சிறிலங்காவில் முக்கிய சந்திப்புகளில் அமெரிக்க பசுபிக் கடற்படைத் தளபதி
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை தளபதி அட்மிரல் ஸ்டீபன் கோஹ்லர், நேற்று சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், பகிரப்பட்ட பாதுகாப்புச் சவால்கள், கடல்சார் பாதுகாப்பு, அனர்த்த நிவாரண திறன்களை மேம்படுத்தல், ஒத்துழைப்பை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக கடல்சார் கள விழிப்புணர்வை வலுப்படுத்துவது தொடர்பில் முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.
கலந்துரையாடலின் போது, சட்டவிரோத கடத்தல் உள்ளிட்ட சர்வதேச குற்றச் செயல்கள் மற்றும் பிற பாரம்பரியமற்ற சவால்களை எதிர்கொள்ளும் பொது உறுதிப்பாட்டை இருதரப்பும் வலியுறுத்தின.
விரிவான கடல் பரப்புப் புரிதலை (Domain Awareness) உருவாக்குவதற்காக மேம்பட்ட தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டது.
இரு தரப்பும் தற்போதைய பாதுகாப்பு மற்றும் பயிற்சி ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடியதுடன், கூட்டு பயிற்சிகள், பயிற்சி திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பு முன்முயற்சிகள் மூலம் ஈடுபாட்டை மேலும் மேம்படுத்தும் வழிகளையும் ஆராய்ந்தன.
அட்மிரல் கோஹ்லர், கடல் பாதுகாப்பு, பிராந்திய நிலைத்தன்மை மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய பொது இலக்குகளுக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
அதேவேளை, அமெரிக்காவின் பசுபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீபன் டி. கோஹ்லர் சிறிலங்காவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதேவேளை, அட்மிரல் கோஹ்லர் நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொடவையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரிகள் குழுவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டது.
இதனிடையே சிறிலங்கா விமானப்படைத் தளத்தில் நேற்று விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் பண்டு எதிரிசிங்கவையும் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து அட்மிரல் கோஹ்லர் கலந்துரையாடியுள்ளார்.



