தமிழரின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதே ராஜீவின் திட்டம் – மணிசங்கர் ஐயர்
சிறிலங்கா பிளவுபடுவதை தடுக்கவும் தமிழர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தவுமே ராஜீவ்காந்தி, இந்திய- சிறிலங்கா உடன்பாட்டை செய்து கொண்டார் என்று முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியின் நெருங்கிய நண்பரான மணிசங்கர் ஐயர், புதுடெல்லியில் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் ஜவஹர் சிர்கார் “இந்தியாவின் எதிர்காலத்திற்காக ராஜீவ் காந்தியின் பாரம்பரியத்தை மறு மதிப்பீடு செய்தல்” என்ற தலைப்பில் நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
1987 ஆம் ஆண்டு இந்தியா-சிறிலங்கா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதும், சிறிலங்காவில், இந்திய அமைதிப் படை நிறுத்தப்பட்டதும் சிறிலங்கா சிதறாமல் தடுப்பதற்காகவும், அங்குள்ள தமிழர் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்குமேயாகும்.
சிறிலங்கா பிளவுபடுவது தமிழ்நாட்டில் பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டிவிடும் என்று அவர் நம்பினார்.
சிறிலங்காவின் ஒருமைப்பாடு மற்றும் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதே ராஜீவ் காந்தியின் நோக்கமாக இருந்தது.
ராஜீவ் காந்தியின் சிறிலங்கா பற்றிய கொள்கையின் வீழ்ச்சிக்கு இந்திய நிர்வாகத்திற்குள் ஏற்பட்ட தோல்விகளே காரணம்.
இந்திய இராணுவமும் புலனாய்வு அமைப்புகளும் அவரை ஏமாற்றி விட்டன. திட்டமிடுதல் மற்றும் செயற்படுத்துவதில் தவறுகள் இடம்பெற்றன.
இந்திய அரசு அடிப்படை யதார்த்தங்களைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது. இந்திய அமைப்பின் சில பகுதிகள் களத்தை தவறாகப் புரிந்து கொண்டன.
மோசமான தலைமைத்துவமும், தமிழ்த் தலைவர்கள் பற்றிய தவறான மதிப்பீடும் நிலைமையை மோசமாக்கியது.
அதற்கு ராஜீவ்காந்தி பெரும் அரசியல் விலை கொடுத்தார்“ என்றும் மணிசங்கர் ஐயர் மேலும் தெரிவித்துள்ளார்.