்போது தேங்கியுள்ள வழக்குகளின் தேக்கத்தைத் தீர்ப்பதற்காகவே முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்றும், இது வெறும் ஒரு கட்டமைப்பு மாற்றம் மட்டுமே, எந்தவொரு குறிப்பிட்ட நபரையும் குறிவைத்ததல்ல என்றும் நாங்கள் சிறப்பு அறிக்கையாளரிடம் விளக்குவோம், என்றும் அவர் மேலும் கூறினார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் பதில், அனைத்தும் “அரசியலமைப்புச் சட்டத்திற்கும் ஜனநாயகக் கட்டமைப்பிற்கும் உட்பட்டு” செய்யப்படுகின்றன என்பதையும் தெளிவுபடுத்தும் என்று அவர் கூறினார்.
“நாங்கள் இதை யார் மீதும் திணிக்கவில்லை,” என்று கூறிய அமைச்சர் விஜித ஹேரத், பதில் விரைவில் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
