டாவோஸ் மாநாட்டில் சிறிலங்கா சார்பில் பிரதமர் ஹரிணி பங்கேற்கிறார்
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டிற்கு, சிறிலங்கா குழுவுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் பிரதி நிதியமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா பிரதமர் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
இதன்போது, சிறிலங்காவில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்தும் அவர் கலந்துரையாடல்களை நடத்துவார்.
உலகத் தலைவர்களை ஒன்றிணைக்கும் டாவோஸ் மாநாடு எதிர்வரும், 19ஆம் திகதி தொடக்கம், 23 ஆம் திகதி வரை டாவோஸில் நடைபெறவுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்று குறுகிய காலமே ஆகியிருந்ததால், கடந்த ஆண்டு இந்தக் கூட்டத்தில் சிறிலங்காவின் தலைவர்கள் பங்கேற்கவில்லை என்றும், இந்த முறை பிரதமர் தலைமையிலான உயர் மட்டக் குழு அங்கு செல்லும் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதார மன்ற மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
