மேலும்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கைவிடுமாறு அங்லிகன் ஆயர்கள் வலியுறுத்தல்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை  திரும்பப் பெற வேண்டும் என்றும் இலங்கை திருச்சபை (Church of Ceylon) ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஒரு கொடூரமான சட்டத்தின் மற்றொரு பதிப்பை, வேறொரு பெயரில், கொண்டு வருவதற்கான நடவடிக்கையால் தாங்கள் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக இலங்கை திருச்சபை ஆயர்கள்  அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவு,  2018 இன் பயங்கரவாத முறியடிப்பு சட்டம் (CTA) மற்றும் 2023 இன் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) போன்ற முந்தைய தோல்வியுற்ற முயற்சிகளுடன் நெருக்கமாக ஒத்திருக்கிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதிபர் அனுரகுமார திசாநாயக்க தனது தேர்தல் அறிக்கையில், பயங்கரவாத படைச்சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் ஒழிப்பதாகவும், நாடு முழுவதும் சிவில் உரிமைகளை உறுதி செய்வதாகவும் உறுதியளித்திருந்த நிலையில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது வாக்காளர்களுக்கு அளித்த அந்த உறுதிமொழியை தெளிவாக மீறுவதாகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஐந்து பத்தாண்டுகளாக நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம், பாதுகாப்பு நிறுவனங்களால்-  குறிப்பாக எதிர்ப்புக் குரல்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக,-  துஷ்பிரயோகம் மற்றும் தவறாகப் பயன்படுத்துவதற்காக பரவலாக விமர்சிக்கப்படுகிறது என்றும் ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சட்டம் தன்னிச்சையான கைதுகள், உரிய நடைமுறைகள் இல்லாமல் நீண்டகாலமாக தடுப்புக்காவல், சித்திரவதை மற்றும் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுதல் ஆகியவற்றை அனுமதித்துள்ளது, அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பரந்த அதிகாரங்களை வழங்கியுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்மொழியப்பட்டுள்ள சட்டவிரைவு, பயங்கரவாதத் தடைச் சட்டத்துடன் தொடர்புடைய அடக்குமுறையின் அதே வடிவங்களை மீண்டும் உருவாக்கும் அபாயம் உள்ளது என்றும் இலங்கை திருச்சபை  எச்சரித்துள்ளது.

குறித்த வரைவு, பயங்கரவாதம் தொடர்பாக பரந்த மற்றும் தெளிவற்ற வரையறைகள் உள்ளன, சந்தேக நபர்களை ஓராண்டு வரை குற்றச்சாட்டு இல்லாமல் தடுத்து வைக்க அனுமதிக்கிறது, மேலும் பாதுகாப்புப் படைகளுக்கு தனிநபர்களைத் தடுக்க, தேட மற்றும் கைது செய்ய, அத்துடன் தேடுதல் ஆணை இல்லாமல் வளாகத்திற்குள் நுழைய அதிகாரங்களை வழங்குகிறது என்றும் ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்மொழியப்பட்டுள்ள சட்டவரைவின்  கீழ் சிறிலங்கா அதிபருக்கு வழங்கப்பட்ட விரிவான அதிகாரங்கள் குறித்தும் இந்த அறிக்கையில், கவலை எழுப்பப்பட்டுள்ளது.

அமைப்புகளைத் தடை செய்வது, ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிப்பது போன்ற அதிகாரங்கள், சிறிலங்கா சூழலில் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *