மேலும்

சிறிதரனை பதவி விலக கோருகிறது தமிழ் அரசுக் கட்சி

அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து  உடனடியாக விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு,  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பணித்துள்ளது.

வவுனியா – குருமன்காட்டில் அமைந்துள்ள ‘தாயகம்’ அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புப் பேரவையில் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு ஆதரவாகத் தொடர்ச்சியாக சிறிதரன் வாக்களித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, கணக்காய்வாளர் நாயகம் நியமனத்துக்கான வாக்கெடுப்பில் இராணுவப் பின்னணி கொண்ட ஒருவருக்கு ஆதரவாக வாக்களித்தமை மற்றும் இழப்பீட்டிற்கான பணியகதிற்கு இராணுவத் தரப்பைச் சேர்ந்த இருவரைத் தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று, அவர்களுக்கு ஆதரவளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

மேலும், அவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு பணிப்பாளர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நியமனங்களிலும், அரசாங்கத்தின் விருப்பத்திற்கு இணங்க செயற்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுத்து அரச தலைவருக்கு கடிதம் எழுதும் போது, கட்சியைச் சேர்ந்த ஒருவரே அதற்கு முரணாகச் செயற்படுவது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், கட்சியினதும் அவரதும் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை அரசியலமைப்புப் பேரவையிலிருந்து விலகுமாறு பணிப்புரை வழங்குவதெனவும், தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த இந்தக் கூட்டத்தில், அரசியல் குழுவின் உறுப்பினர்களான சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம், இரா.சாணக்கியன், கலையரசன், துரைராஜசிங்கம் மற்றும் குகதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசியல்குழு உறுப்பினர்களான சி.சிறிதரன் மற்றும் குலநாயகம் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *