நம்பிக்கையில்லா பிரேரணையை தாமதிக்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு
கல்வி அமைச்சரான, சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிப்பதை தாமதப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் வயது வந்தோர் வலைத்தளத்திற்கான இணைய இணைப்பு சேர்க்கப்பட்டது தொடர்பான சர்ச்சை மற்றும் தற்போதைய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த கரிசனைகளின் அடிப்படையில், கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பாடங்களிலும் உள்ள சிக்கல்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்திக்குத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நம்பிக்கையில்லா பிரேரணையை தாமதப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்த தகவல்களையும் சேகரித்து நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடக்குவதற்கு கட்சிக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
அத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, பரந்த ஆதரவைப் பெறுவதற்காக மற்ற எதிர்க்கட்சிகள் மற்றும் நாடாளுமன்றக் குழுக்களுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
இதனால் நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிப்பது தாமதம் ஏற்பட்டுள்ளது.
