புத்தாண்டில் தமிழினம் தாண்ட வேண்டிய சவால்கள்
2009 ஆம் ஆண்டு மே மாதம் பேரூழியில் சிக்கிய ஈழத் தமிழினம், இப்போது மிகப்பெரிய, அபாயத்தில் சிக்கியிருக்கிறது.
போருக்குப் பின்னரான காலகட்டத்தில், தமிழ் இனத்தின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் பொறுப்பை ஏற்றவர்கள், அதனை சரியாக கையாளாமல் போனதால், அரசியல் போராட்டத்திற்காக இடப்பட்ட அத்திவாரம், ஆட்டம் கண்டது.
அதன் மீது, கட்டி எழுப்பப்பட்ட கோட்டை இப்போது தகர்ந்து போய் கிடக்கிறது.
தூர நோக்கற்ற அரசியல் தலைமைகள், சுயஇலாப போக்கு, உள்ளக முரண்பாடுகள்- எல்லாவற்றின் கலவையுமாக தமிழ் தேசிய அரசியல் இன்று மாற்றம் கண்டுள்ளது.
இது விமர்சனத்துக்குரிய- திருத்தப்பட வேண்டி தவறு.
இந்த தவறை திருத்திக் கொள்ள வேண்டியவர்கள், அதற்கு தயாராக இல்லாதிருக்கின்றனர்.
தமிழ்த் தேசிய இனத்தின் நலன்கருதி, இவ்வாறான விமர்சனங்களை தவிர்த்து விட்டு போனதன் விளைவு, இத்தகைய மெத்தனப் போக்கிற்கு வழிவிட்டிருக்கிறது.
ஜனநாயக அரசியலில், உண்மையும், நேர்மையும், விலை போகாமையும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு முக்கியமானவை.
இந்தப் பண்புகள் இன்று அருகிப் போய்விட்டன.
அதனைச் சுட்டிக்காட்ட முனையும் போது, எதிர்மறையாக விமர்சிக்கப்படுவது, உலக வழக்கமாகி விட்டது.
இந்தச் சூழலை சிங்கள பௌத்த தேசியவாதம் பயன்படுத்திக் கொண்டு, தமிழர் தாயகத்தில் காலூன்ற முனைகிறது.
முன்னர் காலூன்ற முனைந்து தோற்றுப் போனவர்கள் ஒதுங்கி நிற்க, தற்போதைய அரசாங்கம், தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, சமத்துவமான அரசு என்ற போர்வையில் ஒற்றையாட்சி அரசியலை முன்னெடுக்க முனைகிறது.
மாற்றம் என்ற மாயையை காண்பித்து, தமிழ் மக்களை தம் பக்கம் திருப்பி, அவர்களின் கைகளைக் கொண்டே கண்களை குத்திக் கொள்ள வைக்கின்ற சதித்திட்டம் அரங்கேற்றப்படுகிறது.
ஒட்டுமொத்த தமிழ் தலைமைகளும் தவறானவர்களாக சித்தரிக்கப்பட்டு, அசிங்கப்படுத்தப்படும் போக்கு அதிகரித்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் மலிந்திருந்த இந்தப் போக்கு இப்பொழுது பொது இடங்கள் வரை வந்திருக்கிறது.
இது ஒரு திட்டமிட்ட சூழ்ச்சி.
தமிழ்த் தேசிய இனத்தின் ஒட்டுமொத்த தலைமைகளையும் கேள்விக்கு உட்படுத்தி, கேவலப்படுத்தி, அரங்கில் இருந்து அகற்றுவது தான் இதன் இலக்கு.
இந்த இலக்கு நிறைவேற்றப்படுவதன் மூலம், முழுப் பயனையும் அடையப் போவது சிங்கள பௌத்த பேரினவாதம்.
அதற்காக, கூலிக்கு மாரடிக்கும் கும்பல்கள் களம் இறக்கப்பட்டிருக்கின்றன.
இது தமிழர்களின் இன்றைய சாபக்கேடு.
எங்கு திரும்பினாலும் அவசியமற்ற விவாதங்களும், விமர்சனங்களும் தான் மலிந்து போயிருக்கின்றன.
இன்றைய சூழலில் இது அவசியம் அல்ல.
ஆளை ஆள் விழுங்கி விடுவது போல, வெளிப்படுத்தப்படும் கருத்துக்களும், குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை -அபிலாசைகளை தீர்ப்பது தான் முதன்மையானது.
முக்கால் நூற்றாண்டாக இதற்கான போராட்டங்களே நடந்து கொண்டிருக்கின்றன.
அரசியல் வழியில் -ஆயுத வழியில்- மீண்டும் அரசியல் வழியில் அது தொடர்கிறது.
ஆனாலும் இந்த பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் தேசிய இனத்தின் இருப்பையும் -நிலத்தையும் -வாழ்வையும் நிலையற்ற தாக்குவதற்கு, பல்வேறு சூழ்ச்சிகளை செய்கிறது.
தமிழர்கள் ஒன்றுபட்டிருத்தல், ஒற்றுமையாக செயல்படுதல், சிங்களப் பேரினவாதத்தினால் சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது.
அது, தமிழர்களின் உரிமை கோரிக்கைகளை -நியாயமான அதிகாரங்களுக்கான கோரிக்கைகளை- அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான கோரிக்கைகளை- வலுப்படுத்தி விடும் என்ற அச்சம், சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு இருக்கிறது.
அதனால் தமிழர்களை பிளவுபடுத்தி பிரித்தாளுவதன் ஊடாக, அடிப்படை பிரச்சினைகளில் இருந்து, தமிழர்களின் கவனத்தை திசை திருப்புவதும், ஒட்டுமொத்த கோரிக்கைகளை பலவீனப்படுத்துவதும் தான், அவர்களின் இலக்கு.
அதற்காக அவர்கள் பல நடிகர்களை களமிறக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.
இது இன்று நேற்று அல்ல, நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் நயவஞ்சக நாடகம்.
காலம் காலமாக தமிழ்த் தேசிய இனத்தை அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதற்கும், உரிமைக்கான கோரிக்கைகளை நசுக்குவதற்கும், கையாளப்படும் தந்திரோபாயம் இது.
நீண்ட காலமாக இந்த தந்திரோபாயம் கையாளப்பட்டு வந்தாலும், தமிழ்த் தேசிய இனம் இந்த விடயத்தையிட்டு விழிப்படையவில்லை என்பதே உண்மை.
அதனால் தான் இன்று வரை, இவ்வாறான சூழ்ச்சிகளுக்குள் அகப்பட்டுக் கொள்ளும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
புதிய ஆண்டு பிறந்துள்ள இந்த சூழலில், முக்கியமான பல விடயங்களை நாம் மறந்து போய் இருக்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பிரச்சினை, செம்மணி புதைகுழி விவகாரம், எல்லாமே மறந்து விட்டது.
செம்மணி புதைகுழியைத் தோண்டுகின்ற போது, மட்டும் அது நினைவுக்கு வரும்.
கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை இப்பொழுது மெல்ல மெல்ல மறைந்து போய்க்கொண்டிருக்கிறது.
காணிகள் அபகரிப்பும் சிங்கள குடியேற்றங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இவை எல்லாம் மறக்கப்பட்டு விட்டது.
இப்பொழுது மக்களின் கவனத்தில் இருப்பது, தமிழ் அரசியல்வாதிகளின் சண்டைகள் தான்.
அவர்கள் ஒருவரை ஒருவர் வீழ்த்துவதற்காக பின்னுகின்ற சூழ்ச்சிகளும், தந்திரங்களும் தான், ஊடகங்கள் எங்கும் நிறைந்து இருக்கின்றன.
மாறி மாறி அதையே கிண்டி கிளறி பிரச்சினைகளை பூதாகரமாக்கி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள வைத்து, ஒருவரை ஒருவர் சேறடித்து நாறடித்து, தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் வெறுமை நிலையை உருவாக்க முனைந்து கொண்டிருக்கிறார்கள்.
இதன் ஒட்டுமொத்த விளைவாக,தமிழ் தேசிய அரசியல் நாற்றம் எடுக்கும் ஒன்றாக மாற்றப்படும்.
இதற்குள் யாரும் காலடி எடுத்து வைக்க வராமல் தடுக்கப்படுவார்கள்.
நயவஞ்சகர்களும் சூழ்ச்சிக்காரர்களும் அதிகார வெறி பிடித்தவர்களும் மாத்திரம், இதனை தங்குமிடமாகக் கொண்டிருப்பார்கள்.
நாகரீகமாக அரசியல் செய்ய முனைந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி விடுவார்கள்.
அந்த வெற்றிடத்தை கோடரிக்காம்புகளும், விலை போகும் அரசியல் வித்தை தெரிந்தவர்களும், நிரப்ப முனைவார்கள்.
அது ஒட்டுமொத்த தமிழ் தேசிய இனத்தை பலவீனப்படுத்தும்.
அதற்கான திட்டங்களே இப்போது அரங்கேற்றப்படுகின்றன.
ஆளுமைகளை அரங்கில் இருந்து அகற்றுவதற்கு முயற்சிக்கப்படுகிறது.
அவர்களுக்கு பதிலாக ஆளுமையற்றவர்களின் குரல்கள் ஓங்கி வருகின்றன.
சமூக ஊடகங்கள் இதற்கு கணிசமான பங்களிக்கின்றன.
ஒரு காலத்தில் வரமாக கருதப்பட்ட சமூக ஊடகங்கள், இன்று ஒட்டுமொத்த மனித குலத்தின் சாபமாக மாறிக் கொண்டிருக்கிறது.
அதன் விளைவுகளில் இருந்து தமிழ் தேசிய இனமும் தப்பிக்கப் போவதில்லை.
தமிழ்த் தேசிய இனத்தை ஒட்டுமொத்தமாக கருவறுக்க துடிக்கின்ற தரப்புகள், இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுகின்றன.
தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் இருந்து ஆளுமையான அரசியல் சக்திகளை அகற்றி விட்டு பொம்மைகளை அமர்த்துவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
அந்த முயற்சியில் கணிசமாக வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்பதை இத்தருணத்தில் மறுக்க முடியாது.
வரலாறு இப்பொழுது தமிழர்களுக்கு எதிராக எழுதப்படுகிறது.
சிங்கள பௌத்த பேரினவாதம் உண்மைகளை முற்றும் முழுதாக மறைத்து, தனக்கு சார்பான ஒரு வரலாற்றை எழுத முனைகிறது.
வரலாற்றை திசை மாற்றுவதற்கு, பலர் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ் தேசிய இனம் முன்னோக்கிச் செல்வதற்கான சரியான தடத்தை, இனம் காண தவறினால் கவனங்களை சிதைக்கும் சிதைக்க முனையும் சதிகளுக்குள் நிரந்தரமாக அகப்பட்டுக் கொள்ள நேரிடும்.
அத்தகைய ஒரு ஆபத்தில் தமிழினம் இன்று சிக்கிப் போயுள்ளது.
இந்த வரலாற்று நெருக்கடியில் இருந்து வெளியே வரத் தவறினால், ஈழத் தமிழரின் அரசியல் வரலாறு, குழி தோண்டி புதைக்கப்பட்ட விடும்.
அந்த ஆபத்தில் இருந்து வெளிவருவதற்கான புதிய நம்பிக்கைகளை, 2026 என்ற புதிய ஆண்டு கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த ஆண்டை வரவேற்போம்.
-புதினப்பலகை குழுமத்தினர்.
