வெனிசுவேலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஜேவிபி கடும் கண்டனம்
வெனிசுவேலாவில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பையும், அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கடத்திச் செல்லப்பட்டதையும் ஜேவிபி கடுமையாக கண்டித்துள்ளது.
ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதான கூட்டணிக் கட்சியான ஜேவிபியின் நிறைவேற்றுக் குழுவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் இதுபற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட வெனிசுவேலா அரசுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பையும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கடத்தப்பட்டதையும், ஜேவிபி கடுமையாகக் கண்டிக்கிறது.
வேறு எந்த சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட அரசைப் போலவே, நாட்டின் எதிர்காலத்தையும் தலைவர்களையும் தீர்மானிக்கும் உரிமை வெனிசுவேலா மக்களிடமே உள்ளது.
சக்திவாய்ந்த நாடுகளுக்கு இந்தக் கொள்கையை மீறுவதற்கு உரிமை இல்லை.
நவீன சமூகமும் ஆட்சியும் நாகரிகமாக இருக்க வேண்டும். ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நாடுகளின் இறையாண்மை ஆகியவை உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள்.
இந்தக் கொள்கைகளை மீறி இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்புகள் மற்றும் படையெடுப்புகளை நியாயப்படுத்த முடியாது.
அந்த வகையில், வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் பலவந்தமான இராணுவ ஆக்கிரமிப்பை யாரும் அங்கீகரிக்கமாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
அதன்படி, வெனிசுவேலா மீதான அமெரிக்கா இராணுவ ஆக்கிரமிப்பை நாங்கள் கண்டிக்கிறோம்,
மேலும் வெனிசுலாவின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்காக நிற்கிறோம்,” என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
